

பிரான்ஸ் தத்துவ மேதை, எழுத்தாளர்
பிரான்ஸ் தத்துவ மேதை, எழுத்தாளர், சிந்தனையாளரான மிஷேல் ஃபூக்கோ (Michel Foucault) பிறந்த தினம் இன்று(அக்டோபர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*பிரான்ஸின் பாய்டியர்ஸ் நகரில் (1926) பிறந்தார். பாரீஸில் உள்ள அரசு பள்ளியில் பயின்றார். பிரெஞ்ச், கிரேக்கம், லத்தீன் மொழிகள், வரலாற்றுப் பாடங்களில் சிறந்து விளங்கினார். மகனும் தன்போல அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது தந்தையின் ஆசை. இவரோ தத்துவம், இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.
*‘எகோலே நார்மலே’ உயர் கல்வி நிறுவனத்தில் பயின்று, பட்டம் பெற்றார். தத்துவம் தொடர்பாக நிறைய நூல்கள் படித்தார். 1949-ல் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். உளவியலும் பயின்றார். முனைவர் பட்டம் பெறுவதற்காக மருத்துவர் – நோயாளி இடையிலான உளவியல் தொடர்பு குறித்து ஆராய்ந்தார். சிக்மன்ட் பிராய்ட், ஃபிரெட்ரிக் நீட்சே ஆகியோரின் தாக்கம் இவரிடம் அதிகம் காணப்பட்டது.
*படித்து முடித்த பிறகு, ஸ்வீடன், போலந்து, மேற்கு ஜெர்மனியில் கலாச்சார தூதராக சில ஆண்டுகள் பணியாற்றினார். 1960-ல் முனைவர் பட்டம் பெற்றார். எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரான்ஸ் திரும்பிய இவர், ‘தி ஹிஸ்டரி ஆஃப் மேட்னஸ்’ என்ற தனது முதல் நூலை எழுதி வெளியிட்டார்.
*கிளர்மான்ட்-பெர்ரான்ட் பல்கலைக்கழகத்தில் 1960-ல் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது, மேலும் 2 முக்கிய நூல்களை எழுதி வெளியிட் டார். ட்யூனிஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
*காலேஜ் ஆஃப் டி பிரான்சேயில் 1970-ல் சேர்ந்து, இறுதிவரை பணியாற்றினார். மாணவர்கள் விரும்பும் ஆசிரியராகப் போற்றப்பட்டார். அவர்களுக்காக பயிலரங்குககள் ஏற்பாடு செய்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர்களுடன் இணைந்து பல சிறிய நூல்களை வெளியிட்டார்.
* உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து வந்த அழைப்பை ஏற்று, விரிவுரைகள் ஆற்றினார். சமூக அமைப்புகளில் இணைந்து சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
*சமூக ஒழுங்கமைப்பு, அதிகாரம், அறிவு, பாலியல் உள்ளிட்ட பல விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்து, தன் கருத்துகள், கோட்பாடுகளை வெளியிட்டார். பல்வேறு பத்திரிகைகளில் ஏராளமான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.
*அதிகாரம் – அறிவு இடையே உள்ள தொடர்பு எத்தகையது? இவை எவ்வாறு சமூக கட்டுப்பாட்டை உருவாக்க, சமூக அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இவரது கோட்பாடுகள் விளக்கிக் கூறின.
* உலகம் முழுவதும் மெய்யியல், அரசியல், உளவியல், மொழியியல், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் இவரது கருத்துகள், சிந்தனைகள் இன்றும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. சிறைச்சாலை, கைதிகளின் மோசமான நிலை குறித்து ஆராயும் நோக்கில், நண்பர்களுடன் இணைந்து ‘குரூப் டி இன்ஃபர்மேஷன் சர் லெஸ் பிரிசன்ஸ்’ என்ற இதழைத் தொடங்கினார்.
*கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் இவரது கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தத்துவவாதி, வரலாற்று ஆசிரியர், சமூக கோட்பாட்டாளர், மொழி அறிவியலாளர், இலக்கிய விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்ட மிஷேல் ஃபூக்கோ 58-வது வயதில் (1984) மறைந்தார்.