

இந்திய விடுதலைக்காக போரிட்ட புரட்சி வீரரும், 24 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு வீரமரணம் அடைந்தவருமான சுகதேவ் (Sukhadev) பிறந்த தினம் இன்று (மே 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் (1907) பிறந்தார். முழு பெயர் சுகதேவ் தாபர். 3 வயதில் தந்தையை இழந்தார். இவரது சித்தப்பா லாலா அசிந்தராம் தேசபக்தர். ஆரிய சமாஜத்தில் பற்று கொண்டவர். அவரிடம் வளர்ந்ததால் இவரும் சிறு வயது முதலே ஆரிய சமாஜக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடும், தேசப்பற்றும் கொண்டிருந்தார்.
* யோகா பயிற்சிகள், மந்திரங்கள் கற்பதிலும் வல்லவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தார். பள்ளி மாணவனாக இருந்த இவரை இங்கிலாந்து அரசின் ‘யூனியன் ஜாக்’ கொடிக்கு சல்யூட் அடிக்கச் சொன்னார்கள். விடாப்பிடியாக மறுத்து அடி, உதை, தண்டனையைப் பெற்றார்.
* லாகூர் தேசியக் கல்லூரியில் 1920-ல் சேர்ந்தார். அப்போது பகத்சிங்குடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நட்பு கொண்டார். 1921-ல் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டார். அந்நிய ஆடைகளை எறிந்துவிட்டு, கதராடை அணிந்தார். சைமன் கமிஷன் வருகையை எதிர்த்து, பகத்சிங்கும் தோழர்களும் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். அதில் கலந்துகொண்ட சுகதேவ் கைது செய்யப்பட்டார்.
* சகோதரிகளும், தாயும் இவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். ‘நாட்டுக்காக சேவையாற்றப் போவதால் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
* இந்துஸ்தான் குடியரசுப் படையில் தன்னை இணைத்துக்கொண்டார். இயக்கம் எத்தகைய பணியை அளித்தாலும் அதை முழு மனதுடன் செய்வார். அதன் பஞ்சாப் மாநிலத்துக்கான பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
* சோஷலிசம் குறித்து நன்கு அறிந்தவர். அதீத நினைவாற்றல் கொண்டவர். கடினமான தத்துவ நூல்களைக்கூட இரண்டு, மூன்று நாட்களில் படித்து விடுவார். குறிப்புகள் எடுக்காமலேயே, அதில் உள்ள பல விஷயங்களை மேற்கோளுடன் கூறுவார். கட்சித் தோழர்களின் தேவைகளை அறிந்து, அக்கறையோடு நிறைவேற்றிக் கொடுப்பார். நாட்டில் சோஷலிச ஜனநாயக அமைப்பை நிறுவுவதை லட்சியமாகக் கொண்டிருந்தார்.
* நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது தொடர்பாக பகத்சிங் கைது செய்யப்பட்டார். காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் கொலை மற்றும் லாகூர் சதி வழக்குக்காக சுகதேவ் 1929-ல் கைது செய்யப்பட்டார்.
* புரட்சி வீரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று காந்திஜி அறிக்கை விட்டார். அதற்கு பதில் கூறும் வகையில், தங்கள் தரப்பை விளக்கி காந்திஜிக்கு இவர் எழுதிய கடிதம் மிகவும் பிரசித்தம்.
* லாகூர் மத்திய சிறையில் 15 நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உணவு புகட்ட முயன்ற காவலர்கள், அதிகாரிகளைத் தாக்கினார். சிறையில் பகத்சிங் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
* நண்பர்கள் பகத்சிங், ராஜகுருவுடன் இணைந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டபடியே 1931 மார்ச் மாதத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். வீரமரணம் அடைந்தபோது இவருக்கு வயது 24!