Published : 02 May 2016 04:21 PM
Last Updated : 02 May 2016 04:21 PM

வை ராஜா மை- சேட்டையாளர்கள் சிறப்பு யூடியூப் லைவ் ஷோ

'ஸ்மைல் சேட்டை' என்ற யூடியூப் தளம், தேர்தலை முன்னிட்டு, புதிய வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ''வை ராஜா மை'' என்ற பெயரில் 24/ 7 பேசும் மாரத்தான் ஒன்றைத் தொடங்கியுள்ளது. சேட்டைகள், கலாய்ப்புகளுடன் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விழிப்புணர்வு உத்திக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஸ்மைல் சேட்டை தள காணொளிகளை தொடர்ந்து வழங்கிவரும் ஆர்ஜே விக்னேஷ், அன்புதாசன், கார்த்திக் உள்ளிட்டவர்களோடு, மொத்தக் குழுவும் இதில் பங்கெடுக்க உள்ளது. | யூடியூப் இணைப்பு கீழே |

இது குறித்து நம்மிடம் பேசினார் 'ஸ்மைல் சேட்டை' குழுவினரில் ஒருவரான கலையரசன்.

"அரசியல் நிகழ்வுகளை நாகரிகமான முறையில் கேலி செய்துகொண்டிருந்த எங்களுக்கு, கலாய்ப்பது மட்டும் போதுமா என்று தோன்றியது. சுமார் 1 கோடி புதிய தலைமுறை வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும் என்று யோசித்தோம்.

நாங்கள் குறிப்பிட்டுள்ள 7878745566 என்ற எண்ணுக்கு ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் வரும் வரை, கடந்த கால தேர்தல் பற்றிய தகவல்கள், அரசியல் வரலாறு, 234 தொகுதிகளின் வேட்பாளர் விவரம் உள்ளிட்ட சுவாரசியமான விஷயங்களைத் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்ந்து பேச உள்ளதாக அறிவித்தோம். சுமார் 120 மணி நேரத்துக்கான தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கிறோம்.

வரலாறு சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா என்று கேட்கிறார்கள். இப்போது அரசியல் எல்லோருக்கும் மிகவும் சாதாரணமாகி விட்டது. ஆனால் அரசியலின் பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் பிரமிக்க வைக்கிறது. தேர்தல் நாட்டின் தலையெழுத்தையே நிர்ணயிக்கிறது. அதனால் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறோம்.

இதோ, இன்று (திங்கள்) காலை 10 மணிக்கு, எங்களின் 'நாட்டுக்காக காலவரையற்ற பேசும் விரதம்' தொடங்கிவிட்டது. வாசகர்கள் தங்களின் செல்ஃபி வீடியோக்கள், வாட்ஸ்- அப் உரையாடல்கள், சாட்கள், அழைப்புகள் மூலம் எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, சவுதி, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் எங்கள் ரசிகர்கள் இருப்பதால் தயக்கம் இல்லாமல் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த உள்ளோம்.

ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் என்பதே எங்கள் இலக்கு. ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து எத்தனை முறை மிஸ்ட் கால் கொடுத்தாலும், ஒரு முறை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை பதிவேற்றப்படும்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஆதித்யா தொலைக்காட்சி ஆதவன், உறுமீன் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் வந்து எங்களுக்கு ஊக்கமளித்துச் சென்றிருக்கின்றனர். நிச்சயம் எங்களின் இலக்கு பூர்த்தி அடைந்து, தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்கிறார்.

'ஸ்மைல் சேட்டை' குழுவின் பேசும் மாரத்தானை ஆன்லைனில் காண: