

மன்னர் காற்றுவாங்கியபடி அந்தப்புர பூங்காவில் உலாத்திக்கொண்டிருந்தார். அப்போது ஏதோவொரு பொருள் காலில் தட்டுப்பட்டது. குனிந்து எடுத்தார். ஒட்டியிருந்த மண்ணை துடைத்துவிட்டுப் பார்த்தார். பழங்கால விளக்கு. அழுக்கு போக துடைத்தார். குபீரென்று புகை.
அது அலாவுதீன் விளக்கு என்று புரிந்துகொண்டார். 3 விருப்பங்கள் என்ன கேட்கலாம் என்று தீவிரமாக யோசித்தார். ‘மகனுக்கு 400 கிரவுண்டில் ஒரு வீடு. மருமகனுக்கு நாப்பதரை கோடியில் ஒரு கார். மனைவிகளுக்கு கோஹினூர் வைரம் பதித்த அட்டிகை..’ என்று லிஸ்ட் போட்டார்.
‘‘மன்னா! சார்ஜ் தீர்ந்துகொண்டிருக்கிறது. 3 விருப்பங்களுக்கு வழியில்லை. ஒரே ஒரு சாய்ஸ்தான்’’ என்றது பூதம்.
மன்னருக்கு என்ன கேட்பதென்று புரியவில்லை. சரி, ஒரே ஒரு விருப்பமாக இருந்தாலும் பல்க்காக கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தார். ‘‘அரபு தேசத்தில் என் நண்பர் இருக்கிறார். அவரை அடிக்கடி போய் பார்த்துவர ஆசையாய் இருக்கிறது. அரபிக்கடலுக்கு அடியில் பில்லர் போட்டு அட்டகாசமாய் ஒரு ரோடு போட்டுக்கொடு’’ என்றார் மன்னர் அசால்ட்டாக.
ஜெர்க்கானது பூதம். ‘‘இளிச்சவாய் பூதம் கிடைச்சா, ஏறி மிதிப்பீங்களே. அதெல்லாம் முடியாது மன்னா. வேறு ஏதாவது சிம்ப்பிளா கேளு’’ என்றது பூதம்.
‘‘சரி, குற்றப் பின்னணி உள்ளவர்கள் பொது வாழ்க்கைக்கு வரக்கூடாது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் உண்மையான சொத்துக் கணக்கை காட்ட வேண்டும். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கூறவேண்டும். இவற்றை ஒரே விருப்பத்தில் நிறைவேற்றி வை’’ என்றார் மன்னர்.
‘‘அரபிக்கடலை குடைஞ்சு உனக்கு ரோடே போட்டுக் கொடுத்துடறேன். ஆள விடு சாமி’’ என்று கூறிவிட்டு தெறித்து ஓடிய பூதம், மீண்டும் விளக்கின் புகைக்குள் மறைந்தது.