

துவாபர யுகத்தில் ஒரு பெண், சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, ஆட்சி உரிமை, அதிகாரப் போட்டி, ஆண்களின் அகங்காரம் இவற்றுக்கிடையே பகடைக்காயாக்கப்பட்ட புராண வரலாற்றைக் கொண்ட திரௌபதியின் கதையை, கலியுகத்தில் நாடகமாக்கத் துணிந்ததற்கு தாரிணி கோமலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த நாடகத்துக்கு மேடைக் கதை வடிவம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை தாரிணி ஏற்றிருந்தார்.
பெண்கள் இந்த அளவுக்குத்தான் உணவை உட்கொள்ள வேண்டும். இன்னென்ன உடைகளைத்தான் அணிய வேண்டும். சத்தமாக சிரிக்கக் கூடாது என்றெல்லாம் இன்றைக்கும் பெண்களின் எல்லைகளை தன் சட்டகத்துக்குள்தான் வைத்திருக்கிறது ஆணாதிக்கச் சமூகம். யுகங்கள் மாறினாலும் பெண்களின் நிலை இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்பதை திரௌபதி என்னும் இதிகாச பாத்திரத்தின் துணைகொண்டு புரியவைக்கிறார் தாரிணி கோமல்.
கருணை, கோபம், பயம், ஆச்சரியம், கேலி, வெகுளி என பல வகையான உணர்ச்சிகளையும் தன்னுடைய கண்களின் மூலமாகவே இயல்பாக வெளிப்படுத்தினார் திரௌபதியாக நடித்த கிருத்திகா. நடிப்போடு அவருக்கு இருந்த நடனப் பயிற்சியும் இந்தச் சிறப்புக்குக் காரணமாக இருக்கலாம். துரியோதனனாக நடித்த விக்னேஷ் செல்லப்பனிடம் மிகை நடிப்பு வெளிப்பட்டாலும் ரசிகர்களின் கைதட்டலையும் அது பெற்றுத் தந்தது.
திரௌபதி என்னும் பெண்ணின் பிறப்புக்கான காரணம், தத்துவ விசாரமாக நாடகத்தில் எடுத்தாளப்பட்டிருப்பது நாடகத்தின் தனித்தன்மையாக அமைந்தது.
நாடகத்துக்காக இரு பாடல்களையும், கவித்துவமான வசனத்தையும் எஸ்.சதீஷ்குமார் எழுதியிருக்கிறார். மகாகவி பாரதியின் பாடல்களுக்கு பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி நிறைவான இசையை அளித்திருந்தார். `திரௌபதி' என்று தொடங்கும் நாடகத்தின் தொடக்கப் பாடலிலும் `வேள்வித் தீயில் பிறந்தவளே' என்னும் பாடலிலும் காத்திரமான குரலுக்கு ஒத்திசைவாக இசையும் அமைந்திருந்தது.
நாடகத்தின் பல காட்சிகளோடு முன்பதிவு செய்யப்பட்ட இசை பொருந்தியது. `வழிநெடுக' என்னும் மகாகவியின் பாடலை சந்திரஜோதி என்னும் அபூர்வ ராகத்தில் கேட்க வைத்திருந்தார் ராஜ்குமார் பாரதி.
புராணப் படங்களுக்கே உரிய காட்சி பிரம்மாண்டத்தை மேடை நிர்வாகம் செய்த கலைஞர்கள் திறம்பட செய்திருந்தனர். இந்தடிஜிட்டல் உலகத்திலும் மேடையில் அரங்கேறிய தந்திரக் காட்சிகளை ரசிக்க முடிந்தது.
திரௌபதி பாத்திரத்தை பிரதானமாக முன்னிறுத்தும் நாடகத்தில் அவருக்கான பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. சுயம்வரத்தில் கர்ணன் பங்கேற்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் திரௌபதியின் தைரியம், துணிவு, சாதுர்யம் அதன் பிறகு எங்குமே வெளிப்படாமல் போனது பலவீனம். சூதாட்டக் காட்சியின் நீளத்தைக் குறைத்து, திரௌபதியின் மாண்பை விளக்கும் சில காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.
(‘திரௌபதி’ நாடகம் இம்மாதம் 23-ம் தேதி நாரதகான சபாவில் மீண்டும் அரங்கேறுகிறது).