Last Updated : 05 May, 2016 12:38 PM

 

Published : 05 May 2016 12:38 PM
Last Updated : 05 May 2016 12:38 PM

யூடியூப் பகிர்வு: நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் - குறும்படம்

பேசுவதை மட்டுமல்ல நாம் சிந்திப்பதைக்கூட ஒரு செல்போன் தெரிவிக்க ஆரம்பித்தால் நம் நிலை என்ன ஆகும் என்பதைத்தான் ''நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்'' எனும் குறும்படம் கூறுகிறது.

மகன் பிறந்தநாளுக்கு சைனா மொபைல் செட் வாங்கித் தருகிறார் தந்தை. அது மகிழ்ச்சியைத் தரவில்லை அவனுக்கு. காரணம், அவன் கேட்டிருந்தது 'ஐபோன் 6' மொபைல்.

தந்தை, ''என்னடா ஐபோன் சிக்ஸ்? இந்த சைனா மொபைல் வேணாமா? சூப்பர் பீசு, ஃபிரீ சிம், அட்வான்ஸ் டெக்னாலஜி எல்லாம் இருக்கு. நான் எல்லாம் செக் பண்ணிட்டேன் வாங்கிக்கோ'' என்று இவன் தலையில் கட்டிவிட, மொட்டைமாடியில் தனியே போய் உட்கார்ந்துகொண்டு 'முழி முழி'யென்று முழிக்கிறான்.

என்ன செய்வது என யோசித்து முதன்முதலில் அம்மாவுக்கு போன் செய்யலாம் என எண்களை அழுத்துகிறான். ரிங் போகட்டும் என காத்திருக்கிறான்.

ரிங்டோனும் ஓய்ந்து, செல்போன் நிறுவன பெண்ணின் குரல், ''நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தற்போது சமைத்துக்கொண்டிருக்கிறார்...'' என்று பேசுவதைத் தொடர்ந்து அந்த வாசகம் ஆங்கிலத்திலும் ஒலிக்கிறது.

கண்கள் அலைய, திகைப்பு மேலிட, அதிர்ச்சி ஆளைத் தள்ள வியப்பின் உச்சிக்கே செல்கிறான் அவன். ஷாக் அடிக்குமோ என்பதுபோன்ற அச்சத்தோடு தன் ஆள்காட்டிவிரலை மட்டும் நீட்டி மீண்டும் ரீ-டயல் செய்கிறான். திரும்பவும் அதே குரல், அதே வாசகங்கள். அம்மாவை அழைத்து நிலவரத்தை உறுதி செய்துகொள்கிறான். செல்போன் பெண் சொன்னது உண்மைதான். அப்பா சொன்ன அட்வான்ஸ் டெக்னாலஜி இதுதானா? என வியக்கும் அவனுக்கு அதன்பிறகுதான் காத்திருந்தன அதிர்ச்சிகள்....

சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவில், எஸ்.என்.ஃபாசில் படத்தொகுப்பில், பிரிஃபோ இசையில், இர்பான், ஃபரீனா, டாக்டர் சூரி நடித்துள்ள இப்படத்தை எழுதி பாராட்டத் தக்க வகையில் இயக்கியிருக்கிறார் இர்ஃபான். எனினும் இதில் குறையும் உண்டு.

நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் இளைஞர்கள் அடுத்தவர்களை தரக்குறைவாக பேசுபவர்கள்தானா? என்னதான் இந்தக் காலத்துப் பையன்களைக் காட்டுகிறேன் என்று வெளிப்படுத்த முயன்று இருந்தாலும் பெற்ற அப்பாவையே மரியாதைக் குறைவாக அழைப்பதை தவிர்த்திருக்கலாம்.

''நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்'' குறும்படம்போல் நடந்துவிட்டால் அவ்வளவுதான் கேட்கவே வேண்டாம்... ரகளை, களேபரம், வெட்டுக் குத்துதான்... அதுவும் குடும்பத்திற்குள்ளேயே நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது எப்படி என்பதை நீங்களும் பாருங்களேன்.