

ஒரிய நாடகாசிரியர், சமூக சேவகர்
ஒடிஷாவின் புகழ்பெற்ற சமூக சேவகரும் இலக்கிய மேதையுமான கோதாவரீஷ் மிஸ்ரா (Godavarish Mishra) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஒடிஷா மாநிலம் பூரி மாவட்டத்தில் பாணாபூர் என்ற இடத்தில் (1886) பிறந்தார். சொந்த ஊரிலும் பூரியிலும் பள்ளிக்கல்வியை முடித்தவர், கல்கத்தா கல்லூரியில் பயின்று தத்துவவியலில் இளநிலைப் பட்டம், பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
* அறிவுக்கூர்மை மிக்கவர். சிறுவயது முதலே இலக்கிய ஆர்வம், தேசபக்தி கொண்டிருந்தார். சமூகத்தில் நிலவிய தவறான சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். விடுதலைப் போராட்ட வீரர் கோபபந்துதாஸ் தலைமையிலான சிந்தனைக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார்.
* இங்கிலாந்து, அமெரிக்காவில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு தேடிவந்தது. இவருக்கு துணை கலெக்டர் பதவி வழங்கவும் பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. எந்த அரசாங்க வேலையையும் ஏற்கக் கூடாது என்று இவரும் நீலகாந்த தாஸ், கிருபாசிந்து மிஸ்ரா ஆகிய சகாக்கள் கூட்டாக முடிவெடுத்தனர்.
* கோபபந்துதாஸ் தொடங்கிய சத்யவாதி பள்ளியில் ரூ.30 மாத சம்பளத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பல நூல்களைப் படித்தார். எழுதுவதில் அதிக ஆர்வமும் திறனும் கொண்டிருந்தவர், ஏராளமான நாடகங்கள், கவிதைகளைப் படைத்தார். சிறந்த ஒரிய நாடகாசிரியராகத் திகழ்ந்தார்.
* பூரி மாவட்டம் வேகுல்வனா பகுதியில் சகாக்களுடன் இணைந்து ஒரு திறந்தவெளிப் பள்ளியைத் தொடங்கினார். இது நாடு முழுவதும் பிரபலமடைந்தது. அரசியல், சமூகப் பணி என்று மும்முரமாக இருந்தாலும், தனக்குப் பிடித்தமான இலக்கியப் பணிக்கும் நேரம் ஒதுக்குவார்.
* பள்ளி நாட்களில் தேசபக்தியை மையமாக வைத்து புருஷோத்தம் தேவ், முகுந்த தேவ் என்ற நாடகங்களை எழுதினார். நாடக பாணியை நவீனப்படுத்தினார். நேரடியாக கதையைத் தொடங்கிவிடும் மேற்கத்திய பாணியை அறிமுகம் செய்தார். இவரது படைப்புகளில் தேசபக்தி, சாகசம், அர்ப்பணிப்பு உணர்வு, நட்பு, கருணை ஆகிய பண்புகள் அதிகம் பிரதிபலிக்கும்.
* காந்திஜியின் ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஒடிஷாவில் செயல்படுத்த முழு முயற்சி மேற்கொண்டார். அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். 1927-ல் காந்திஜி ஒடிஷா வந்தபோது, இவரது வீட்டில் 2 நாள் தங்கியிருந்தார்.
* தீவிரமாகப் பாடுபட்டு, உத்கல் பல்கலைக்கழகம் தொடங்கச் செய்தார். சமூக அநீதி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஒரிய நாடகத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதில் சாதாரண மக்களையும் பங்குபெற வைத்தார். ‘பஞ்ச சாகாஸ்’ அமைப்பின் உறுப்பினராக செயல்பட்டார். இவர் தொடங்கிய ‘கோதாவரிஷ் வித்யாபீட்’, ஒடிஷாவின் பழமைவாய்ந்த உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்று.
* 1937-ல் இருந்து வாழ்நாள் இறுதிவரை ஒடிஷா சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். பர்ளாக்கேமுண்டி என்ற சமஸ்தானத்தில் நிதி மற்றும் கல்வி அமைச்சராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, கட்டாக் உயர் நீதிமன்றம், பூரி, பாலேஷ்வர், சம்பல்பூரில் பல்வேறு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார்.
* இவர் எழுதிய சுயசரிதை நூலுக்கு, இவரது மறைவுக்குப் பிறகு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், கதாசிரியர், கல்வியாளர், அரசியல்வாதி, சமூக சேவகர் என பன்முகப் பரிமாணம் கொண்ட கோதாவரீஷ் மிஸ்ரா 70-வது வயதில் (1956) மறைந்தார்.