Published : 18 Jul 2022 03:58 PM
Last Updated : 18 Jul 2022 03:58 PM

PS for 2K கிட்ஸ் - 4 | பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் ‘எவர்கிரீன் ஹீரோ’ ஆனது எப்படி?

ஆ.மதுமிதா

கி.பி. 1000-ஆம் ஆண்டில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட கற்பனை கலந்த வரலாற்றுப் புதினம் ‘பொன்னியின் செல்வன்’. வரலாற்றை நேரடியாக படிக்க சிலருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். எனக்கும் ஆரம்பத்தில் அந்த சுணக்கம், தயக்கம் இருந்தது. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படித்த பின்னர் எனக்கு உண்மையான வரலாற்றின் மீது ஈர்ப்பு வந்தது. அப்படித்தான் நான் ஜெ.எச்.நெல்சனின் ‘மதுரையின் வரலாறு’, பிற எழுத்தாளர்களின் இந்திய வரலாறு புத்தகங்களை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். உங்களுக்கும் கூட அப்படியொரு அனுபவம் ஏற்படலாம்!

மணிரத்னத்தின் டீஸரில் நாம் பார்த்த கார்த்திதான் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் வரும் வாணர் குலத்து வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனின் கதாபாத்திரம்.

சில நேரங்களில், நட்பு, காதல், வீரம், சாகசம், போர், துரோகம், ராஜ ரகசியங்கள் என வந்தியத்தேவன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் கதைதான் இப்புதினம் என்றும்கூட தோன்றும். அவ்வளவு முக்கியத்துவமிக்கவர் நம் வாணர் குலத்து வீரன்.

பொன்னியின் செல்வனின் கதைத்தலைவன் அருள்மொழிவர்மனாக இருந்தாலும், கதையின் தொடக்கம் முதல் கடைசி வரை பயணித்து சோழ நாட்டைக் காப்பாற்றிய பலருள் மிக முக்கியமானவர் நம் வாணர் குலத்து வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன்.

பொன்னியின் செல்வனை ஆழ்ந்து ரசித்துப் படித்த பலருக்கும் ஒரு 'எவர்கிரீன் ஹீரோ'வாக வந்தியத்தேவன் திகழ்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இக்கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்த காரணங்களில் ஒன்று, அவரது சாகச உணர்வு. பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துடிப்புடன் ஒன்றன் பின் ஒன்றாக சாகசங்களில் மூழ்கிவிடுகிறார்.

புதினத்தின் தொடக்கத்தில் எந்த அக்கறையும் இல்லாமல் ஒரு விளையாட்டு குணமிக்க இளைஞராக அவரைச் சந்திக்கிறோம். போகப்போக அவரிடம் பல மாற்றங்களை காண்கிறோம். பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலன் தன் தந்தையிடமும் தங்கையிடமும் சில ஓலைகளை எவருக்கும் தெரியாமல் கொண்டு சேர்க்கும்படி தன் நண்பனான வந்தியத்தேவனிடம் சொல்கிறார்.

"நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது" என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி அனுப்புகிறார்.

வந்தியத்தேவனும் தன் விளையாட்டையும் குறும்பையும் இப்பயணத்தின்போது காட்டுவதில்லை என்று முடிவுசெய்து பயணத்தை தொடங்குகிறான். நம் வந்தியத்தேவன் பிரச்சினை செய்வதில்லை என்று தீர்மானித்தாலும், பிரச்சினை அவனை விடுவதாக இல்லை. அந்த வகையில் சில சமயம் சிறிய நிகழ்ச்சிகளிலிருந்து பெரிய சம்பவங்கள் வரை விளைகின்றன.

அத்தகைய ஒரு சிறிய சம்பவம், வந்தியத்தேவன் வாழ்க்கையில் நேர்கிறது. தன் நண்பனும் கடம்பூர் சம்புவரையர் மகனுமான கந்தமாறன் வீட்டில் அன்று பெரிய பழுவேட்டரையரும் பல சிற்றரசர்களும் பங்கேற்கவிருந்த விருந்து நடைபெறவிருந்தது. நண்பன் மாளிகையில் இரவில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம் என்று நினைத்து வந்தியத்தேவன், இரவை அங்கு கழிக்கையில், நடுசாமத்தில் பேச்சு சப்தம் கேட்கிறது. நம் வீரன் தான் வலுக்கட்டாயமாக வம்பில் சிக்குவதில் வல்லவராயிற்றே. தூங்காமல் யார் பேசுகிறார்கள் என்று பார்த்தால், அங்கு பழுவட்டரையர், கந்தமாறன், சம்புவரையர், பல சிற்றரசர்களுடன் பழுவேட்டரையரின் இளைய ராணியின் மூடுபல்லக்கும் இருந்தது. பல்லகினுள் இருந்து சிவபக்தனும், கரிகாலனின் சித்தப்பாவுமான மதுராங்கத்தேவர் வெளியே வருகிறார்.

சுந்தர சோழர் இறந்த பின்பு மதுராந்தகனை அரசானாக்கும் வகையில் கரிகாலனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் எதிராக தீட்டப்படும் சதிதிட்டத்தை இப்போது நம் வந்தியத்தேவன் கேட்டுவிட்டான். கோட்டையின் தளபதி சின்னப் பழுவேட்டரையர், கரிகாலனிடமிருந்து வரும் எந்த ஓலைகளையும், தன் அண்ணன் கட்டளைப்படி சந்தர சோழரிடம் சென்று சேர விடுவதில்லை என்பதையும் அறிகிறான்.

இங்கு தொடங்குகிறது நம் கதாநாயகனின் பயணம்.

குடந்தையில் குந்தவையைக் கண்டு காதலில் விழுந்து, (ஆனால் ஓலையை தர மறந்து) பின் தஞ்சை சென்று சுந்தர சோழரிடம் தடைகளைத் தாண்டி ஓலையைக் கொண்டு சேர்த்து, ஒற்றன் என பெயரெடுத்து, நந்தினியை (சிக்கலை) சந்தித்து, கந்தமாறன் உயிரை காப்பாற்றியும் தன்னை குத்திய துரோகி என்று அவனிடம் பெயர் வாங்கி, குந்தவையிடம் ஓலையை சேர்த்தால், அவள் தன் தம்பியை இலங்கையிலிருந்து அழைத்துவருமாறு கூறுகிறாள்.

காதலுக்காகவும் சோழ நாட்டை காப்பதற்காகவும் பூங்குழலி என்ற படகோட்டிப் பெண்ணின் உதவியோடு இலங்கை சென்று அருள்மொழிவர்மனின் நண்பனாகிறான். அங்கு இருவரும் மந்தாகினி ஆகிய ஊமை ராணியால் பலமுறை காப்பாற்றப்படுகின்றனர். மந்தாகினிதான் நந்தினியின் தாயார் என்றறிந்து, பல சாகசம் செய்து இருவரும் சோழ நாடு திரும்புகையில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடனான சண்டையில் கடலில் தள்ளப்படுகின்றனர்.

பூங்குழலியால் இருவரும் காபாற்றப்பட்டு, காய்ச்சல் வந்த இளவரசரை நாகபட்டினத்தில் கொண்டு சேர்க்கின்றனர். இதன் பிறகு வந்தியத்தேவன் என்ன செய்கிறான் ? நாலாபக்கமும் பகைவர்கள் சூழ சோழ நாட்டினுள் எப்படி செல்கிறான்? பழுவேட்டரையர் மற்றும் நந்தினியின் சூழ்ச்சியறிந்து ஆதித்த கரிகாலனிடம் அதை கூறுகிறானா? தன்

ஆ.மதுமிதா

நண்பர்களையும் தன்னை நம்பினோரையும் காக்கின்றானா? தான் ஒற்றனும் இல்லை, கரிகாலனை கொன்றவனும் இல்லை என்று நிரூபிக்கின்றானா? சோழ குலத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றுகிறானா என்பதே மீதிக்கதை.

மரணத்தை எதிர்கொள்ளும் தைரியம் அனைத்து ஹீரோக்களுக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும். வந்தியதேவனுக்கு அது மிகுதியாகவே உள்ளது. எதுவானாலும் எதிர்கொண்டு, வாழ்க்கையை முழு மனதுடன் ரசித்து வாழும் திறன் கொண்டவன், சாகச உணர்வு மிக்கவன் வந்தியத்தேவன்.

குந்தவையை திருமணம் செய்யும் கனவுகளை எல்லாம் நசுக்கினாலும் சிறையிலிருந்து தப்பித்து ஈழத்தில் ஒரு புதிய சாகசத்தைத் தேடிச் செல்கிறான்.

கந்தமாறனை முதுகில் குத்திய காவலரிடமிருந்து அவனை காப்பாற்றுகிறான்; ஆனால் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டபோதும் கலங்காமல் இருக்கிறான். எதிரியின் கப்பலில் அருள்மொழி வர்மன் இருந்ததாக நினைத்துக் கடலில் குதிக்கிறான்.

ஆதித்த கரிகாலனை எச்சரித்து காப்பாற்ற பார்த்திபேந்திரன், கந்தமாறன் மற்றும் பழுவூர் சகோதரர்களை எதிர்க்கிறான். இலங்கைக்குத் தப்பிக்கத் தயாராக இருந்தபோதும், சேந்தன் அமுதனை காப்பாற்றுகிறார்.

நம் வாழ்வில் இவனைப் போன்ற நன்பண் அவசியம் என்பதை இவர்கள் அனைவருமே ஒப்புக்கொள்வர்.

இப்போது புரிகிறதா... ஏன் நம் வந்தியத்தேவன் வாசகர்களுக்கு ஒரு ‘எவர்கிரீன் ஹீரோ’ என்று!

| தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 3 | பொன்னியின் செல்வன் - நந்தினி Vs குந்தவைதவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x