Last Updated : 15 Sep, 2022 03:14 PM

1  

Published : 15 Sep 2022 03:14 PM
Last Updated : 15 Sep 2022 03:14 PM

PS for 2K கிட்ஸ் - 12 | பொன்னியின் செல்வன் - போர்க்கள வித்தகர்களின் தனித்துவங்கள்!

ஆ.மதுமிதா

பொன்னியின் செல்வனின் கதையே சுந்தர சோழருக்கு பிறகு சோழ குலத்திற்கு எதிரே நடக்கும் சதிகளையும் மீறி, யார் யார் எப்படி சிங்காதனம் ஏறப்போகிறார் என்பதுதான். அதை எவ்வளவு சுவாரசியமாகவும், அழகியலோடும் கூற முடியுமோ அப்படி கூறியிருப்பார் அமரர் கல்கி. இப்படி சிம்மாசனத்திற்கான போட்டி இருக்கையில் கதையில் போர் இல்லாமல் இருக்குமா? ட்ரெய்லரின் முதல் சில வினாடிகளும் கடைசி ஒரு நிமிடமும் வாளும் வேலும் பறக்க போர்க் காட்சிகளை நாம் காணலாம் கதையில் போர்க்களக் காட்சிகள் விவரிக்கப்படவில்லை என்றாலும், படத்தில் அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் போர் புரிதலில் நம் கதைமாந்தர்கள் எவரும் சளைத்தவரில்லை என்பது நாம் அறிந்ததே.

போர் - ரத்தம், வெறி, கோபம், ஆதித்த கரிகாலன். பொன்னியின் செல்வன் புதினத்தில் அனைத்து ஆண் கதாபாத்திரங்களுமே போர்க்களத்தில் மிகப்பெரிய வீரர்களாகவே காட்டப்பட்டிருப்பர். ஆனால், ஆதித்த கரிகாலன் - போர், இவ்விரண்டுக்கும் ஏதோ ஒரு மானசீக தொடர்பிருப்பதை நாம் உணர முடியும். சிறுவயதில் இருந்தே போர் புரிவதில் ஆர்வம் கொண்டவராகவே திகழ்பவர். தன் சோழ நாட்டின் மீது கொண்ட அன்பினாலும் எதிரிகள் மேல் கொண்ட பகையினாலுமே போர் புரிவதில் ஆர்வமாய் இருந்த இவர், வெறி பிடித்து போர் புரிய காரணம் நந்தினியே.

நந்தினிபால் இருந்த காதலையும், அவள் நேசித்ததாக கூறிய வீரபாண்டியனை காலில் விழுந்து கெஞ்சியும் கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை மறப்பதற்காகவுமே வெறித்தனமாக போரில் ஈடுபடத் தொடங்குகிறார். பொன்னியின் செல்வன் பட ட்ரெய்லரில் கரிகாலர் வாளோடும் வேலோடும் போர்க்களத்திலும் இல்லாமல் இருக்கும் காட்சிகள் மிக சொச்சமே. இதிலிருந்தே, கரிகாலர் போர் புரிவதின் மேல் வைத்திருந்த காதலை நாம் புரிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் இப்படி மூர்க்கத்தனமாக போரிடும் குணம் கொண்டவர் என்பதால் நம் பட்டத்து இளவரசரை கொடூரமானவர் என்று எண்ணி விட வேண்டாம். ‘ஸ்கெட்ச்’ படத்தில் தமன்னா சொல்வது போல 'வெளிய ஹார்டு, உள்ளே ஸாஃப்டு' ஆன கேரக்டர்தான் நம் கரிகாலர். போர் அறம், கலை மீது ஆர்வம், பெண்களின் மேலான மரியாதை என்று எதிலும் குறைந்தவரில்லை ஆதித்த கரிகாலன். இச்சமயத்தில் கரிகாலருடன் தோளோடு தோள் நின்று போர் புரிந்த நண்பர்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டாமா?

முதலில் ஆதித்த கரிகாலனின் நண்பன், ஒற்றன், நம்பிக்கைக்குரியவன், ராஷ்ட்ரகூடர்களுக்கு எதிரான போரில் கரிகாலருடன் சேர்ந்து போர் புரிந்தவர் என பல பெருமைகளுக்குரிய வந்தியத்தேவன். இவரின் வீரத்தையும் விவேகத்தையும் பற்றி நாம் அறியாததில்லை. இன்னொரு நண்பர் பல்லவன் பார்த்திபேந்திரன் ஆவார். கரிகாலனின் நண்பர்களான இவ்விருவருக்கும் வேற்றுமைகள் பல இருப்பினும், வலுச்சண்டைக்கு போவதில் இருவருக்கும் ஒற்றுமையுண்டு.

நந்தினியின் மேலான காதலை பற்றியும் வீரபாண்டியனின் குடிசையில் நடந்த சம்பவம் குறித்தும் பார்த்திபேந்திரனிடம் மட்டுமே கரிகாலர் மனம் திறக்கிறார். தன் நண்பனை இவ்வளவு மனக்கசப்பிற்கு உள்ளாக்கிய நந்தினியை இளவரசர் ஆணையிட்டால் உடனே கொன்றுவிடுவதாக சபதமெடுப்பதும், அவர் வந்தியத்தேவனிடம் நட்பு கொள்வது

பிடிக்காமல் அவனை கடிந்துகொள்வதும் என நல்ல நண்பனாகவே இருப்பான் பார்த்திபேந்திரன். ஆனால், நந்தினியின் அழகில் மயங்கி அவளுக்காக எதுவேன்றாலும் செய்யத் துணிகிறார். நந்தினியின் வலையில் விழுந்த பல வீரர்களுள் நம் பல்லவ வீரரும் ஒருவர். ஆதித்த கரிகாலருடன் சேர்ந்து வீரபாண்டியனை எதிர்த்து போர் புரிந்து அதில் வெற்றியும் கண்டனர்.

கரிகாலரும் பார்த்திபேந்திரனும் போலவே தான் வந்தியத்தேவனும் கந்தமாறனும். சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்களாக வளர்ந்து வந்து, வடபெண்ணைக்கரைப் பாசறையில் ஒன்றாக எல்லைக் காவல் புரிந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் அவசர புத்தியும் அசட்டுத்தனமும் இருப்பதாக பலராலும் கதையில் கூறபட்டிருந்தாலும், வாணர் குல வீரனின் இந்த நண்பன் ஒரு சுத்த வீரனே. நண்பனின் மேலும் நாட்டின் மேலும் போர் புரிவதின் மேலும் அளவுக்கடந்த வாஞ்சை கொண்டவர். இவரையும் பழுவூர் ராணியான நந்தினி தேவி விட்டுவைக்கவில்லை. வந்தியத்தேவன் தான் தன்னை முதுகில் குத்தி கொலை செய்ய முயற்சித்தான் என்று நம்பவைத்து, தன் நண்பனுக்கு எதிராகவே சதி செய்ய வைத்தாள். பார்த்திபேந்திரனும் கந்தமாறனும் நந்தினியால் கொண்ட மாற்றத்தினைக் கண்டு 'இப்படி ஒரு பெண்ணா !' என்று பிரம்மித்து போனாலும் அல்லது 'இப்படியும் ஒரு பெண்ணா?' என்று, ஆசூயைக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க நம் கதைத் தலைவனான அருள்மொழிவர்மரின் போர் புகழையும் நாம் பார்த்து விடுவோம். ராஜ்யம் ஆளும் ஆசை இல்லை, பெண்கள் அனைவரையும் தாய் போல பாவிப்பவர், தமக்கை சொல்லுக்கு மறு வார்த்தை சொல்லாதவர், எதுவாகினும் பெரியோர் ஆலோசனையைக் கேட்டு முடிவெடுப்பவர், கலை மற்றும் தூர தேசங்களுக்கு கப்பல் பயணங்கள் செல்வதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கும் இரத்தம் தெறிக்க போரிடுவதற்கும் சப்மந்தமே இல்லையே என்று நீங்கள் நினைத்தால் அது தவறே.

போர் அறம் அறிந்து போர் புரிபவர் நம் அருள்மொழி. போர் பகைவர்களோடு தானே தவிர மக்களுடன் அல்ல என்பதை அறிந்து, இலங்கை போரில் அந்நாட்டு மக்களுக்கு எவ்வகையிலும் இடையூறு வராத வகையில் போரிட்டார். அப்போர்களில் வெற்றியும் கண்டார். போர் களத்தில் மட்டும் இவர் வீரர் இல்லை. நம் ஹீரோ வந்தியத்தேவனுடனான முதல் சந்திப்பிலே அவனை புரட்டி எடுப்பதாக இருக்கட்டும் கொடும்பாளூர் வேளாரை ஏமாற்றி தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசிப்பதாக இருக்கட்டும். தன் கத்தியையும் புத்தியையும் தேவையான இடங்களில் பயன்படுத்தி ஈடு இணையற்ற வீரராகவே திகழ்பவர் பொன்னியின் செல்வர்.

கதையில் பல போர்களங்களும் யுக்திகளும் கண்ட வீரர்கள் உண்டு. அவர்களில் பெரிய பழுவேட்டரையரும் ஒருவர். ஆனால், எவரும் பயன்படுத்தியிராத யுக்தியை கொண்டு நந்தினி, பழுவேட்டரையர் முதலியோரை மயக்கிவைத்து சோழர் குலத்தை பழிவாங்கவிருந்தாள். இளவயதான பின் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டாரே என பலராலும் கிண்டலடிக்கப்பட்டாலும், பெரிய பழுவேட்டரையர் கண்டு இளைஞர்கள் முதல் முதியவர் வரை ஒரு பயமும் மரியாதையும் இருக்கத்தான் செய்தது. அவர் காலத்தில் அவருக்கு இணையான வீரரே சோழ நாட்டில் இல்லை என்றிருந்தவர், பல போர்களில் ஈடுபட்டு உடம்பில் 63 போர் விழுப்புண்ணுடையவரும் ஆவார்.

இதேபோல் அண்ணனுக்கு தம்பி சளைத்தவராய் இருப்பாரா? தஞ்சை கோட்டை தளபதியான சின்ன பழுவேட்டரையர் தன் படையில் நாடெங்கும் உள்ள துடிப்பான வீர வாலிபர்களை சேர்த்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம். பெருமிதத்தில் யாருக்கும் பின்வாங்கதவனான வாதியந்தேவன் கூடச் சிறு அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்னப் பழுவேட்டரையரை அணுகுவான். அப்படி மதிப்பு மரியாதைக்கறியவர்கள் தான் பழுவூர் சகோதரர்கள்.

சரி எவ்வளவு நேரம்தான் சோழ நாட்டின் பெருமையையே பாடிக்கொண்டிருக்க, கொஞ்சம் பாண்டியர்களை பற்றியும் பார்போம். சோழர் - பாண்டியர் போரில் தோல்வியுற்று வீரபாண்டியன் ஓடி ஒளிந்திருந்தான். ஆனால், அவன் மரணத்திற்கு பழிவாங்க சபதமெடுத்திருந்த பாண்டிய ஆபத்துதவிகள் எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்கவில்லை. ரவிதாசன் (கிஷோர் ) சோண் சாம்பவள் (ரியாஸ் கான்). இடும்பன் காரி போன்ற கதாபாத்திரங்கள் சோழ நாட்டினருக்குதான் வில்லன்கள், பாண்டிய நாடை சேர்ந்தவர்களுக்கு ஹீரோக்கள்தான். எடுத்த சபதத்தை நிறைவேற்றி (கரிகாலன் யாரால் கொலை செய்யபட்டாலும் இவர்கள் சபதம் நிறைவேறி விட்டதுதானே) ஒருவிதத்தில் ஹீரோ ஆகிவிட்டனர். வந்தியத்தேவனும் ரவிதாசனும் சண்டையிடும் காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்க ரவிதாசனும் ஒரு காரணம்.

கதையில் இப்படி சண்டை, போர், சூழ்ச்சி, சதி, ஆண்கள் பற்றியே பெருமை என்றே இருக்குமோ என்று நீங்கள் டயர்ட் ஆகும் கட்டமாக கூட இது இருக்கலாம். அதனால், கதையில் விவரிக்கப்பட்டுள்ள அழகியல் ததும்பும் சோழ நாட்டில் வாழும் நம் கதைமாந்தர்களின் கலைத் திறன் பற்றியும், அதற்கு அழகு சேர்க்கும் பெண் கதைமாந்தர்கள் பற்றியும் இனி காண்போம்.

| தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 11 | பொன்னியின் செல்வன் - கதைமாந்தர்களிடம் ஒளிந்து கிடக்கும் பயங்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x