

நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர், தத்துவவாதியான பெர்ட்ரண்ட் ஆர்தர் வில்லியம் ரஸல் (Bertrand Arthur William Russell) பிறந்த தினம் இன்று (மே 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இங்கிலாந்தின் டிரெல்லக் என்ற ஊரில் (1872) பிறந்தார். 2 வயதில் தாயையும், 4 வயதில் தந்தையையும் பறிகொடுத்தார். இதனால், பாட்டியிடம் வளர்ந்தார். வீட்டிலேயே கல்வி கற்றார். இளமைப் பருவம் தனிமையில் கழிந்ததால் மிகுந்த விரக்தியுடன் இருந்தார்.
# அண்ணன் வாயிலாக இவருக்கு கணிதத்தில் நாட்டம் ஏற்பட்டது. அதுவே வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படவும் காரணமாக அமைந்தது. கணிதம் குறித்து மேன்மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்தது. சிறந்த எழுத்தாற்றலும் கொண்டிருந்தார்.
# கல்வி உதவித்தொகை பெற்று கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதம், தத்துவம் பயின்றார். இளங்கலைப் பட்டமும் ஃபெல்லோஷிப்பும் பெற்றார். அரசியலில் ஆர்வம் கொண்டார். ‘ஜெர்மன் சோஷியல் டெமாக்ரசி’ என்ற தனது முதல் நூலை 1896-ல் வெளியிட்டார். கணிதம் தொடர்பான நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டார். லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
# வாழ்நாள் முழுவதும் அரசியல், தத்துவம், சமுதாயக் கோட்பாடுகள் குறித்து பேசியும் எழுதியும் வந்தார். இவரது மானசீக குரு ஜான் ஸ்டூவர்ட் மில். அவரது எழுத்துகளின் தாக்கம் ரஸலின் படைப்புகளில் அதிகம் காணப்படும்.
# முதல் உலகப்போர் நடந்தபோது, தீவிர அரசியலில் ஈடுபட்டார். அமைதிக்கு ஆதரவாகவும், கட்டாய ராணுவ சேவைக்கு எதிராகவும் பேசியதால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் வேலையை இழந்தார். சிறையில் இருந்தபோது, கணித தத்துவங்கள் குறித்த நூலை எழுதினார்.
# போருக்குப் பிறகு, வேலைபோன இடத்திலேயே மீண்டும் வேலைவாய்ப்பு வந்தது. அதை நிராகரித்தவர், பத்திரிகையாளர், எழுத்தாளராகப் பணியாற்ற முடிவு செய்தார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார்.
# சொந்த வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எழுதுவதை மட்டும் இவர் நிறுத்தியதே இல்லை. இளமைப் பருவம் தொடங்கி தினமும் சராசரியாக 3,000 வார்த்தைகள் வரை எழுதியுள்ளார். இவரது ‘தி பிராப்ளம்ஸ் ஆஃப் ஃபிலாசஃபி’ (1911), ‘ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் ஃபிலாசஃபி’ (1945) ஆகிய நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தவை.
# கல்வி, மதம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் குறித்து தனது நூல் களில் எழுதினார். ‘தி ஏபிசி ஆஃப் ஆடம்ஸ்’, ‘தி ஏபிசி ஆஃப் ரிலேடிவிட்டி’ உள்ளிட்ட பல அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். தன் சுயசரிதை நூலை 3 தொகுதிகளாக வெளியிட்டார்.
# சிகாகோ பல்கலைக்கழகத்தில் 66-வது வயதில் ஆசிரியராக சேர்ந்தார். பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி னார். 1949-ல் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது பெற்றார். 1950-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். தனது இறுதி ஆண்டுகளில் அணு ஆயுதங்கள், வியட்நாம் போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.
# மிகுந்த மனஉறுதி படைத்தவர். தன் கருத்துகளை துணிச்சலுடன் வெளியிடக்கூடியவர். தத்துவவாதி, சிந்தனையாளர், சமூக சீர்திருத்த வாதி, தர்க்கவாதி, கணிதவியலாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட பெர்ட்ரண்ட் ரஸல் 98-வது வயதில் (1970) மறைந்தார்.