

வங்காள மற்றும் ஆங்கில இலக்கியவாதி
உலகப் புகழ்பெற்ற வங்கப் படைப்பாளரும் ஆங்கில எழுத்தாளருமான நீரத் சந்திர சவுத்ரி (Nirad Chandra Chaudhuri) பிறந்த தினம் இன்று (நவம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இன்றைய வங்க தேசத்தில் கிஷோர்கஞ்ச் என்ற ஊரில் பிறந்தவர் (1897). தந்தை வழக்கறிஞர். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் கல்கத்தாவில் ரிப்பன் கல்லூரியில் பயின்றார். ஆங்கிலம், வங்காளம், சமஸ்கிருதம் மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
* கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் சிறப்புப் பாடமாக வரலாற்றைப் பயின்று பட்டம் பெற்றார். எழுத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக பத்திரிகைத் துறையில் அடியெடுத்து வைத்தார்.
* இந்திய வரலாறு, கலாச்சாரம் குறித்து ஆங்கிலத்திலும் வங்க மொழியிலும் நிறைய எழுதினார். ‘மாடர்ன் ரெவ்யூ’ என்ற பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார்
* 1941-ல் டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் அரசியல் விமர்சகராக நியமிக்கப்பட்டார். நூல்கள் எழுதவும் பத்திரிகைகளில் பணியாற்றுவதற்காகவும் டெல்லியில் குடியேறினார். இவரது தாய்மொழி வங்காளம். ஆனால் இவரது பெரும்பாலான படைப்புகள் ஆங்கிலத்திலேயே இருந்தன.
* இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற பல முக்கிய நிகழ்வுகளைக் குறித்தும் தன் கருத்துகளை எழுதினார். வங்காளிகளின் வாழ்க்கை முறைகளில் காணப்பட்ட முரண்பாடுகளை விமர்சனம் செய்தும் எழுதினார்.
இவரது வங்க மொழிப் படைப்புகளில் சமஸ்கிருதம் கலந்த வங்க மொழியையே பயன்படுத்துவார். ‘பங்காளி ஜிபேன் ரமணி’, ‘ஆத்மகாதி பங்காளி’, ‘அமர் டிபோட்டர் சம்பத்தி’ உள்ளிட்ட வங்க மொழி நூல்களைப் படைத்துள்ளார்.
* 1951-ல் வெளிவந்த ‘தி ஆட்டோபயாகிரபி ஆஃப் ஆன் அன்நோன் இண்டியன்’ என்ற இவரது முதலாவது நூலில் இடம்பெற்ற தகவல்களால் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கோபத்துக்கு ஆளானார். ‘தி பேஸேஜ்டு இங்க்லேன்ட்’, ‘தி கான்டினண்ட் ஆஃப் சர்கிள்’,
* ‘தி இன்டலெக்சுவல் இன் இண்டியா’, ‘ஹின்டுயிஸம்: ஏ ரிலிஜியன் டு லிவ் பை’ உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
* ‘அசலான சிந்தனையாளர், தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பவர், சர்வதேசவாதி, அனைத்துக் கலாச்சாரங்களின் நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளும் அதே நேரத்தில் தனது சொந்த கலாச்சாரத்தையும் கைவிடாதவர்’ என்று இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் கவுன்டி கவுன்சில் அமைப்பு இவரைப் பற்றி இவரது மரணத்துக்குப் பிறகு நினைவுகூர்ந்தது.
* இந்தியச் சூழல் குறித்து இவரது படைப்புகளில் உள்ள விமர்சன நோக்கு, ஐரோப்பியக் கலாச்சார ஆதரவு நிலைப்பாடு ஆகியவற்றால் இந்தியாவில் இவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். எனினும் பின்னாளில், இவரது படைப்புகள் இந்தியாவில் அங்கீகாரம் பெற்றன. 1975-ல் இவரது இலக்கியப் பங்களிப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது, அமெரிக்காவின் ‘டஃப் கூப்பர்’ நினைவு விருது (இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர்) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
* 1970-ல் இங்கிலாந்து சென்ற இவர், அங்கே ஆக்ஸ்போர்ட் நகரில் இறுதிவரை வசித்து வந்தார். தனது 99-வது வயது நிறைவு பெறும் தறுவாயில் ‘த்ரீ ஹார்ஸ்மேன் ஆஃப் தி நியூ எபோகைலிப்ஸ்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இறுதிவரை ஆங்கில, வங்காள இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய நீரத் சந்திர சவுத்ரி 1999-ம் ஆண்டு தனது 102-வது வயதில் மறைந்தார்.