Last Updated : 16 Oct, 2016 11:15 AM

 

Published : 16 Oct 2016 11:15 AM
Last Updated : 16 Oct 2016 11:15 AM

சார்லி எனும் தேவதூதன்

1989-ம் ஆண்டு முது கலை படிக்க மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில் எங்கள் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேச, உலக மதங்களைப் பற்றி போதித்து வந்த டாக்டர் சார்லஸ் ஏ.ரயர்சன் என்பவர் வருகை புரிந்தார்.70-களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு ‘தென் இந்தியா வில் எதிர்கொண்ட மாநில உணர்வும் மதமும்; தமிழ் மற்றும் தமிழர் எழுச்சியும் இந்து மதமும்’. அவரது வருகைக்கு முன்னரே கல்லூரி நூலகத்திலிருந்து அந்த ஆய்வைப் படித்து அவரிடம் விளக்கம் பெற குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

அந்த நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அவரது ஆளுமை தோற்றத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் வெளிப்பட்டது. மத, நிற, மொழி, வர்க்க பேதங்களால் மனிதநேயம் எவ்வளவு சிதைக்கப் பட்டிருக்கிறது என்பதை அவர் தனது அனுபவங்களின் மூலம் விளக்கினார். உரையின் முடிவில் அவரது ஆய்வு நூலில் கம்பரை ‘பிராமணர்’ என்று எழுதியிருந்ததை சுட்டிக்காட்டினேன். ‘‘அது எப்படி அவ்வளவு உறுதியாகச் மறுக் கிறாய்?’’ என்றார். அதற்கு ‘‘நானே சான்று. கம்பர் எனது தாய்வழி மூதாதையர்’’ என்றேன்.

பிறகு அவரை ஒருநாள் மதுரை யில் எனது தாய்வழிச் சொந்தங்களால் வழிபடும் கோயிலுக்கு அழைத்துச் சென்றேன். சோழநாட்டில் இருந்து கம்பர் பாண்டிய நாட்டுக்கு வந்ததையும் அவரது சந்ததியினர் வழிவழியாக அக்கோயிலில் சேவை செய்வதையும் அறிந்தார். தனது நூலில் திருத்தத்தை வெளியிடுவதாக உறுதியளித்தார்.

ஒருமுறை அவர் மதுரையில் தனது சைக்கிளில் வலம் வந்தபோது ஒரு கோயிலின் உள்ளிருந்து பாடல் ஒன்று உருக்கமாகக் கேட்டதாகவும், கைகூப்பியபடி கண்களில் நீர் வழிய கோயிலுக்குள் சென்றபோது அந்தப் பாடல் திருவாசகத்தில் இருந்து பாடப்பட்டது என்று தெரிந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் தமிழறிஞர் தெ.பொ.மீ-யிடம் மாணவராகச் சேர்ந்து தமிழைக் கற்றதாகவும் கூறினார். இப்படியாக அவருக்கும் எனக்குமிடையேயான மாணவர் - ஆசிரியர் உறவு ஏற்பட்டு, அவரது ஒவ்வொரு வருட வருகையின் போதும் வலுப்பெற்றது. எல்லோரும் தன்னை ‘சார்லி’ என்றழைப்பதையே அவர் பெரிதும் விரும்பினார்.

வன்மையாகக் கண்டித்தார்

நான் படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் சேரப் போவதாகக் அவரிடம் கூறினேன். ‘‘உன் போன்ற மாணவர்கள்தான் தமிழ் சமூகத்துக் குத் தேவை. ராணுவத்தில் சேர்வாய் என்றால் அது அறிவுலகத்துக்கு இழப்பு’’ என்று அதை வன்மையாகக் கண்டித்தார். எனினும் அதை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் எனது குடும்பப் பொருளாதார நிலை அப்போது இல்லை.

நான் எண்ணியவாறே இந்திய கடலோரக் காவல் படையில் (Indian Coast Guard) 1992-ல் அதிகாரியாகச் சேர்ந்தபோது அவரால் வாழ்த்துக் கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை. அவர் தொடர்ந்து கடிதங்கள் வழியாக என் னோடு தொடர்பிலேயே இருந்தார். எனது பயிற்சிக் காலத்தின்போது நெடு நாளைய கடல் ரோந்துக் குப் பிறகு துறைமுகம் திரும்பும் போதெல்லாம் அவரது கடிதங்கள் என்னை வரவேற்கும்.

கடலில் நான் முதன்முதலில் சந்தித்த சூறாவளிதான் எனக்கு ‘ஆன்ம தரிசனமாக’ அமைந்தது. எனக்குக் கடலில் ஏற்பட்ட அந்த அனு பவத்தை விவரித்து அவருக்கு நீண்ட மடல் ஒன்றை எழுதி அனுப்பினேன். அதைப் ‘பொக்கிஷம்’ போலக் காத்துவருவதாக அடிக்கடி கூறுவார். தக்கசமயத்தில் அதைப் பிரசுரிக்க உள்ளதாகவும் கூறினார்.

2002-ம் ஆண்டில் அமெரிக்காவில் ரோட் ஐலண்டில் (Rhode Island) உள்ள தனது வீட்டில் மின் விபத்துக் காரணமாக ஏற்பட்ட தீயில் தனது உடைமைகளுடன் அந்தப் ‘பொக்கிஷமும்’ எரிந்து போனதாகவும், மறுமுறை நினைவு படுத்தி அந்த மடலை எழுதித் தர முடியுமா என்றும் கேட்டிருந்தார். அந்த அனுபவம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை எழுதி அனுப்பினேன். அவர் அநேகமாக அதை பிரசுரித்திருக்க வேண்டும்.

உறவு தொடர்ந்தது

எங்கள் உறவு இ-மெயில் காலத்திலும் தொடர்ந்தது. என்னைப் போன்ற மாணவர்களுக்கெல்லாம் அறிவுக் கண்ணைத் திறந்து உண்மையான ஆசிரியராக வாழ்ந்து காட்டிய ‘சார்லி’ கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் நாள் தான் விரும் பியபடியே மாணவர்கள் சூழ்ந் திருக்கத் தனது 83-வது வயதில் காலமானார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள அவரது மாணவர்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

போய் வாருங்கள் சார்லி! எனக்குத் தெரியும் நீங்கள் என் மீது கோபமாக இருப்பது. உங்கள் விருப்பத்தை மீறி இந்தியக் கடலோரக் காவல் படையில் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆகப் போகின்றன. மறுபிறப்பு என்று ஒன்றிருந்தால் நாம் மறுபடியும் சந்திப்போம். அப்போது ஒருவேளை உங்களது பேச்சை நான் கேட்கக் கூடும்.

- நா.சோமசுந்தரம், இந்தியக் கடலோரக் காவல்படை கமாண்ட்டென்ட், மும்பை.
தொடர்புக்கு: nsscg1992@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x