Published : 10 Oct 2016 11:39 AM
Last Updated : 10 Oct 2016 11:39 AM

ஜெர்ஹார்ட் எர்ல் 10

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் ஜெர்ஹார்ட் எர்ல் (Gerhard Ertl) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 10). அவரைப் பற்றிய 10 அரிய முத்துகள்:

* ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் பிறந்தார் (1936). அறிவியலும் வரலாறும் இவருக்கு பிடித்த பாடங்கள். கணிதத்திலும் சிறந்து விளங்கினார். உயர்கல்வி கற்கும்போது, வேதியியல் பரிசோதனைகள் பல அடங்கிய ஒரு நூலைப் படித்து, வீட்டிலேயே பரிசோதனைகளை செய்துவந்தார்.

* ரசாயனப் பொருட்களால் மகனுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த அம்மா அதைத் தடுத்தார். அதனால் இவரது ஆர்வம் இயற்பியல் பக்கம் திரும்பியது. பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு ஸ்டுட்கார்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். பாரீஸ், லுட்விக் மாக்சிமில்லியன் பல்கலைக்கழகங்களில் பயின்று இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* மியுனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 1965-ல் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் வேதியியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நுண் ணலை கதிர்வீச்சு குறித்து ஆராய்ந்தார். மியுனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

* 1973-ல் ஹானோவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பின் னர் இயக்குநராகவும் பணியாற்றினார். லுட்விக் மாக்சிமில்லியன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மாக்ஸ் பிளாங்க் கெசெல்சாவ்ட்டின் ஃபிரிட்ஸ் ஹாபர் இன்ஸ்டிடியூட்டில் வேதியியல் பேராசிரியராக, ஓய்வு பெறும்வரை பணியாற்றினார்.

* இயற்பியல் வேதியியல் (physical chemistry) துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். வினையூக்கிகள் வழி இரும்பின் மீது, அமோனியாவை உற்பத்தி செய்யும் ஹாபர்-போஷ் (Haber Bosch) செய்முறையில் நிகழும் வேதியியல் வினை களைக் கண்டறிந்தார். 60 ஆண்டுகளாக புரியாமல் இருந்த செய்முறை, இவரது கண்டுபிடிப்புகளால் அனைவருக்கும் புரிந்தது.

* இந்த ஆராய்ச்சிகளின்போது பிளாட்டினம் மீது அலைவு (oscillatory) எதிர்வினைகள் குறித்த முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் அலைவளைவு (diffraction) உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினார். பல்லேடியம் (Palladium) மீது வினையூக்கி (catalytic) வழி கார்பன் மோனாக்சைடை ஆக்சைடாக்கும் முறையையும் கண்டறிந்தார்.

* தனது கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை கட்டுரைகளாக வெளியிட்டார். படிக மேற்பரப்பில் வினையூக்கி வழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக வேதியியல் துறையின் பெருமைமிகு உல்ஃப் பரிசைப் பெற்றார். நவீன புறப்பரப்பு வேதியியல் (modern surface chemistry) களத்துக்கான அடித்தளமிட்டார். இவை எவ்வாறு எரிபொருள் செல்கள், சுற்றுசூழலை மாசுபடுத்தாமல் ஆற்றலை உற்பத்தி செய்கின்றன என்பதை விளக்குவதற்கும் உதவியது.

* திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக 2007-ம் ஆண்டில் இவரது 71-வது வயதில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* இவரது கண்டுபிடிப்புகள் குறித்த பாடங்கள் உயர்கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படுகின்றன. மேலும் இவை தொழில் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஓசோன் படலம் அழிக்கப்படுது குறித்தும்கூட இந்த புறப்பரப்பு வேதியியல் விளக்குகிறது.

* ஹாண்ட்புக் ஆஃப் ஹெட்ரோஜீனியஸ் காட்டலைசஸ், இன்ஜினீயரிங் ஆஃப் கெமிக்கல் காம்ப்ளெக்சிட்டி உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஜெர்ஹார்ட் எர்ல் இன்று 80 வயதை நிறைவு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x