Published : 02 Oct 2016 11:09 AM
Last Updated : 02 Oct 2016 11:09 AM

சர் ஜான் கூடன் 10

பிரிட்டிஷ் வளரியல் உயிரியலாளரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான சர் ஜான் கூடன் (Sir John Gurdon) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தில் ஹாம்ப்ஷையரில் டிப்பென்ஹால் என்ற இடத்தில் பிறந்தவர் (1933). ஜான் பெர்ட்ரான்ட் கூடன் இவரது முழுப்பெயர். இங்கிலாந்தில் பள்ளிக் கல்வியும் பின்னர் எடான் கல்லூரியிலும் பயின்றார். 250 மாணவர்களில் உயிரியியல் பாடத்தில் கடைசி மாணவராக இடம் பிடித்தது இவர்தான்!

* இருப்பினும் இவருக்கு, தான் ஒரு விஞ்ஞானியாக மாற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதுபற்றி இவரது ஆசிரியர், மாணவர் ரிப்போர்ட்டில், ‘இந்த மாணவருக்கு, தான் விஞ்ஞானியாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இப்போது உள்ள நிலையில் இது மிகவும் அபத்தமான விருப்பம் என்றே தோன்றுகிறது’ என்று தெரிவித்திருந்தார்.

* முயன்று படித்து, ஆக்ஸ்ஃபோர்டின் விலங்கியல் துறையில் சேர்ந்துவிட்டார். 1956-ல் பி.எஸ். பட்டம் பெற்றார். அதே ஆண்டு முதுகலைப் பட்டப் படிப்புக்காக கருவியல் ஆராய்ச்சியாளரின் ஆய்வுக்கூடத்தில் அணு பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். முழு வளர்ச்சியடைந்த மாறுபட்ட உயிரணுக்களை (cells) மீண்டும் ஸ்டெம் செல்லாக மாற்ற முடியும் என்பதையும் முதன் முதலாக கண்டறிந்தார். ஆனால் பலரும் இதை ஏற்கவில்லை

* 1960-ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கலிஃபோர்னியா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அங்கு பாக்டீரியா - பாதிப்பு (இன்ஃபெக்டிங்) வைரஸ்களின் (பாக்டீரியோஃபேஜஸ்) மரபியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* 1971-ல் கேம்பிரிட்ஜில் மூலக்கூறு உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வுக்கூடத்தில் (எல்.எம்.பி.) சேர்ந்தார். 1979-ல் செல் உயிரியல் பிரிவுக்குத் தலைவராக உயர்ந்தார். அணு மறு விளைவுகளுக்குக் காரணமான கரு முட்டைகளின் மூலக்கூறுகளை அடையாளம் காண்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* இந்த சந்தர்ப்பத்தில் இவரது முந்தைய கண்டுபிடிப்பை மற்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி மூலம் உறுதிசெய்தனர். இது ‘நியுக்ளியர் டிரான்ஸ்ஃபர்’ என்ற அணு இடமாற்றம் குறித்த ஆராய்ச்சிகளின் முன்னணி விஞ்ஞானி என்ற நிலையை இவருக்கு வழங்கியது.

* 1989-ல் இவர் உதவியுடன் தொடங்கப்பட்ட வெல்கம் டிரஸ்ட் / கான்சர் ரிசர்ச் காம்ப்பெய்ன் இன்ஸ்ட்டிட்யூட்டில் பணியாற்றத் தொடங்கிய இவர், இதன் இயக்குநராகவும் பணியாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளால் பல நோய்களுக்குத் தீர்வு காண வழி வகை இருப்பது உணரப்பட்டது.

* உடலின் பழுதுபட்ட பகுதியை சீரமைக்கவும் முடியும் என்ற மகத்தான அற்புத செய்தியையும் இது விஞ்ஞானிகளுக்கு வழங்கியது. இது குளோனிங் மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளுக்குப் புதுவடிவம் வழங்கி, பெரிய அளவிலான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது.

* கூடனின் கண்டுபிடிப்புகளுக்காக 2012-ம் ஆண்டில் மருத்துவம் அல்லது உடல் இயங்கலியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் ஷின்யா யமனகாவுக்கும் இணையாக வழங்கப்பட்டது. மேலும் ராயல் சொசைட்டியின் பதக்கம், காப்ளே பதக்கம், ஆல்பர்ட் லஸ்கர் மெடிகல் ரிசர்ச் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகளை பெற்றார்.

* தற்போது செல் வேறுபாடு தொடர்புடைய சமிக்ஞை காரணிகள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார். உலகின் தலைசிறந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளராக மிளிர்ந்து வரும் சர் ஜான் கூடன் இன்று 83-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x