Published : 27 Oct 2016 10:19 AM
Last Updated : 27 Oct 2016 10:19 AM

ஜேம்ஸ் குக் 10

இங்கிலாந்து மாலுமி

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாலுமியும் பசுபிக் பெருங்கடலில் பல இடங்களையும் தீவுகளையும் கண்டறிந்தவருமான ஜேம்ஸ் குக் (James Cook) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தின் யார்க்ஷயரில் பிறந்தவர் (1728). தந்தை ஒரு ஏழை விவசாயி. அய்டான் நகரில் பள்ளிக் கல்விப் பயின்றார். 17 வயதில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்த்தார். சிறுவனுக்கு இதில் விருப்பமில்லாமல் அருகில் இருந்த கடலையே ஏக்கத்துடன் பார்த்ததைக் கண்டு மனமிரங்கிய முதலாளி, அவனை விட்பை துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டார். கடல், கப்பல்களால் வசீகரிக்கப்பட்டான்.

* மிகவும் அறிவுக்கூர்மை மிக்க இவர், தானாகவே நூல்களைக் கற்றும் அடிப்படைக் கணித அறிவு, திசையமைப்பு, அறிவியல் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார். கப்பலில் பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

* கப்பல், கடல், காற்று மாறுபாடுகள் குறித்த பல விஷயங்களைப் படித்தும், பிறரிடம் கேட்டும் விரிவாக அறிந்து அவற்றில் வல்லவரானார். 1755-ல் ராயல் நேவியில் ஒரு சாதாரண மாலுமியாகச் சேர்ந்தார். அடுத்த ஆண்டே போர்க்கப்பலுக்குத் தலைமை தாங்கிப் போரில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.

* போரில் சமயோசிதமாகச் செயல்பட்டுப் பல உயிர்களைக் காத்ததால் மிகவும் பிரபலமடைந்தார். பிறகு கடற்கரையை சர்வே செய்து, வரைபடம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டார். 1766-ல் ராயல் சொசைட்டி, பசிபிக் பெருங்கடலில் பயணம் மேற்கொள்ள எண்டேவர் என்ற கப்பலைத் தேர்ந்தெடுத்து, குக்கின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி வைத்தது.

* பயணம் 1768-ல் தொடங்கியது. பசுபிக் பெருங்கடலில் உள்ள டெஹீட்டி தீவைச் சென்றடைந்தார். அங்கு வீனஸ் கிரகம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1771-ல் வெற்றிகரமாக அந்தப் பயணம் முடிவடைந்து நாடு திரும்பிய இவர் கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். மீண்டும் அடுத்த ஆண்டே ஆஸ்திரேலியாவைக் கண்டறிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

* ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைக் கண்டறிந்து, அதற்கு ‘நியூ சவுத் வேல்ஸ்’ எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானது என்றார். பசிஃபிக் பயணத்தில், அதற்கு முந்தைய பயணங்களைப் போல ஸ்கர்வி நோய் தாக்கி மாலுமிகள் யாரும் இறக்கவில்லை என்பதைக் கண்டார். இந்தப் பயணத்தின்போது, வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் செறிந்த பழங்களைச் சாப்பிட்டதால் அவர்களை இந்த நோய் தாக்கவில்லை என்பதையும் ஆராய்ச்சியில் கண்டார்.

* இவரது யோசனைப்படி கப்பல் ஊழியர்களுக்கு எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறு, முட்டைகோஸ் ஆகிய உணவு வழங்கப்பட்டதால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தனர்.

* எவ்வளவு தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் பயணங்கள் மேற்கொண்டார். இங்கிலாந்தின் எதிரிகள்கூட இவரை, ‘மனித குல நண்பர்’ என்றே கருதினர். இரண்டு முறை கடலில் உலகை வலம் வந்துள்ளார்.

* வட அமெரிக்காவின் பல தீவுகளைக் கண்டறிந்தார். தான் கண் டறிந்த இடங்களைக் குறித்து நிறைய புத்தகங்களையும் எழுதினார். புதிய ராணுவத் தளங்களை அமைக்க நல்ல இடங்களையும், பசிபிக், அட்லாண்டிக் இடையே புதிய வழித்தடங்களையும் கண்டறிந்தார்.

* வேறு எந்த கடற்பயணிகளையும்விட மிக அதிகமான இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டவரும் அவற்றை வரைபடமாக வரைந்து சாதனை படைத்தவருமான ஜேம்ஸ் குக், 1779-ல் பிப்ரவரி மாதம், ஹவாய் தீவுவாசிகளுடன் மூண்ட சண்டையில் கொல்லப்பட்டார். அப்போது இவருக்கு வயது 51.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x