Last Updated : 09 Oct, 2016 09:41 AM

 

Published : 09 Oct 2016 09:41 AM
Last Updated : 09 Oct 2016 09:41 AM

நைட் ஸ்டடி கலாட்டா: தண்ணில கண்டம்

மதுரைல சுப்பிரமணிய புரம். அது பிளஸ் 2 தேர்வு நேரம். ‘சேர்ந்து படிக்கலாம்டா..’னு பாலாதான் மொதல்ல ஐடியா கொடுத்தான். அப்படித்தான் ஆரம்பிச்சுச்சு குரூப் ஸ்டடி. நானு, பாலா, செல்வராஜ், பாபு. எல்லோருமே பிளஸ் 2. எங்க படிக்குறது, எத்தனை மணிக்கு ஆரம்பிக்குறது, எப்ப முடிக்குறதுனு பல நாளா திட்டம்போட்டு, ஒரு சனிக்கிழமை ஆரம்பிச்சோம்.

‘தெரு விளக்குல படிச்சு பல பேரு பெரிய ஆளாகி இருக்காங்கடா’ - பில்டப் கொடுத்தான் பாலா. ஊரடங்குன பிறகு சரியா, பத்து மணிக்கு புக்க எடுத்தோம். அரை மணி நேரம் ஓடியிருக்கும். நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. பாபு ஆரம்பிச்சான். ‘பசிக்குற மாதிரி இருக்குல்ல’ன்னான்.

‘இல்லயே’ என வேகமாக மறுத்தோம்.

‘இல்ல.. லைட்டா..?’ என்றான்.

ஏதோ ஒரு படத்துல வடிவேலு சொல்ற மாதிரி ‘லைட்டா..!’ என்றோம் கோரஸாக.

‘வாங்க.. ரெண்டு புரோட்டாவ போடுவோம்..’ என இழுக்காத குறையாக கூட்டிட்டுப் போனான். புரோட்டாவ பிச்சுப்போட்டு, சால்னாவுல முக்கி அடிச்சோம். ஆட்டுக்குட்டிய முழுங்குன அனகோண்டாபோல அசைஞ்சு அசைஞ்சு படிக்குற இடத்துக்கு வந்தோம்.

ஏப்பமும், கொட்டாவியுமாக அரை மணி நேரம் போச்சு. தூரத்துல பயங்கர கருப்பா, கூட்டமா எதுவோ வர்ற மாதிரி இருந்துச்சு.

பன்னிக் கூட்டம்!

பாலா பரபரப்பானான். ‘டேய் கல்ல எடுத்துக்குங்கடா..’ என்றான். ஆளுக்கு நாலு கல்லை எடுத்துட்டு தயாரானோம். பெரிய சைஸில் இருந்த லீடர் பன்னி, அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கியபடி முன்னால் வந்தது. அடுத்தடுத்த சைஸ்களில் ஒரு பத்துப் பதினைந்தாவது இருக்கும். கடைசியாக வந்தது பெரிய பெருச்சாளி சைஸில் இருந்தது.

எங்கள் கவனம் பூரா அந்தக் கூட்டம் மேலேயே இருந்துச்சு. கமுக்கமா நின்னுட்டிருந்தோம். ப.கூ. பக்கத்துல வந்ததும் சல்லுசல்லுனு கல்ல விட்டோம். படிப்புல கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும், இதுலல்லாம் கில்லி! ஒரு கல்லுகூட மிஸ் ஆகல. சொத்.. சொத்னு சத்தம். ஏற்கெனவே வினோதமாக கத்துகிற பன்னிங்க, விபரீதமா கத்திட்டே ஓடிப்போச்சு. இதுல கால் மணி நேரம் போச்சு.

மெதுவா பாபு ஆரம்பிச்சான்.. ‘சால் னால என்னத்த கலக்குறாங்கய்ங்கனே தெரியல. சாப்பிட்டவுடனே தூக்கம் தூக்கமா வருது..’ என்றான்.

அடப்பாவி, புரோட்டாவுக்கும், பன்னிக்கும் நேரம் போக்குனது பத்தாதுனு இப்ப திரும்பவும் ஆரம்பிக் கிறானேன்னு பயந்தேன். ‘டே அடுத்த வாரம் எக்ஸாம். எங்களுக்குல்லாம் தூக்கம் வரல’ என்றேன்.

‘இல்லடா.. லைட்டா வர்ற மாதிரி இருக்கா இல்லயா.. தூக்கத்தோட படிச்சா எப்படி ஏறும்... இப்ப மணி பன்னண்டு. மூணு மணி நேரம் தூங்குவோம். 3 மணிக்கு எந்திரிச்சு பிரஷ்ஷா படிப்போம். காலைல படிக்குறது அப்படியே மனசுல பதியும்..’ - கொட்டாவி விட்டபடியே சொன்னான்.

புரோட்டா மயக்கத்துல எங்களுக்கும் லைட்டா தூக்கம் வந்தது. அதிகாலை 3 மணிக்கு எந்திரிக்கிற தீர்மானத்தோடு, சைக்கிள் கடைகிட்ட படுத்தோம்.

சரக் சரக்னு வெளக்குமாறு சத்தம்.

‘ஏப்பா இதுதான் படிக்குற லெட்ச ணமா..’னு கேட்டுக்கிட்டே, பெருக்குற ஆயா எழுப்பி விட்டுச்சு. மணி 6. அடிச்சு புடிச்சு எந்திருச்சு கலைஞ்சோம்.

2-வது நாளு. 10 மணிக்கு குரூப் ஸ்டடி ஆரம்பிச்சோம். ஒரு மணி நேரம் போனது. பாபு சொல்லாமலேயே, டக்குடக்குனு புக்க மூடி கக்கத்துல வைச்சோம். புரோட்டா கடைய நோக்கி காந்தம் மாதிரி போனோம். கடைசி பீஸு உள்ள போகும்போதே தூக்கம் கண்ணை சுழற்றியது. ‘டே, மசமசங்

காதீங்க. வேகமா நடங்கடா… பன்னிக் கூட்டம் போயிரும்’ என்று பரபரத்தான் பாலா.

அட நாயே. படிக்க வந்தியா, பன்னி அடிக்க வந்தியானு கடுப்புல மொறைச்சேன். அவன் கண்டுக்கவே இல்ல. வழியிலயே கல்ல பெரக்க ஆரம்பிச்சான். எங்களுக்கும் ரெண் ரெண்டு கொடுத்தான். ஸ்பாட்டுக்கு வந்தோம். அந்தக் கூட்டம் இன்னும் வரல. பாலா முகத்தில் நிம்மதி. ‘வந் துச்சா... வந்துச்சா சொல்லு சொல்லு..’னு பாடிக்கிட்டு இருந்தான். காதல் பாட்டு மாதிரி தெரியல. பன்னிக்காகவே பாடுன மாதிரி இருந்துச்சு..

நாங்க எதிர்பார்த்துக் காத்திருந்த ப.கூ., முக்கு திரும்பி வர ஆரம்பிச்சது. மொத நாள் சம்பவம் எதுவுமே அந்தக் கூட்டத்துக்கு ஞாபகம் இல்ல போல. ரோட்டுல ரெண்டு பக்கமும் மாறிமாறி போய் மோந்து பார்த்துக்கிட்டே வந்துச்சு. கிட்ட வந்ததும் சர்சர்ருனு கல்ல பறந்துச்சு. பாலா மட்டும் நாலு கல்லயும் விட்டான். அத்தனயும் குறி தவறாம சொத் சொத்னு பட்டுச்சு. கிய்உய்னு கத்திக்கிட்டே ப.கூ. காணாம போச்சு.

வழக்கமான இத்தனை சம்பவங் களும் மூணாவது நாளும் தொடர்ந்திச்சு. அன்னிக்குதான் கிளைமாக்ஸ். புரோட்டாவ முடிச்சுட்டு ப.கூ.வுக்காக காத்திருந்தோம். எல்லா கல்லையும் அள்ளி வச்சுக்கிட்டு காத்திருந்தான் பாலா. பாபுவும், செல்வராஜும் அவன்ட்ட கெஞ்சிக் கேட்டு ரெண்டு கல்லு வாங்கி வச்சிருந்தாய்ங்க.

தூரத்துல ப.கூ. சத்தம் கேட்டுச்சு. பசங்க பரபரப்பானாய்ங்க. ப.கூ.வுக்கு பக்கத்துல நாலஞ்சு பேர் நடந்து வந்தாய்ங்க. சரி.. அவிங்க மேல படாம, ப.கூ.வை மட்டும் குறிபாத்து சொத் சொத்னு அடிச்சோம். வழக்கம்போல பாலாவோட அத்தன கல்லும் குறி தவறல. அவனோட வெற்றிப் புன்னக மறையுறதுக்குள்ள, கூட வந்த அந்த ஆளுங்க எங்க நாலு பேரையும் கைய புடிச்சுட்டாய்ங்க.

அவிங்க எல்லோருமே பன்னி ஓனர்ஸ்.

‘ஏண்டா பன்னிய அடிக்கிறீங்க.. அதுங்க என்னடா பாவம் பண்

ணுச்சு. (அதெப்படி எங்களுக்குத் தெரியும்). உங்க வீடு எங்கடா இருக்கு...’ அப்படினு வீட்டுக்கு இழுக்க ஆரம்பிச்சாய்ங்க.

‘அண்ணே அண்ணே.. விட்டுறங் கண்ணே.. இனிமே இப்படி செய்ய மாட்டோம்..’னு கையில காலுல விழுந்து தப்பிச்சோம். அப்ப இருந்த நெலமைக்கு பன்னி கால்ல விழச்சொல்லிருந்தாகூட விழுந்துருப்போம்.

அரட்டை, புரோட்டா, சால்னா, பன்னி, கல்லு, தூக்கம்னு ஜாலியா போய்ட்டிருந்த குரூப் ஸ்டடிக்கு அதோட குட்பை சொல்லிட்டு வீட்டுலயே படிக்க ஆரம்பிச்சோம்.

நாலு நாள் கழிச்சு, பழக்க தோஷத்துல லைட்டா பசியெடுத்திச்சு. புரோட்டா சாப்பிடலாம்னு வெளிய வந்தேன். பாலா நின்னுக்கிட்டு இருந்தான். ‘நீயும் புரோட்டாவுக்காடா?’ன்னேன்.

‘இல்லடா, தூக்கம் வர்லனு வெளிய வந்தேன். சரி.. இது பன்னி டைம்னு வெயிட் பண்றேன்’னான். பாத்தேன்... ரெண்டு கையிலயும் கல்லு.

ஒனக்கு தண்ணியில.. ஸாரி.. பன்னியிலதான் கண்டம். உன் சகவாசமே வேண்டாம்னு போய்ட்டேன்.

தேர்வு முடிவும் வந்துச்சு. நாங்க எல்லோருமே பாஸ். பன்னியோட சாபமோ என்னவோ பாலா மட்டும் ரெண்டு சப்ஜெக்ட்ல ஃபெயில்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x