குடும்ப அட்டை நடைமுறைகள் அறிவோம்

குடும்ப அட்டை நடைமுறைகள் அறிவோம்
Updated on
1 min read

குடும்ப அட்டை தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் ராம சரஸ்வதி.

#குடும்ப அட்டை எப்படிப் பெறுவது?

ஒருவருக்குப் புதியதாக குடும்ப அட்டை பெற வேண்டும் என்றால் அந்தந்த மாநகர மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். சென்னை போன்ற மாநகரப் பகுதிகளில் 16 மண்டல அலுவலகங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். புதிய குடும்ப அட்டை பெற வீட்டின் முகவரி கொண்ட மின் கட்டண அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், திருமண அழைப்பிதழ் அல்லது திருமணத்தைப் பதிவு செய்து இருந்தால் பதிவாளர் அலுவலகச் சான்றிதழ், குழந்தை இருப்பின் பிறப்பு சான்றிதழ் போன்ற ஆதாரங்களைக் கொண்டு புதிய குடும்ப அட்டையைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த நாளில் இருந்து மண்டல மற்றும் தாலுகா அலுவலகங்கள் 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டையை வழங்க வேண்டும். இதற்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம்.

#ஒருவர் வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய நேர்ந்தால் குடும்ப அட்டையில் எப்படி முகவரி மாற்றுவது?

உதாரணமாக, மதுரையில் இருக்கும் ஒருவர் சென்னைக்கு இடமாற்றம் பெற்று வந்தால், முதலில் அவர்கள் மதுரையில் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் தாலுகா அலுவலகத்தில் தங்களுடைய குடும்ப அட்டையை ஒப்படைக்க வேண்டும். அந்த அலுவலகத்தில் தரப்படும் ஒப்படைப்பு சான்றிதழை (surrender certificate) சென்னையில் குடியேறும் பகுதியில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து மாற்று குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

#ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி குடும்ப அட்டை பெறுவது?

ஆதரவற்ற இல்லத்தில் வாழ்ந்து திருமணம் செய்து கொண்ட இருவர் வாடகை வீட்டில் தங்கி இருந்தால் வீட்டு உரிமையாளரிடம் மின்கட்டண அட்டை பெற்று அல்லது திருமணச் சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

#குடும்ப அட்டை கணவர் அல்லது தந்தை பெயரில்தான் இருக்க வேண்டுமா?

அப்படி எல்லாம் கிடையாது. குடும்ப அட்டை குடும்பத் தலைவி அல்லது தலைவர் பெயரிலும் இருக்கலாம்.

#தத்து எடுக்கும் குழந்தையின் பெயரை ரேசன் அட்டையில் சேர்ப்பது எப்படி?

சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலகங்களில், தத்து எடுத்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கொடுத்துப் பெயர் சேர்க்கலாம். அதுபோன்று வேறு ஒருவரின் பெயர் சேர்க்க வேண்டும் என்றால் அவர்களின் முக்கிய சான்றிதழ் கொண்டு ரேசன் அட்டையில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in