Last Updated : 26 Jul, 2022 04:41 PM

3  

Published : 26 Jul 2022 04:41 PM
Last Updated : 26 Jul 2022 04:41 PM

PS for 2K கிட்ஸ் - 6 | பொன்னியின் செல்வன் - பழுவேட்டரையர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா?

ஆ.மதுமிதா

'ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாக இருந்தால், அவனைத் தடுத்து நிறுத்தி, குந்தவை தேவி சொர்க்கத்துக்கு அவனைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுவார். அது ஒருவித சக்தி. நந்தினி என்ன செய்வாள் தெரியுமா? அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லி சாதித்து, அதை நம்பும்படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள்!”நந்தினியைப் பற்றி ஆழ்வார்க்கடியான் கூறியது இது.

யோசித்துப் பார்த்தால், இதைக் கேட்ட வந்தியத்தேவனின் உடம்பு சிலிர்த்தது போன்றே நமக்கும் சிலிர்க்கிறது. உண்மையில் அவன் சொன்னதுபோல் கந்தமாறன், பார்த்திபேந்திர பல்லவன், ஆதித்த கரிகாலன் போன்ற பல வீரர்களை தன் வலையிலே விழ வைத்து நூலில் கட்டிய பொம்மைகளாக ஆட்டி வைத்தவள்தான் நந்தினி. இதில் நம் பெரிய பழுவேட்டரையரும் நந்தினியிடம் சிக்கிக் கொண்டார். (தப்பியவர் நம் வந்தியத்தேவன் மட்டும் தான்!) நாம் இந்த அத்தியாயத்தில் பழுவேட்டரையர்களைப் பற்றி பார்ப்போம்.

"உறையூருக்குப் பக்கத்தில் வடகாவேரியின் வட கரையில் உள்ள பழுவூர், அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப்புகழ் பெற்றிருந்தது. அக்குடும்பத்தார் சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்து வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை, வீரப்புகழ் இவை காரணமாகவும், பழுவேட்டரையர் குலம் அரச குலத்தின் சிறப்புக்களெல்லாம் பெற்றிருந்தது. தனியாகக் கொடி போட்டுக்கொள்ளும் உரிமையும் அந்தக் குலத்துக்கு உண்டு" என்று பழுவேட்டரையர்களை பற்றி ஆசிரியர் கல்கி விவரிக்கிறார்.

பெரிய பழுவேட்டரையர், இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில், 'அவருக்கு இணையான வீரர் சோழநாட்டில் யாருமில்லை' என்று புகழ் பெற்றவர். சோழநாட்டு அரசாங்கத்தில் மிக உன்னதமான பல பதவிகளை வகிப்பவர். அவர் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி; தான்யாதிகாரி. தனபண்டாரமும் தான்ய பண்டாரமும் அவருடைய அதிகாரத்தில் இருந்தன. அரசியலின் தேவைக்குத் தகுந்தபடி திறை விதித்து வசூலிக்கும் அதிகாரமும் அவரிடம் இருந்தது. எந்தச் சிற்றரசரையும், கோட்டத் தலைவரையும், பெரிய குடித்தனக்காரரையும், "இவ்வாண்டு இவ்வளவு திறை தரவேண்டும்!" என்று கட்டளையிட்டு வசூலிக்கும் உரிமை அவருக்கு இருந்தது.

ஆகவே, சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்தபடியாக சோழ சாம்ராஜ்யத்தில் வலிமைமிக்கவர் பழுவேட்டரையர்தான். இப்படியாக பெரிய பழுவேட்டரையரைக் குறித்தும், அவரது செல்வாக்கினை குறித்தும் விவரித்துக் கொண்டே செல்லலாம்.

ஆனால், கதையின் முதல் பாதியில் ஒருவராகவும், மீதிப் பாதியில் வேறொருவராகவும் படித்தவர்களுக்கு பெரிய பழுவூரார் தோன்றுவார். சமகால ஒப்பீடாகச் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிகாந்தை போல என்று சொல்லலாம். சந்திரமுகியில் வரும் வேட்டையன் மகாராஜா போல 'ராஜாதி ராஜ... ராஜ கம்பீர' என்று பின்னால் துதி பாட கம்பீரமாக நடந்துவரும் ரஜினி இவர். சந்திரமுகியை கொன்றாலும் அவரை ஏனோ நமக்கு பிடிக்கும் இல்லையா?

மார்வெல் படங்களில் வரும் 'லோக்கி' (Loki) கதாபாத்திரம் என்னதான் குறும்புகளும் சூழ்ச்சிகளும் செய்தாலும், இறுதியில் ஒரு ஹீரோவாகி நம் மனங்களை கொள்ளைக் கொண்டு இன்று வரை பிரபலமான Anti villian-களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார் அல்லவா? இவர்களையும் விட ஒரு 'மாஸ்' ஆன கதாபாத்திரம் பெரிய பழுவேட்டரையர். கதையை முழுதும் வாசித்தவர்கள் இவரை வில்லனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே சொல்வார்.

இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் 64 போர் விழுப்புண் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர். வந்தியத்தேவன் உட்பட பல இளைஞர்கள் வியந்து பார்த்தே உத்வேகமடையும் மதிப்புக்குரிய ஒரு வீரர். 'கிழவன்' 'முதியவர்' என்று முதுகுக்குப் பின் கிண்டலடித்தாலும் அவர் முகத்துக்கு நேர் எகத்தாலம் பேசும் தைரியம் ஒருவருக்கும் இல்லை. இவரை முகத்துக்கு நேர் 'தாத்தா' என உறவு முறை சொல்லி (கிண்டலாகவே) அழைத்த ஒரே ஆள் ஆதித்த கரிகாலனாக மட்டுமேதான் இருக்க வேண்டும்.

இப்பேர்பட்ட வீரரையும் கதையின் பாதி வரையிலேயே சோழ நாட்டுக்கு எதிராக சதி திட்டம் தீட்டச் செய்து வில்லனாக ஆக்கி விட்டாள் நந்தினி. பாவம் பெரிய பழுவேட்டரையரை இவளிடமிருந்து காப்பாற்ற ஒருவரும் வரவில்லை.

இல்லை இல்லை! ஒருவர் இருக்கிறார், இதோ வந்துவிட்டாரே ! அண்ணன் மேல் பயபக்தியும் பாசமும் கொண்டவர் சின்னப் பழுவேட்டரையர்.

அண்ணன் காலால் இட்ட பணியை தலையால் ஏற்றி செய்து முடிப்பார் தஞ்சைக் கோட்டைத் தளபதியான சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி ஒருவரும் உள்ளே வரவோ வெளியே செல்லவோ இயலாது. சந்தர சோழரை பழுவேட்டரையர்கள் சிறைப்பிடித்து வைத்துள்ளனர் என்று தஞ்சைக்குள் பேசுமளவிற்கு கெடுபிடி செய்கிறார்.

நந்தினியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சோழ நாட்டுக்கு எதிராக செயல்படுவது பிடிக்காமல், அண்ணனை எச்சரித்துக் கொண்டே இருக்கிறார் சின்ன பழுவேட்டரையர். சுந்தர சோழரை கொல்ல முயன்றவனை, ஒரு சிறுமியின் உதவியை நாடுவதா என்றெல்லாம் எண்ணாமல் பூங்குழலியின் உதவியுடன் தேடிச் செல்கிறார்.

வந்தியத்தேவனை பெரிய பழுவேட்டரையர் முதன்முறை பார்க்கும்போது "நம் திட்டங்கள் இவனால் தடைபடுமோ?" என்று யோசித்தால், வந்தியத்தேவனை கண்டு சின்ன பழுவேட்டரையரோ "இவனைப் போன்ற ஒரு துடிப்பான இளைஞன் நம் படையில் வேண்டும்" என்று யோசிக்கிறார்.

நந்தினியின் பிடியில் சிக்கி பெரிய பழுவேட்டரையர் புத்தி கலங்கி இருக்கையில், தம்பியோ தெளிந்த நீரோடையைப் போலிருந்து அண்ணனை நந்தினியின் மாயவலையில் இருந்து விடுவிக்க நினைக்கிறார்.

நந்தினியின் எதிரே இருக்கும்போது தன்னுடைய அறிவு மயங்கிப் போவதும், தன் தம்பி சொன்னது சரியாகத்தான் இருக்குமோ என்று தன் தம்பியின் அறிவுரையை கேட்காமல் இருந்ததை நினைத்தும் பெரிய பழுவேட்டரையர் வருந்துகிறார்.

மலைக் குகையில் தன் அண்ணன் உயிரோடு இருப்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தாலும், அண்ணனை இப்போது பார்க்க உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்கிறார் சின்ன பழுவேட்டரையர். அவ்வளவு பாசமும் பயபக்தியும் தன் அண்ணன் மீது. அதனால் தான், மதுராந்தகனை அரியணையில் ஏற்றுவதை தாண்டி தங்களை ஏதோ சூழ்ச்சி செய்ய வைக்கும் நந்தினியின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று எச்சரித்தபோது அண்ணன் தன்னை கடிந்து பேசினாலும் அவரைக் காப்பாற்ற ஏதாவது வழி கிடைக்குமா என்றே வருந்துகிறார் சின்னவர்.

அருள்மொழிவர்மன் - ஆதித்த கரிகாலனின் அண்ணன் தம்பி உறவு, கதையில் இருவரும் பேசிக்கொண்ட தருணங்கள் கதையில் மிகுதியாக இல்லாத குறையை பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையரின் உறவு தீர்த்துவைக்கிறது. இல்லாவிட்டாலும் இப்பாசமிகு அண்ணன் தம்பியை நமக்குப் பிடிக்காமல் இருக்குமா என்ன?!

| தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 5 | பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவனையே கலாய்க்கும் பூங்குழலி எப்படிப்பட்டவள்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x