Published : 18 Nov 2016 09:33 AM
Last Updated : 18 Nov 2016 09:33 AM

காலத்தின் வாசனை: ரயில் என்ன சாப்பிடும்?

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தேன். ரயில் பயணம். எதிர் இருக்கையில் ஜந்து வயதுக் குழந்தை தன் தந்தையிடம், ரயில் ஜன்னல் வழியே நகர்ந்த காட்சிகளைக் காட்டி என்னென்னவோ கேள்விகளைக் கேட்டபடி வந்தது. அப்பா படும் பாட்டை நான் ரசித்துக்கொண்டிருந்தேன்.

ஒருகட்டத்தில் ‘‘பேசாமல் உட்கார்!” என்று கையை ஓங்கினார்.

நான் பதறிப்போய், ‘‘பாவம் சார் குழந்தை! ஆர்வத்தில் ஏதோ கேட்கிறான். பதில் சொன்னால் போச்சு!” என்றேன்.

‘‘அப்படியா? நீங்களே பதில் சொல்லுங்கள்” என்று குழந்தையை என்னிடம் அனுப்பிவைத்தார்.

குழந்தையைத் தட்டிக் கொடுத்து, ‘‘பையா, நீ என்ன வேணும்னாலும் கேள்.. பதில் சொல்றேன்’’ என்றேன்.

சிறுவன் தன் அழகிய கண்களை உருட்டி விழித்து, “மாமா! ரயில் என்ன சாப்பிடும்?’’ என்று கேட்டான்.

அவன் நெற்றியில் முத்தமிட்டேன்.

ரயில் என்ன சாப்பிடும்? ஆஹா… என்ன கவித்துவமான கேள்வி!

ரயிலுக்கு உயிர் இருப்பதாக அல்லவா குழந்தை நம்புகிறது. உயிர் இல்லாவிட்டால் ரயில் இப்படிக் கூவுமா.. தடதடவென்று ஓடுமா?

இந்தக் கேள்வியில் கவித்துவம் மட்டுமல்ல, கடவுள் தத்துவமும் அல்லவா இருக்கிறது. இது புரியவில்லையே இந்த அப்பாவுக்கு!

பள்ளி ஆசிரியையான கவிஞர் இளம்பிறை என்னோடு பகிர்ந்துகொண்ட செய்தி:

‘பாப்பா! உங்க வீட்டுக்கு எப்படி வரணும்?’ என்று ஒண்ணாங்கிளாஸ் படிக்கும் சிறுமியிடம் கேட்டேன்.

‘எங்க வீட்டுக்கு மேல வானத்தில், மேகம் யானை மாதிரி துதிக்கையைத் தூக்கிக்கிட்டு நிக்கும் பாருங்க... அதுதான் டீச்சர் எங்க வீடு.. வந்துடுங்க’ என்றது குழந்தை.

இது போன்ற பதில்கள் குழந்தையின் பேதமையில் பிறப்பவை அல்ல; மேதமையில் பிறப்பவை!

தத்தாத்ரேயர் எனப்படும் அவதூதர் எழுதிய அவதூத கீதையில், தாம் ஞானம்பெறக் காரணமான 26 குருமார்களைக் குறிப்பிடுகிறார். நெருப்பு, சிலந்தி, தாதி உள்ளிட்ட அந்தப் பட்டியலில் குழந்தையும் இடம்பெறுகிறது.

நமக்குக் கிடைக்காத தரிசனங்கள் குழந்தை களுக்குக் கிடைத்துவிடுகின்றன.

ரோஜாப் பூக்களின் மீது மழை பெய்கிறது என்று சொன்னதற்கு, இல்லையில்லை, மழைதான் ரோஜா ரோஜாவாகப் பெய்கிறது என்று சொன்னது ஒரு குழந்தை.

நாம் வாழ்கிற காலத்தின் வாசனை குழந்தை களிடம்தான் இருக்கிறது. குழந்தையின் தலையை உச்சிமோந்து மகிழும் தாயைக் கேட்டுப்பாருங்கள்.. உண்மைதான் என்பாள்.

ஒருநாள் பூஜை அறையில் தியானத்தில் மூழ்கியிருந்தேன். என் முன்னால் பெரிய கூடை நிறையப் பொம்மைகளைக் கொட்டிவிட்டுக் கலகலவென்று சிரித்தான் என் பேரன்.

நான் கோபத்தில் கத்தினேன்.

‘‘நான் சாமி கும்பிடறது தெரியல உனக்கு?”

என் கோபத்தைக் கண்டுகொள்ளாமல், சிரித்துக் கொண்டே சொன்னான் பேரன்: ‘‘சாமி, கொஞ்ச நேரம் இந்தப் பொம்மைங்களோட விளையாடட்டுமே தாத்தா!”

ஸ்ரீ அரவிந்தரின் வாய்மொழி நினைவுக்கு வந்தது..

‘கடவுளை ஒரு கடுமையான, கண்ணியம் மிக்க அரசராகவும், மதிப்புமிக்க நீதிபதியாகவும், நகைச்சுவை உணர்வே சிறிதும் இல்லாதவராகவும் உருவகப்படுத்தி, அக்கருத்தை மனித குலத்தின்மீது சுமத்திவிட்டனர் யூதர்.

ஆனால், கண்ணனைக் கண்டுள்ள நாம், விளை யாட்டை விரும்பும் ஒரு சிறுவனாகவும் குறும்புத் தனமும் உவகைச் சிரிப்பும் நிறைந்ததொரு குழந்தையாகவுமே கடவுளைக் காண்கிறோம்!

குழந்தையின் கைப்பிடித்துப் பேசியபடி நடக்கும் போதெல்லாம், சில சமயம் நான் பிடித்திருப்பது குழந்தையின் கையா, கடவுளின் கையா என்று சந்தேகம் வந்துவிடுகிறது!

அரவிந்தர் புன்னகைக்கிறார்!

- தஞ்சாவூர்க் கவிராயர்,

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x