Published : 28 Jul 2022 04:38 PM
Last Updated : 28 Jul 2022 04:38 PM

‘திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல்’ – சொல் அல்ல செயல்! | ஒரு விரிவான பார்வை

1979-ம் ஆண்டில்.

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

"The Dravidians belong to a stock totally different from the Aryans, and have developed independently along their own lines. In the centre is the great mass of hills known as the Nilgiris or Blue Mountains; south of this, the country is flat and fertile" - H.G. RAWLINSON C.I.E., M.A., F.R.Hist.S.

A Concise History of INDIAN PEOPLE - OXFORD UNIVERSITY PRESS. Published 1938.

பேரறிஞர் அண்ணா நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் மேல் சொன்ன கருத்தை வாசித்து கருத்தில் கொண்டு ‘Dravidaian Stock’ எனப் பேசினார்.

தமிழக ஆட்சிக் கட்டிலில் அதிகப்பெரும்பான்மையுடன் அமர்ந்து ஓராண்டு காலத்தை நிறைவு செய்துள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

பொறுப்பேற்ற நாள் முதல் மக்களின் மனவோட்டத்தைப் படித்துவரும் முதல்வர், திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல், அதன் அணுகுமுறை அதாவது திராவிடனுக்கே உரிய மரபை, கொள்கைப் பிடிப்பை, தமிழகத்தில் திராவிடத்தின் பங்கை, திராவிட கொள்கைப் போக்கு அடங்கிய ஏட்டையும் சற்று புரட்டவேண்டும்.

திராவிடம் என்பது தமிழ்நாட்டின்முன்னேற்றத்திற்காக, நலனுக்காக, உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதே. இதன் அடிப்படையில் உருவானதே மாநில சுயாட்சி.

அண்ணாவின் உயிலை நடைமுறைப்படுத்தும் வகையில் தலைவர் கலைஞர் மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 1974ல் பெற்று, அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தார்.

தமிழ் தேசியம் உள்ளட்டக்கியதே திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
திராவிடன் என்று சொல்லிக்கொள்ளும் நாம், தமிழை, தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டை மேம்படுத்தியிருக்கிறோமா? அறியா சிலருக்கு விடை சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

‘திராவிடம்’ என்ற சொல் எந்தெந்த காலகட்டங்களில், என்னென்ன பொருளில் ஆளப்பட்டுள்ளது?`திராவிடன் என்று சொல்லாதே, தமிழன் என்று சொல்’ எனக் கூறுகின்றவர்கள், ஏதோ திராவிடமும் தமிழும் எதிரெதிரானவை என்பதுபோலப் பேசுகின்றனர்.

‘தமிழ்’ என்பது நம் மொழியின்பெயர், ‘தமிழர்’ என்பது நம் இனத்தின் பெயர், `தமிழ்நாடு’ என்பது நம் நிலத்தின் பெயர். அப்படியானால், திராவிட மொழி, திராவிட இனம், திராவிட நாடு என்பன எங்கிருந்து வந்தன என்பதை கவனிக்க வேண்டும்.

இனம் என்று எடுத்துக்கொண்டால், உலகம் முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள் (Ethnic Race) இருந்தன. பிறகு அவை தேசிய இனங்களாகப் (National Race) பரிணாம வளர்ச்சி பெற்றன.

இந்த அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பூமியை நிலத்தை அவர்களுடைய மரபுரீதியிலான மாநிலமாகவும் நாடாகவும் (STATE) அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நம் பழையமரபினத்தின் பெயர் ‘திராவிடர்’ என்பது. ஆனால் இன்று ‘திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டக் குறித்ததிலிருந்து விடுபட்டு, ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்.

அங்கு அவர் ஏப்ரல் 1962ல் ஆற்றிய கன்னிப்பேச்சில் “I BELONG TO DRAVIDIAN STOCK. I AM PROUD TO CALL MYSELF A DRAVIDIAN” என்றார்.

அதாவது, "நான் திராவிட இனத்தை சார்ந்தவன், திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமைகொள்பவன்’’ என்று அவையில் உரையாற்றினார்.

திராவிடம் என்றால் கூட்டுறவு முறையில் ஒன்றுபட்ட தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகியவை இணைந்து நல்லிணக்கத்தை உருவாக்கி திராவிட இயக்கத்தின் வழியே செயல்படுவது.

இந்தியாஎனும் ஓர் உபகண்டத்தில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், வாழ்நிலை சூழல்களில் பன்மையில் ஒருமைஎனும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

பல்வேறு வகையான வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும் என்ற நிலையில் உண்மையான ஒரு கூட்டாட்சி வேண்டும் என்ற அவசியத்தின்பேரில் மாநில சுயாட்சி என்று அண்ணா அவர்கள் குரல் எழுப்பினார்.

மாநில சுயாட்சி என்பது, திராவிட இயக்கத்தின் குரல் மட்டுமல்ல. திலகர் பூர்ணசுய ராஜ்ஜியம் என்று குறிப்பிட்டதிலிருந்தே தொடங்குகிறது. காங்கிரஸின் லக்னோ உடன்படிக்கை மோதிலால் நேரு தலைமையிலான காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிக்கை மற்றும் பல்வேறு குழுக்கள் மாகாண சுயராஜ்ஜியம் என்று கூறியுள்ளது.

அதுவே மாநில சுயாட்சியாகும். இந்நிலையில் காஞ்சி இதழின் தைத்திருநாள்சிறப்பு மலரில் மாநில சுயாட்சியைப் பற்றிவிரிவான கட்டுரையை அண்ணா எழுதிவெளியிட்டார். இதை ஆங்கிலத்திலும்அண்ணா எழுதியுள்ளார். இதுவே அவரின்இறுதி உயிலாகும்.
இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும்மாநிலத் தனித்தன்மையுடனும், மாநிலசுயாட்சியுடனும் கூட்டாட்சித் தத்துவத்துக்குஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதே அண்ணாவின் நோக்கமாக இருந்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் `DIRAVIDIAN STOCK’ என்று குறிப்பிடுவர்.

இதேபோன்று `DIRAVIDIAN MODEL’ பற்றியும், தமிழகப் பொருளாதாரம் வளர்ந்தவிதம் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றைய அரசியல் களத்தில் அவசியமானதாகிறது.

அதாவது இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் சமச்சீரான வாய்ப்பை வழங்க வேண்டும். ஒருமாநிலத்தைச் செழிப்புறச் செய்து, வேறு ஒரு மாநிலத்தை மாற்றாந்தாய்ப் போக்கில் இந்திய அரசு நினைப்பதை அறவே ஒழித்திட வேண்டும்.

அனைத்து மாநிலங்களுக்கும் சமன்பாடான நிதியை ஒதுக்கி, இந்தியத் திருநாட்டின் அனைத்துப் பகுதிகளும் சமச்சீரான வகையில் வளர்ந்திடுவதற்கான வழிமுறைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் மாநிலங்களவைக்கு ஒவ்வொரு மாகாணத்துக்கும் சரிசமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது போன்று, இந்திய நாட்டிலும் வழங்கப்பட வேண்டும்.

இது போன்ற மாநிலங்களிடையே பாகுபாடற்ற நடைமுறைகளே உண்மையான கூட்டாட்சிக்கும் மாகாணங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

அன்றே, `வடக்கே வாழ்கிறது… தெற்கேதேய்கிறது’ என்று அண்ணா கூறியதை போன்று,இன்று `சென்னை சிதைந்துவருகிறது… பெங்களூர் பெருத்துவருகிறது’ என்று குறிப்பிட்டால், அதை மறுப்பவர் கிடையாது.

இந்திய அரசு தென்மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவு நிறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், திமுக ஆட்சிக் காலத்தில் இத்தனை தடங்கல்களையும் தடைகளையும் தாண்டி, தமிழகம் பொருளாதார ரீதியில் முன்னேற்றப்பாதையில் சென்று, முன்னோடி மாநிலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது என்றால், இதுதான் `திராவிட மாடல்’ என்று தெளிவாகக் குறிப்பிடலாம்.

இதற்கு, தலைவர்கலைஞருடைய நிர்வாகத் திறமை மேலும் வலுவூட்டியது. தமிழகம் மற்றும் புதுவையைப் பொறுத்தவரையில் மக்களவை மற்றும் மாநிலங்களையில் மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் நமது மாநில பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும். அதன் மூலம் அம்மாநிலங்களுக்குத் தேவையான நிதி, தமிழகத் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். உதாரணமாக, நதிநீர் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம் மறுக்கவில்லை.

இவை உயிர்நாடியான பிரதான பிரச்சினைகள்தான். ஆனால், தமிழகத்தில் இன்னும் பல நதிநீர் பிரச்சனைகளைப் பேசத்தவறிவிட்டோம்.

• குமரி மாவட்டத்தில் தக்கலைப் பகுதியில்கட்டப்பட்ட நெய்யாறு அணை 2007ம் ஆண்டில் மூடப்பட்டு, வலதுகால், இடதுகால் மூடி தண்ணீர் வரமால் குமரி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அணையைக் கட்ட அன்றைய சென்னை மாகாணம் நிதியை ஒதுக்கி முதல்வர் காமராஜரும் கேரள முதல்வர் சங்கரும் திறந்துவைத்தனர்.

• நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு, பச்சையாறு திட்டம் இன்னும் சரியாக நடைமுறைக்கு வரவில்லை.

• தென்காசி அருகே செங்கோட்டையில்அமைந்துள்ள அடவி நயினார் அணை 1989ல் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டு, கேரளாவிலிருந்து வரவேண்டிய நீர்வரத்து சரியாக வரவில்லை. மழை பெய்தால் தண்ணீர் வரும். இந்த அணையை உடைக்க உலக வாதம் பேசும் மூத்த தலைவர் அச்சுதானந்தம் கடப்பாறை மண்வெட்டியுடன் அடவிநயினார் அணையை உடைக்க 2002ல் தமிழகத்தின் செங்கோட்டைக்கு வீறுகொண்டு வந்தார். இது எத்தனை பேருக்குத் தெரியும்?

• செண்கவல்லி தடுப்பு அணைஉடைக்கப்பட்டு, அது சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த அணை சரி செய்யப்பட்டால், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வளம் பெரும்.

• தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று நான் உச்ச நீதிமன்றத்தில் சுமார் 30 ஆண்டுகாலமாகப் பேராடிய வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட கேரளா அச்சன்கோவில், பம்பை நீர்ப்படுகைகளை செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாகசாத்தூரில் உள்ள வைப்பாற்றுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் வரையிலான மாவட்டங்களும் செழிப்புறும். இந்தப் பிரச்சனையையும் நாடாளுமன்றத்தில் சரியாக எழுப்பப்படவில்லை.

• ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, அமராவதி திட்டம், பம்பாறு, சிறுவாணி என்று பல்வேறு நதி நீர்வரத்துக்கள் கேரளாவிலிருந்து கிழக்கு முகமாக தமிழகத்தின் கொங்கு மண்டலத்திற்கு தண்ணீர் வரவேண்டிய பிரச்சினைகள் உள்ளன. இப்படி பத்துக்கும் மேலான நதிநீர் பிரச்சினைகள், தமிழகத்தின் உரிமைகள் கேரளத்துடன் பேசித் தீர்க்க வேண்டும்.

• கர்நாடகத்தில் காவிரி பிரச்சினைமட்டுமல்ல தென்பெண்ணை, ஒக்கேனக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைக்கு வரவேண்டிய தண்ணீரும் கர்நாடகத்தால் தடுக்கப்படுகிறது.

• பாலாறு பிரச்சினை மட்டும் ஆந்திராவோடு கிடையாது. பொன்னியாறு, ஆந்திரா நமது எல்லையில் கட்டுகின்ற தடுப்பணைகள், பழவேற்காடு ஏரி 40 சதவிகிதமான நமது அமைப்பு முறை சிறுகச் சிறுக ஆந்திராவசம் சென்று கொண்டிருக்கிறது.

காவிரி பிரச்சினையைப் போன்று சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் வருவதும் கேள்விக் குறியாகியுள்ளது. இப்படி ஏறத்தாழ 20-க்கும் மேலான அண்டை மாநிலங்களுடன் நதிநீர் சிக்கல்கள் உள்ளன.

தமிழகத்தின் நீர்த் தேவைகளைப் பற்றிநாடாளுமன்றத்தில் பேசினால்தான் திராவிடஇயக்கத்தின் வீரியமும் உரிமைக் குரலும் அதன்மூலம் ஏற்படும் தாக்கமும் இரட்டிப்பாகும் என்பதை இன்றைய திராவிடப் பொறுப்பாளர்கள் உணரவேண்டும்.

நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகிறார் என்றால் இவரின் பேச்சைக் கேட்பதற்கென்றே அன்றைய பிரதமர் நேரு அவர்கள் அவையில் வந்து அமர்ந்துவிடுவார். பின்பாயின்ட் அமைதி நிலவும். காரணம், தென் தமிழகத்துக்கான தேவைகள் அண்ணா அவர்களின் உரையில் வீரியத்துடனும் எழுச்சியுடனும் வார்த்தைகளாகத் தெறித்திடும்.

அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம்முதன்முதலில் கொண்டுவரப்பட்டது திராவிடஇயக்கத்தின் கொடையாகும். சமூகநீதிக்காக சட்டம் திருத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில்தமிழகத்தைச் சேர்ந்த சம்பகம் துரைராஜ் தொடுத்த வழக்கும் ஒரு காரணமாகும். இதுதான் திராவிடியன் ஸ்டாக் என்பற்கான குரல். அது ஏன் இன்று ஒலிக்கவில்லை என்பதுதான் என் கேள்வி.

ஒவ்வொரு திரவிடியன்னும் உரிய தரவுகளுடன் நேர்மையுடனும் உரிமையுடனும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, தமிழ்நாட்டுக்குத் தேவையானவற்றையைப் பெற்றுத் தருவதே, பேரறிஞர் அண்ணாவுக்கும், தலைவர் கலைஞருக்கும் நாம் செய்யக்கூடிய கைம்மாறு என்று நான் கருதுகிறேன்.

தாய்மொழியைத் தவிர்த்து வேறு மொழியைத் திணிப்பது என்பது, ஆரோக்கியமற்ற சூழ்நிலையையே உருவாக்கும். அதாவது விருப்பத்திற்கு மாறாக இந்தி திணிப்பு என்பது எதிர்க்கக்கூடிய ஒன்று என்பது திரவிடியன் ஸ்டாக் என்பது அடையாளம். எந்த ஒருமொழியும் இங்கு திணிக்கக்கூடாது. அறிந்துகொள்வது தவறல்ல!

முதன்முதலாக தி.மு.க பொதுத்தேர்தலைச் சந்தித்தபோது ஈ.வி.கே.சம்பத்தும் திருவண்ணாமலையிலிருந்து தர்மலிங்கமும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றனர்.

அப்போது, தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்து பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்ற அவையில்
கடுமையாகச் சாடி உரிமைக்குரல் எழுப்பினார் ஈ.வி.கே.சம்பத்.

இதனால் தமிழகத்தில் இந்தித் திணிப்பால் இந்திய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைந்துவிடுமோ என அஞ்சிய நேரு, சம்பத்தைச் சந்திக்க நேரு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, சம்பத் தொலைபேசியை எடுக்க மறுத்தார். ஏனெனில், அதிகாரப்பூர்வமான உத்தரவாதம் இல்லாமல் நேருவைச் சந்திக்கவோ அவருடன் பேசவோ கூடாது என்று சம்பத் தவிர்த்தார்.

ஆனால் நேருவோ, எப்படியாவது சம்பத்தைச் சந்தித்து இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டும் என்று தனது பிரதிநிதியை சம்பத்தின் டெல்லி வீட்டிற்கு அனுப்பினார். அப்போது, சம்பத் வீட்டில் இருந்துகொண்டே தான் இல்லை என்று மறுத்தது உண்டு. எப்படியாவது அண்ணாவினுடைய வேண்டுகோளின்படி இந்தித் திணிப்பு இல்லை என்ற உத்தரவாதம் வாங்கும் வரை ஈ.வி.கே.சம்பத் போராடினார்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்ய மாட்டோம் என்ற எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கைக்கு கிடைத்த பிறகு அவரை நான் சந்திப்பேன். அதுவரை நான் அவரை சந்திக்க விரும்பவில்லை என்று அன்றைய பிரதமர் நேருவுக்கே சவாலாகத் திகழ்ந்தவர் ஈ.வி.கே.சம்பத். அவர் கேட்டபடி அண்ணாவின் விருப்பத்தின்பேரில் நேரு வழங்கிய உத்தரவாதத்தின் பின்புதான் சம்பத் அண்ணாவினுடைய சம்மதத்தோடு பிரதமர் நேருவைச் சந்தித்தார்.

இப்படியான நிகழ்வுகள் எல்லாம் திராவிட இயக்க வரலாற்றில் உண்டு. இதுதான் திரவிடியன் ஸ்டாகின் வீரியம்.

தமிழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் அண்ணா, ஈ.வி.கே.சம்பத், பேராசிரியர், நாஞ்சில் மனோகரன், க.ராசாராம், இரா.செழியன், முரசொலி மாறன், வைகோஎன பல்வேறு திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சென்று, தமிழகத்தின் தொன்மைகளையும், சிறப்புகளையும் விளக்கியதுடன் மாநில சுயாட்சி, இந்தி ஆதிக்கம், ஈழத்தமிழர் பிரச்சினை, சமூகநீதி, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு, தமிழக உரிமைகள் என பல்வேறு பிரச்சினைகளை ஆட்சியாளர் மட்டுமல்ல, வடபுலத்து இந்தியத் தலைவர்களின் மனதில் பதியும் வண்ணம் எடுத்துரைத்து திராவிட முத்திரையைப்பதித்தனர்.

திரவிடியன் ஸ்டாக் என்று பேசிக்கொள்வது மட்டுமல்ல, அதற்குரிய செயல்பாடுகளில் வீரியத்துடன் முன்னேறுவதும் தான்.

அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் எழுச்சி நாள் என்று நடத்தி, தீர்மானத்தை நிறைவேற்றி அதை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த எழுச்சிநாளில், தூத்துக்குடி துறைமுகத் திட்டம், சேது கால்வாய்த் திட்டம், சேலம் இரும்பாலை ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானங்களாக தமிழகம் முழுவதும் குரல்கொடுக்கப்பட்டது.

ஒரு முதலமைச்சர் தன் மாநிலத்தினுடைய உரிமைக்காகப் போராடிய வரலாறு அண்ணாவுக்கு உண்டு. சேலம் இரும்பாலை காமராஜர் திட்டமிட்டது.

தலைவர் கலைஞர் திட்டக்குழுவில் பிரதமர் இந்திராவிடம் போர் குணத்தோடு வாதாடி சாதித்தார்.
1967க்குப் பிறகு இந்தியாவில் தேசிய கட்சி ஆட்சிக்கு வராத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

பிரிவு 356-ஐ இந்திய அரசு இதுவரை சுமார்132 முறை நடைமுறைபடுத்திவிட்டது. முதல் ஆட்சிக் கலைப்பு என்பது 1951-ம் ஆண்டில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் கோபிசந்த் ஆட்சிதான்.

பிறகுதான், மூன்றாவது முறையாகநம்பூத்ரி பாட் தலைமையிலான காங்கிரஸ்அல்லாத கம்யூனிஸ்ட் அரசை 356 பிரிவைப்பயன்படுத்தி 1959ல் கலைத்தது. இந்த 356 பிரிவு கூடாது என்று தி.மு.க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இதற்கு கங்காணி வேலை பார்க்கும் ஆளுநர் தேவையற்றது, ஆட்டுக்கு தாடி எதற்கு? என்று அண்ணா கேள்வி எழுப்பினார். எஸ்.ஆர்.பொம்மைவழக்கிற்குப் பின் ஆட்சிக் கலைப்புகள் குறைந்தன.

அரசியல் சாசனத்தில் நம்முடைய மாநிலங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா, இந்தியா ஒருஃபெடரல் அமைப்பா அல்லது ஒன்றிய அமைப்பா அல்லது குவாசி ஃபெடரலா அல்லது குவாசி யூனியனா என தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே அதிகப்பக்கங்களும் பிரிவுகளும் கொண்டது. இதுவரை சுமார் 130 திருத்தங்கள் 75
ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில, மசோதாக்களாக நிலுவையில் உள்ளன.

இப்படி தென் தமிழகத்தின் தொன்மைமிக்கப் பிரச்சினைகளை எல்லாம் தெளிவாக நாடாளுமன்றத்தில் விளக்கி விரைவான தெளிவு பெரும் வகையில் சபையில் உரையாடவேண்டும். அதுதான் திரவிடியன் ஸ்டாக்.

திரவிடியன் மாடல் என்றால், மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நமது மாநிலத்தை நடத்தியும், இந்தத் தடைகளையும் மீறி சீரான போக்கில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதை குறிப்பிடலாம்.

மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத் திட்டங்களை திராவிடர்களே அதிகம் கொண்டு வந்தனர். உதாரணமாக, குடிசைமாற்று வாரியம், சமச்சீர் கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம், சத்தான சத்துணவுத் திட்டம் போன்ற பலதிட்டங்களைக் குறிப்பிடலம்.

தமிழகத்து மக்களின் பொருளாதார நிலையைஉயர்த்த வேண்டும் என்ற நிலையில்கொண்டுவருவதுதான் திரவிடியன் மாடல் என்பது. திரவிடியன் ஸ்டாக் என்பது நம் உரிமைகளை நாடே கேட்க உரக்கமாக எடுத்துரைத்து, உரிமைகளைப் பெறுவது. அதாவது, உரிமைக்குக் குரல் கொடுப்போம்…உறவுக்குக் கைகொடுப்போம்.

திரவிடியன்மாடல் என்பது நம் வாழ்நிலையை உயர்த்திக் கொள்வதற்கான கடப்பாடுகள்என்ன, திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வழிவகைகள் என்ன என்பதை ஆய்ந்தறிந்து கொள்வது.

தமிழ்நாட்டின் பல திட்டங்கள்நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கக்கூடிய விமானநிலையங்களை நாம் முழுவதுமாகப் பயன்படுத்துகிறோமா…. இல்லையே! சென்னை அருகே சோழபுரத்தில் உள்ள விமான நிலையம், உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான நிலையம், செட்டிநாடு, கோவில்பட்டி, கயத்தாற்றில் விமான நிலையங்கள் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சேவையில்லாத தேவையைத் தேடிக் கொண்டிருக்கும் இந்த நிலையங்களை, விமான பழுதுபார்க்கும் இடமாக, விமானத் தொழில்நுட்பக் கல்லூரியாக, விமானப் பணிமனையாக, கார்கோவாக, விமான ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிலையமாக… என பல்வேறு விதமாக அவ்விடங்களை நாம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.

திராவிடியன் ஸ்டாக் மற்றும் திராவிடியன் மாடல் என்பதற்கான என் விளக்கத்தின் அடிப்படையில் இனி வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக வரலாறு, அரசியல் பொருளாதாரம், புவியியல் ஆகியவைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டுக்குத் தேவையானவற்றைப் பெற குரல் கொடுப்பர் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் செய்ய வேண்டிய முன்னுரிமைப் பணிகள் விளக்குகிறேன்.

• நாடு விடுதலை பெற்றபோது, தமிழகத்தில் 60 ஆயிரம் ஏரி, குளங்கள் இருந்தன. இன்றைக்கு அவற்றில் சரிபாதி தான் உள்ளன. நீர்நிலைப் பகுதிகளில் கட்டிடம் கட்டும் வழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும். விவசாயத்தில் பாசன முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

• பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும். கழிவறைகள், விளையாடும்இடங்கள் ஆகியவை எல்லாப் பள்ளிகளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.மாணவர்களுக்கு திறம்படக் கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு தொடர்பயிற்சி அளிக்க வேண்டும். சத்துணவுத் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். காலைச் சிற்றுண்டியும் அளிக்கவேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். 9-ம் ஆம் வகுப்பு படிக்கும்போதே ஒருமாணவர் தன்னுடைய துறையைத் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். 11-ம் வகுப்பில் குறிப்பிட்ட ஒரு பாடத்தை எடுக்கும் மாணவர், பல சமயம் முறையான திட்டம் இல்லாமல்தான் எடுக்கிறார். 11-ம்வகுப்பில் சேரும்போது செய்யும் தவறு தொடர்ந்து அவரைப் பாதிக்கிறது. எனவே 10-ம் வகுப்புக்குப் போவதற்கு முன்பே ஒரு மாணவருக்கு தன்னுடைய துறை எது என்பது பற்றிய திட்டம் ஓரளவேணும் இருக்க வேண்டும்.

• ஆற்றில் மணல் எடுக்கும் நடவடிக்கைகள், சொத்துரிமை, பத்திரப்பதிவு போன்றவை முழுக்க முழுக்க அரசின் நேரடிக்
கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும்.

• குறு, சிறு மற்றும் உள்ளூர் தொழில்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். மது பயன்பாட்டையும் விற்பனையையும் குறைக்கும் விதத்தில் மது விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையும், அதன் விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும்.

• அரசு அலுவலகங்கள், பொதுமக்களுக்கான தீர்வு கிடைக்கும் களமாகத் திகழ வேண்டும். நிர்வாகத் தாமதம், அலைகழிக்கவைத்தல், லஞ்ச ஊழல் பெறுவது போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

• விவசாயிகளுடைய சிக்கல்கள் சிரமங்களைப் போக்கி விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையும், விவசாய இடுபொருட்களுக்கு நியாமான விலையும் இருக்கும் வகையில் அணுகுமுறைகள் வேண்டும்.

• பெண் கல்வி, பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு, பெண் விடுதலை போன்ற செயல்பாடுகளில் உறுதித் தன்மையை பலப்படுத்த வேண்டும்.

• இயற்கையையும் சுற்றுச்சூழலையும்பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும்தவிர்க்க வேண்டும்.

• தமிழகத்தின் மரபுச் செல்வங்களான கோயில்கள், சிற்பங்கள், மருத்துவம், உணவு வகைகள், பயிர்கள், கைவினைக் கலைகள் போன்ற தமிழ் கலாச்சார வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாப்பதுடன் அவற்றை மேம்படுத்த வேண்டும்.

• மீனவர் பிரச்சனை…..நெசவாளர் பிரச்சனை…கச்சத்தீவு…

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அத்துமீறலும் தமிழகப் பாதுகாப்பு குறித்தும்…ஈழத்தமிழர்கள் இலங்கையில் தாங்கள் விரும்பும் அரசியல் நிலைப்பாட்டிற்கு பொது வாக்கெடுப்பு, அங்கு நடைபெற்ற இன அழிப்புக் குறித்தான பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும்.

• தடைகளைத் தாண்டி தார்மீகக் கடமையுடன் குரல் எழுப்பியும், இன்று வரை கிடப்பில் கிடக்கும் தமிழகத்தின் சில உரிமைகளையும் இங்கு பட்டியலிடுகிறேன். முழுமையாக, தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகள், சிக்கல்கள் அடங்கிய என்னுடைய விரிவான நூல் விரைவில் வெளிவர இருக்கிறது.

• புதுக்கோட்டை நெடுவாசல், சீர்காழி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் விவசாயம் பாதிக்கக்கூடிய வகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடிநீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயம் பொய்த்துப் போகும்.

• திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருமேகரும்மலை, ரெங்கமலை அருகே உலோகங்கள் எடுக்கும் திட்டத்தினால் அப்பகுதி விவசாயமே பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி பல இடங்களில் தமிழகத்தில் இந்தபிரச்சனைகள் உள்ளன.
• தாதுமணல் கொள்ளையைத் தடுப்பதுடன், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி மணல் ஆலையைப் புதுப்பிக்கும் முயற்சியை
விரைவாக எடுக்க வேண்டும்.

• கேரள மாநில இறைச்சி மற்றும் மருத்துவமனைக் கழிவுகள் தமிழக எல்லையில் கொட்டப்படுவதைத் தடுக்கவேண்டும்.

• மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுச் சூழலையும், வனத்தின்வனப்பையும் பாதுகாத்திட வேண்டும்.

அங்கு வாழும் விலங்கு மற்றும்பறவைகளைப் பெருக்க உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். இதுகுறித்தானஎன்னுடைய வழக்கு நிலுவையில் உள்ளது.

• கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மூடப்பட்டு வரும் நெசவு ஆலைகள், துணி உற்பத்தித் தொழிற்சாலைகள் ஆகியவை புனரமைக்கப்பட வேண்டும்.

• நாங்குநேரியில் ரயில் இன்ஜின் தொழிற்சாலைத் திட்டம் நடைமுறைக்குவர வேண்டும். நாங்குநேரியில் தொழிற்பூங்கா, கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்கா ஆகியவை செயல்பாட்டுக்கு வர வேண்டும்.

• மதுரை விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை மேலும் வேகமெடுக்க வேண்டும்.

• கிழக்கு கடற்கரைச் சாலை, இராமநாதபுரம்–குமரிமுனை மற்றும் திருச்சி நான்குவழிச்சலை ஆகியவை மக்கள் செயல்பாட்டுக்கு விரைவில் வரவேண்டும்.

• சேது சமுத்திரத் திட்டம் 100 ஆண்டுக்கு மேலாக முடக்கப்பட்டுவிட்டது. கடலூர், நாகை, குளச்சல் துறைமுகத் திட்டங்கள் பல ஆண்டுகளாகவே கிடப்பில் உள்ளன.

மூக்கையூர் காட்டுப்பள்ளி, எண்ணூர் சிறு துறைமுகம், திருச்சோபுரம், சிலம்பிமங்கலம் கப்பல்கட்டும்தளம், பரங்கிபேட்டை, காவேரி (நிலக்கரியை கையாள்வதற்காக பூம்புகார் அருகே நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது), வணகிரி, திருக்கடையூர், திருக்குவளை, புன்னக்காயல், மணப்பாடு, கூடங்குளம், பனையுர், உடன்குடி, வாலிநோக்கம்போன்ற சிறு, மீன்பிடித் துறைமுகத்திட்டங்களை சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

• மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைஅமைதல். • திருநெல்வேலியில் ஐ.ஐ.டி அமைத்தல். • புதுவை மாநில அந்தஸ்து பெறுவது.

• தலைவர் கலைஞரின் கனவை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் இந்திய வரலாற்றில் முதல்முதலாக அமைக்கப்பட்ட சான்றோர் அவையானசட்ட மேலவையை மீண்டும் அமைப்போம்.

• உச்ச நீதிமன்றத்தின் பிரிவு ஒன்றை சென்னையில் அமைக்க வேண்டும். இப்படியான தமிழக உரிமைகளின் பட்டியல் நீண்டது. அனைத்தையும் இங்கே குறிப்பிட வாய்ப்பில்லை.

இவற்றை நடைமுறைப்படுத்த போர் குணத்தோடு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ன்னெடுப்போம்.
இதுவே, திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல் என்ற கோட்பாடு.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தும், கை ரிக்ஷாவை ஒழிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் கைரிக்ஷா ஒழிக்கப்பட்டது. அதேபோல இலவச மின்சாரத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கியது கலைஞர் ஆட்சியில்தான். அதேபோல பல்வேறு முன்மாதிரி திட்டங்களை இந்தியாவிற்கு முன்னெடுத்ததும் கழகஆட்சியில்தான். அதுவே ஒரு நீண்டபட்டியலாக இருக்கும்.

இன்றைக்கு தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திமுக ஆட்சியில், திரவிடியன் மாடல் என்ற நிலையில் சில அரசியல், பொருளாதார ரீதியான விடயங்கள்.

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றபோது தமிழக அரசின் கடந்த ஆட்சிக் கால கடன்கள் ஏறத்தாழ 7,77,800 கோடிகள் கடந்த 2020-21 நிதிநிலை அறிக்கையின் படி இருப்பதாக தகவல்.

இந்தக் கடனோடு மாதாந்திரம், வருடாந்திரம் வட்டியும் கூடி கடன் சுமைநாளுக்கு நாள் கூடுகின்றது. இந்தக் கடன்கள் மாநில அரசு மற்றும் அதைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை உள்ளடக்கியதாகும்.

தமிழக அரசின் கீழ் 51 வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்த நிறுவனங்களின் மொத்தக்கடன் 2018 மார்ச் வரை 168 லட்சம் கோடிகள் ஆகும். இதற்கு அடிப்படை காரணம் நிறுவனத்தின் வருவாயை விட நடப்பு செலவுகள் அதிகமாக உள்ளது.

அதாவது வருமானத்தைவிட செலவுகள் அதிகம் உள்ளது. கவலை அளிக்கும் விதமாக தற்போது தமிழக நிதி நிலை திருப்திகரமாக இல்லை.

நிலுவையில் மற்றும் செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ. 82,730 கோடி (மாநிலஅரசின் வட்டி ரூ. 53,600 கோடி மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களின் வட்டி ரூ. 29,130 கோடி) ஆகும். இன்றைய நிலவரப்படி நிதி நிலைமையைப் பார்த்தால் மாநிலத்தின் கடன் ரூ. 8,00,000 கோடியும் மற்றும் வட்டிக்கான செலவினங்கள் ரூ.80,000 கோடியுமாக இருக்கும்.

சுமாராக மாநில குடிமக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ. 1,00,000த்துக்கும் மேல் கடன் சுமை உள்ளதாகக் கருதலாம்.
2020-21-ம் ஆண்டின் வருவாய் ரூ. 3,13,700 கோடி (மாநில வரிகளில் இருந்து ரூ. 1,09,000 கோடி, மத்திய அரசு வரியில் இருந்து ரூ. 23,039 கோடி மற்றும் இதர வருமானங்கள் ரூ.1,87,000 கோடி) ஆகும்.

நிதி பற்றாக்குறைரூ.59,000 கோடியாக இருந்தது. இந்தக் கடன் சுமைகளைத் தீர்த்து நிலைமையைச் சமன்படுத்த வேண்டியது மட்டுமல்லாமல், கடந்த ஆட்சியில் நடந்த பிழைகளையும் திருத்த வேண்டிய நிலையில் தமிழக முதல்வர் இருக்கின்றார்.

தமிழக அரசில் ஏறத்தாழ 34 துறைகள் உள்ளன. இதில் சமூக நலத்துறை, புள்ளிவிவரத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை.

மற்ற துறைகளிலிருந்து தான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி வகையிலும் தமிழகத்திற்கு வரவேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.

சில புள்ளி விவரங்கள் தமிழக அரசின் கடன்நிலவரம் 2021 முடிய 4.85 லட்சம் கோடியைத் தாண்டுm என்று சொல்லுகின்றது. ஆனால் கடன் குறித்து வெவ்வேறு இலக்காக புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

தமிழக அரசின் கடனும், தமிழக அரசின் பொது நிறுவனங்களின் கடனும் சேர்த்தால் 7 ஆயிரம் கோடியைத் தாண்டும் எனக் கூறுகிறது ஒரு கணக்கு.

இதில் எந்தப் புள்ளிவிவரம் சரி என்று தெரியவில்லை. இந்திய செலவுத் தணிக்கைக் குழுவின் (The Comptroller and Auditor General of India) சமீபத்திய அறிக்கையின்படி, தமிழகத்தின்2020-21 ஆம் ஆண்டின் மொத்த வருவாய் 1,74,256 கோடி ரூபாய்களாகவும், மொத்த செலவினங்கள் 2,66,561 கோடி ரூபாய்களாகவும், மொத்த நிதிப் பற்றாக்குறை 92,305 கோடி ரூபாய்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரே நிதியாண்டில் ரூ13 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறையின் அறிக்கை கூறுகின்றது. அதுபோல மருத்துவ காப்பீடு திட்டத்திலும் 1000 கோடி பயனற்ற முறையில் சென்று விட்டதாகவும் 2019ஆண்டிலேயே 4 லட்சம் கோடி தமிழகஅரசின் கடன் எட்டப்பட்டுள்ளதாகவும் தணிக்கை துறை தெரவித்துள்ளது

மேலும் தமிழ்நாடு அரசின் கடன் சுமை கடந்த2019-ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்த காலத்திலேயே 4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்தத் தகவல் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் மொத்த கடன் சுமை 2018-ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்த காலத்தில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 426.63 கோடியாக இருந்தது. இந்தக் கடன் அளவு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 599.33 கோடியாக இருந்தது.

அதாவது, ஒரே நிதியாண்டில் ரூ.43 ஆயிரத்து 172.07 கோடி கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது. இதில், பல்வேறு அம்சங்கள் மூலமாக உள்நாட்டிலேயே பெறப்பட்ட கடன்கள் 2018-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 634.40 கோடியாகவும், 2019-ஆம் ஆண்டு மார்ச்சில் 3 கோடியே 4 லட்சத்து 350.06 கோடியாகவும் இருந்தது என்று தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகரிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு மாரச்சில் ரூ.4 லட்சம் கோடியாக இருந்த கடன்சுமை, கொரோனா போன்ற காரணங்களால் நிகழ் நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் சுமையின் அளவு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும்.

இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பெறும் கடன் நிதி வட்டி விகிதம் அதிகரித்துக் கொண்டு போகிறது. கடந்த கால ஆட்சிகளால் தமிழக அரசின் நிதி சந்தை மீது வைத்துள்ள நம்பிக்கையும் குறைந்துவிட்டது.இப்படியானநிலையில் இன்றைக்கு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த நிறுவனங்களை சீர்திருத்தி நடத்த வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது. நடப்பு நிதியாண்டில் தேவையில்லாத செலவுகளை ஒதுக்க வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு கடந்த காலங்களில் தமிழகத்தில் கூடுதல் மின்சாரம் வாங்கியதற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின்சாரம் கூடுதலான விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

எப்பொழுதெல்லாம் அரசு நிறுவனங்கள் விலை நிர்ணயத்தில் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் ஏற்படும் நட்டத்தை தமிழக அரசு தலையில் தான் ஏறிவிடுகிறது.

இதுபோன்ற தேவையில்லாத செலவினங்களை கவனிக்காமல், பொறுப்பில்லாமல் கடந்த காலத்தில் நடந்ததால் இப்படி நிதி சுமை ஏறிவிட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் அதைச் சார்ந்தவையும், தொழில்கள் அதைச் சார்ந்த கட்டுமான அமைப்புகளும், போக்குவரத்து தொழில்நுட்பத் துறைபோன்ற துறைகளும் தான் கைகொடுக்கின்றன.

இவற்றில் சேவை மற்றும் தொழில் துறைகள்தமிழகத்தில் முன்னிலையில் இருக்கின்றன. விவசாயத்தில் மாநில வருவாய் (ஜிடிபி) மொத்தம் சுமார் 8 விழுக்காடு ஆகும். ஆனால் இதைச் சார்ந்துள்ள மக்கள் தொகை அதிகம்.

பருத்தி, நிலக்கடலை, பயிர் உற்பத்திக்கு வசதியான நீர்வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அது மட்டுமல்ல நெல், கரும்பு போன்ற பயிர்களோடு காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்களை தமிழகத்தில் அதிகமாகப் பயிரிட முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் பழவகைகள் அதிகமாக விளைந்தாலும் அதைவிற்பனை செய்யக்கூடிய வகையில் குளிர்சாதனத்துடன் கூடிய ரயில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சிறு குறு தொழில்கள், சுய உதவி குழுக்கள், தொழில் முனைவோருக்கு நீண்ட காலகடன் தொகை குறைந்த வட்டியில் கொடுக்க வேண்டும். விவசாய இடுபொருட்களை மானிய விலையில் கொடுப்பதும், நீர் மேலாண்மையைச் சரிவர சீர்திருத்தி பயன் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விளைந்த பொருள்களை உழவர் சந்தை போன்று சந்தைப்படுத்தலும் உள்ளிட்ட பிரச்சினைகளை மாநில அரசு கவனிக்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழக அரசின் மீது தற்போதுள்ள 2.85 லட்சம் கோடி கடன் இந்த நிதியாண்டில் 3.50 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம்.

மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல் பொருட்கள் தமிழகத்தில் அதிகம். அதை விற்பனைப் படுத்தக் கூடிய வகையில் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இறக்குமதியை விட ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு தங்களது சொந்த வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. மறுபுறம் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி எடுக்கப்படவில்லை.

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஒய்வூதியங்கள், கடன் சேவை, மானியங்கள் போன்ற மூன்று செலவினங்களுக்கு மொத்த வருவாய்க்கும் அதிகமாக இடைவெளிகள் உள்ளன. புதுக்கடன் வாங்க நேர்கிறது. புதிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிட முடியவில்லை.

மாநிலஅரசின் நிதித்துறையின்; வலுவைப் பொறுத்தே எந்த ஒரு மாநிலமும் நல்லமுறையில் செயல்பட முடியும்.

நம் மாநிலத்தின் நிதி ஆதாரங்களாக உள்ளவை:

1. உள் மாநில வருவாய்,
2. மத்திய அரசு வருவாய்,
3. வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதிநிறுவனங்களிடமிருந்து பெறும் கடன். இந்தமூன்று ஆதாரங்களையும் வலுப்படுத்த சீரானமாநில நிதி அமைச்சகம் வேண்டும்.

தகுதியானவர்களுக்கு மட்டுமே நலத்திட்டங்கள்...

இவை வரவேற்கத்தக்கவை என்றாலும், இலக்கின்றி அனைத்து மக்களுக்கும் இவற்றை வழங்குவது ஏற்புடையதன்று.

இத்தகைய நலத்திட்டங்கள், சமூகத்தின் பலவீனமான மக்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்தையும் உள்ளடக்கிய பொது விநியோக அமைப்பு (PDS) அல்லது அனைவருக்கும் மின்சாரம், பஸ்கட்டணம், சொத்து வரி போன்ற பொதுப் பயன்பாடுகளுக்கான கட்டணங்களையும், விலைகளையும் அதிகரிக்க அரசு தைரியமாக முடிவெடுக்க வேண்டிய தருணமிது.

கோவிட் 19ல் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அந்த வகையில் பொதுச்சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு என்பதைஅடிப்படை வசதிகளாக எளிதில் எப்போதும்கிடைக்க வேண்டும்.

பொதுச் சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, விவசாயம் போன்றவற்றிற்கு தாராளமான நிதி உதவி கிடைத்து சாமானியனுக்கு அதன்பலன்சேரக் கூடிய அளவில் இந்த மூன்று துறைகளும் இயங்க வேண்டும்.

தமிழக அரசின் நிதி ஆதாரங்களை எப்படிப்பெருக்கலாம்? - சில விடயங்கள்:

1. குறைந்த விலையில் குடியிருப்புகள் FSI 6 என 550 சதுர அடியில் தமிழகம் முழுவதும் 25,00,000 வீடுகளை தனியாருடன் இணைத்து கட்டித் தரலாம். இப்போது அதிகபட்சம் FSI 2 ஆக உள்ளது. அடித்தட்டு மக்களுக்கு சொந்த வீடு வாங்கும்கனவை இது நிறைவேற்றும். அதில் மறு சுழற்சி நீர், சூரிய மின்சாரம் என நவீன முறையில் கட்டித் தரப்படும். விலை அவர்களின் வாங்கும் வசதிக்கு ஏற்றபடி இருக்கும்.

2. சேம நிதி: ஒரு கோடிப் பேர் சுயமாக தொழில் செய்கிறார்கள். உதாரணம் பெட்டிக் கடைவைத்து இருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள்சுயமாக கடை வைத்து இருப்பவர்கள், காய்கறி பழம், உணவு விடுதி வைத்து இருப்பவர்கள் மற்றும் இவர்களிடம் பணி புரிபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாதா மாதம் பணம் செலுத்த வேண்டும் அரசும் அதற்கு இணையாகப் பணம் செலுத்தும். அந்தப் பணத்தில் அவர்கள் வீடு கட்ட முன்பணம் கிடைத்து விடும்.

3. வெளிநாட்டு வாழும் தமிழர்கள் நலன்: ஐம்பது லட்சம் தமிழர்கள் வெளி நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் சேம நிதிக் கணக்கு தொடங்கலாம். அது USD வெளிநாட்டு ரூபாயாக இருக்கும். அவர்கள் 75 சதவீதம் செலுத்தினால் தமிழக அரசு 25 சதவீதம் செலுத்தும். அந்தப் பணத்தில் அவர்கள் தமிழகத்தில் வீடு மற்றும் சொத்து போன்ற வற்றில் மூலதனம் செய்யலாம்.
இப்போது M5 வரை வந்து விட்டது. ஓர் நூறு ரூபாய் ஒரு நாளைக்கு எத்தனை நபர்களிடம் கை மாறுகிறதோ அந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கும்.

இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட பணம் அதிகபட்சம் பதினைந்து லட்சம் கோடி ரூபாய்கள் தான். ஆனால் ஒரு நாளைக்கு டிரில்லியன் கணக்கில் பரிவர்த்தனை ஆகிறது.

ஆங்கிலத்தில் ‘லிக்யூடிட்டி’ என்பார்கள். பணப்புழக்கம் அவசியம் இருக்க வேண்டும். தாராளமயமாக்கலுக்குப் பின் பணம் ஒரே இடத்தில் தேங்காமல் அந்தப் பணம் 24 மணிநேரமும் சுற்றி வர வேண்டும். அந்தப் பணச் சுற்றே தனி மனிதப் பயன்பாடு வருவாய் என்ற நிலையில் சுழலுகின்றது.

பல பணப் பரிவர்த்தனைகள் பல முறை மாறி சுற்றுகளாக வரும்போது இயற்கையாகவே பணப்புழக்கம் கூடுதலாகின்றது. இதனால் நாட்டின் வருவாயும் நேர்முக மறைமுக வரிகளாக கூடுகின்றது.

மக்களுக்கும் ஒருபக்கம் செலவீனம். இன்னொரு பக்கத்தில் இன்னொரு தரப்பினருக்கு வருமானமும் கிடைக்கின்றது.
இதைத்தான் சீனப் பழமொழியில் சொல்வார்கள். “பேப்பர் கரன்சி காற்றில் ஓடுவதைப் போல சுற்றி ஓட வேண்டும். 100, 500, 1000 என்ற வகையில் பணம் காற்றில் ஓடிக் கொண்டே இருக்கும்” என்று. அதேபோல சிறு மதிப்பீட்டில் உள்ள நாணயங்கள் ஒரே இடத்தில் தங்கலாம் என்பது சீன மக்களின் பார்வை. பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையும் கூட.

மஹாராஷ்டிரா மாநிலம் தான் ஐந்து லட்சம் கோடிக்கு வரவு செலவு திட்டம் தயாரித்தனர். தமிழக அரசு இந்த ஆண்டில் இதைப் பின்பற்றலாம்.

தேவை தொலை நோக்குத் திட்டங்கள்: மாநிலத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒருமித்தகருத்தை உருவாக்குவது அவசியம். 1996-2001-ல் முதல்வர் கலைஞர் ஆட்சியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் சென்னை பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை திட்டத்தைத் தயாரிக்க ஒரு நிபுணர் குழுவை நியமித்தார்.

ஆனால், அவருக்கு பிறகு பதவியேற்ற ஜெயலலிதா 2001-ல் அரசு அதனை கைவிட்டது. மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அரசு, 2023-ல் தமிழகம் (Vision2023) என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2017-ல் வெளியிட்டது.

ஆனால், இவை இன்றளவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. செயல் வடிவம் பெறவில்லை. தற்போது தமிழ்நாடு 2030 மட்டுமல்ல 20-40 வரையான ஒரு தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் மால்தஸ் கோட்பாடுகளின்படி மக்கள் தொகை பெருக்கம் கொண்ட இந்தியாவில் இப்படி பொருளாதார சிக்கல்கள் அவ்வப்போது பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படிச் சுமையான காலகட்டத்தில் அரசு வழங்கும்இலவசத் திட்டங்க்ள் சலுகைகளை நிறுத்தியும் விட முடியாது. மதுவிலக்கு என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

நிதி ஆதாரம் இருந்தால் தான் மாநிலம் திடமாக எதையும் முன்னெடுக்க முடியும். இதற்கு ஆதாரங்கள் மாநில உள்வருவாய், மத்திய அரசு மூலம் வரும் வருவாய் அயலகக் கடன்கள், நிதிநிறுவனங்களிடம் பெறும் கடன்கள் இதைக் கொண்டுதான் திட்டங்களைத் தீட்டமுடியும். அப்போது தான் ஒரு ஜனநாயகத்தில் மக்கள்நல அரசாக திகழ முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அண்டை மாநிலங்கள்கேரளா, கர்நாடகா, ஆந்திரா போல நீர்வளம், வனவளம், தாதுவளம் நமக்கு அதிகமில்லை. மனித ஆற்றல் மட்டும் இருக்கின்றது. இதோடு பெறப்படுகிற நிதி ஆதாரங்களைக் கொண்டு நிர்வாகத்தை நடத்தவேண்டிய சூழல்.

பணப்புழக்கம் அவசியம். அந்தப்பணப்புழக்கம்வேண்டும் என்றால் தொழில்கள் சிறக்க வேண்டும். திருப்பூர் போன்ற நகரங்களில் வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்கள்பணியாற்றுகின்றனர்.

மாநில சுயாட்சி மாநிலங்களுக்கு அதிகாரம்மத்திய தொகுப்பிலிருந்து சமன்பாடான நிதி ஒதுக்கீடு மாநிலங்களிடையே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1960-களிலிருந்து எழுந்துள்ளது.

அந்தவகையில் மத்திய தொகுப்பிலிருந்து வருவாயைப் பெறுவதில் மேற்குவங்க முதல்வரான ஜோதிபாசு தனது அரசின் வெள்ளை அறிக்கை வாயிலாக மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்குகின்ற நிதி ஓரளவு அதிகம் பெறக்கூடிய வகையில் போராடிப் பெற்றார்.

இன்றைக்கு தொற்று நோயினால் அங்கும்தொழில்கள் முடங்கிவிட்டன. இதையும் சீர்செய்ய வேண்டும்.

“இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

- குறள் 385:

அதாவது முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கானவருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

திராவிடம் வழியே மக்கள் நல புரட்சியை ஏற்படுத்துவோம்... இந்தியாவில் புரிந்துணர்வுடன் வாழ்வோம்!

-கட்டுரையாளர்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x