சற்றே அகட்டி நில்லுங்கள்..

சற்றே அகட்டி நில்லுங்கள்..
Updated on
1 min read

புலர்கையில்

வந்து நின்ற பிர்லாதான்

இந்நீள் வரிசையின் முதல் நபர்

என்ன பிரயோஜனம்

ஆதார் இல்லையெனில் இப்படி தலை தொங்கத்

திரும்பத்தான் வேண்டும்

பசிக்கிறக்கம் காத்திருப்பின் வலியில் கண்கள் பனிக்க மீளும்வரை

பத்தாவது ஆளாய் நிற்கும் டாடா ஆறுதலாய்ப் பற்றுகையில்

வரிசைக் குலைவுக்குச் சினக்கும் அந்தக் காவலன்

மூங்கில் கழியில் நேர் செய்கிறான்

கறுப்பு நிறத்தில் மினுங்கும் சகல பண முதலைகளையும்

கவுன்ட்டரிலிருந்து

நூறு மீட்டர் தொலைவிலிருக்கும் நான்

எனக்கு முன்னால் நிற்கும் முகேஷிடம்

அனில் பற்றிக் கேட்டிருக்கக் கூடாது

பால்யத்தில் சேமித்த மண் உண்டியலை உடைத்து

கொழித்துக்கொண்டிருப்பவனைப் பற்றி

ஒரு தேநீருக்கான சில்லறைக்கும் வக்கற்று நிற்கும் தன்னிடம்

பேச வேண்டாமெனத் திரும்பிக்கொள்கிறார்

இந்த வரிசையில் அதானி இல்லையேயெனும்

உங்கள் கேள்வி உள்நோக்கம் கொண்டது

தன்னிடமிருந்த ஒரேயொரு ஐநூறையும்

பெட்ரோலுக்கு முறித்துக்கொண்ட ஒருவர்

ஏன் வந்து நிற்க வேண்டும்?

தேசபக்தர் நீங்கள்

சந்தேகிக்காதீர்... சந்தேகிக்கவும் அனுமதிக்காதீர்

நாம் வருந்தி எழுதிக்கொண்டிருக்கும்

இந்த தேசபக்தப் பரீட்சையின்

கேள்வித்தாள் சிலருக்கு கசியவிடப்பட்டது குறித்தும்

எறும்பு சாக்பீஸ் கொண்டு

டைனோசர்களைக் கட்டம்கட்ட முடியுமாவென்றும்

கறுப்பை ஒழிக்க நட்சத்திரக் கொடியுடன்

புதிய எஜமானன் அவதரித்த அதே நாளிலா

ஆச்சர்யம்தான் போங்கள் என்றும்

பெருகும் வாக்கியங்களிலிருந்து சற்றே விலகியிருங்கள்

ஊழலற்ற தேசத்தை ஈனும் மஹா யாகமிது

உங்கள் பங்குக்கு ஒரு தேக்கரண்டி நெய்

அவ்வளவே!

வாஸ்தவம்தான்

நகராத வரிசையொன்றின் வால் பகுதியில் நிற்கும்

கால்கள் கடுக்கத்தான் செய்யும்

நவ பாரதப் பிரசவமல்லவா

பற்களைக் கிட்டித்துக்கொள்ளுங்கள்

முடிந்தவரை கால்களை அகட்டி நில்லுங்கள்

இதோ.. இதோ..

உங்கள் கால்களுக்கிடையே

சத்தியத்தின் கவிச்சியொடு

ஊழல் பிசுபிசுப்பற்ற பால பாரதம்

ஜனிக்கத்தான் போகிறது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in