

ஆன்மிக குரு, கல்வியாளர்
‘கிரியா யோகி’ என்று போற்றப்பட்ட பிரபல ஆன்மிக குருவும், சிறந்த கல்வியாளருமான ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி (Sri Yukteshwar Giri) பிறந்த தினம் இன்று (மே 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மேற்குவங்க மாநிலம் செராம்பூரில் வளமான குடும்பத்தில் (1855) பிறந்தார். இயற்பெயர் பிரியநாத் கரார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். இளம் பருவம் முதலே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
l பள்ளி, கல்லூரியில் அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்த இவர் ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, பெங்காலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 2 ஆண்டுகள் பயின்றார்.
l பட்டங்கள் வாங்குவதற்காக அல்லாமல், அந்த பாடங்களைத் தெரிந்துகொள்ளவே கல்லூரிக்கு சென்றார். தேர்வு எழுதாமல், பட்டங்கள் பெறாமல் கல்லூரியில் இருந்து வெளியேறினார். இளம் வயதில் திருமணமாகி 2 ஆண்டுகளில் மனைவியை இழந்தார்.
l பிரபல ஆன்மிக குரு லாஹிரி மஹாசாயாவை 1884-ல் சந்தித்து, அவரது சீடரானார். ஆன்மிக நூல்களைப் படிப்பதும், ஆய்வுகள் மேற்கொள்வதும், பிறருக்குக் கற்றுக்கொடுப்பதும் இவரது முழுநேர பணியாக மாறிது. ஸ்ரீ யுக்தேஷ்வர் என்று அழைக்கப்பட்டார்.
l இவரை கிரியா யோகப் பாதையில் வழி நடத்தினார் குரு. பனாரஸில் இருந்த குருவை அடிக்கடி சந்தித்தார். குருவின் குருவான மஹா அவதார் பாபாஜியை 1894-ல் சந்தித்தார். இவரது பின்னணி பற்றித் தெரிந்துகொண்ட பாபாஜி, பைபிளையும் இந்துக்களின் ஆன்மிக நூல்களையும் ஒப்பிட்டு ஒரு நூல் எழுதச் சொன்னார்.
l அவரது கட்டளையை ஏற்று ‘கைவல்ய தரிசனம்’ (‘தி ஹோலி சயின்ஸ்’) என்ற நூலை எழுதி முடித்தார். ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஜப்பான் ஆகிய மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டது. பாபாஜியே இவருக்கு ‘சுவாமி’ என்ற பட்டத்தை அளித்தார்.
l செராம்பூரில் இருந்த 2 மாடி கட்டிடமான தனது வீட்டை ஆசிரமமாக மாற்றினார். அதற்கு ‘பிரியதாம்’ எனப் பெயரிட்டார். அங்கு மாணவர்கள், சீடர்களுடன் வசித்தார். 1903-ல் புரியில் மற்றொரு ஆசிரமம் அமைத்தார். கல்வியைப் பரப்ப இந்த 2 ஆசிரமங்களிலும் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தார்.
l ‘சாது சபா’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயற்பியல், உடலியல், புவியியல், வானியல், ஜோதிடக் கலை ஆகிய பாடங்களுக்கு பாடத்திட்டங்கள் வகுத்தார். சுய கட்டுப்பாடு, மனதை ஒருமுகப்படுத்துவது, ஆழமான ஆன்மிக உள்ளுணர்வு, அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையான ஒழுக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு போதித்தார். அடிப்படை ஆங்கிலம், இந்தி மொழி கற்பிக்க ‘ஃபர்ஸ்ட் புக்’ என்ற நூலை எழுதினார்.
l ஜோதிடக் கலையின் அடிப்படைகள் குறித்து ஒரு நூல் எழுதினார். வானியல், அறிவியல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1910-ல் முகுந்தாலால் கோஷ் என்ற சீடர் இவரிடம் வந்து சேர்ந்தார். அவர்தான் பின்னாளில் இவருடைய கிரியா யோக போதனைகளை உலகம் முழுவதும் பரவச்செய்த பரமஹம்ச யோகானந்தர். யுக்தேஷ்வரின் இன்னொரு முக்கிய சீடர் ஸ்ரீசத்யானந்தா.
l ‘ஞானாவதார்’ என போற்றப்படும் சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி 81-வது வயதில் (1936) மகாசமாதி அடைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்