

புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர்
ஈழத்துக் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் இலக்கியச் செயல்பாட்டாளருமான நீலாவணன் (Neelavanan) பிறந்த தினம் இன்று (மே.31). அவரைப் பற்றிய முத்துக்கள் பத்து:
# அம்பாறை மாவட்டம் (அன்றைய மட்டக்களப்பு மாவட்டம்), நீலா வணையில் பிறந்தார் (1931). இவரது இயற்பெயர் சின்னத்துரை. தந்தை சித்த வைத்தியர். பள்ளிப் படிப்பு முடித்தவுடன் தமிழ் ஆசிரிய ராகப் பயிற்சி பெற்றார். தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை நீலா வணன் என்று மாற்றிக்கொண்டார்.
# 1948-ம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார். 1952-ல் சுதந்திரன் என்ற இதழில் பிராயச்சித்தம் என்ற இவரது முதல் சிறுகதை வெளிவந்தது. பின்னர் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1953-ல் சுதந்திரன் இதழில் வெளிவந்த ‘ஓடி வருவதென்னெரமோ’ என்ற கவிதை மூலம் கவிஞராக அறிமுகமானார்.
# சுதந்திரன் ஆசிரியர் இவரிடம் ‘‘நீங்கள் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதைவிட வெகுசில கவிஞர்களுள் ஒருவர் என்று பெயர்பெறலாமே’’ என ஆலோசனை கூறினார். அதை ஏற்ற இவர், அப்போது முதல் ஏராளமான கவிதைகள் மட்டுமே எழுதத் தொடங்கினார்.
# கே.சி.நீலாவணன், நீலாவண்ணன், நீலா சின்னத்துரை, மானாபாணன், இராமபாணம், எழில்காந்தன், சின்னான், கவிராயர், எறிகுண்டுக் கவிராயர், கொழுவு துறட்டி, அமாச்சி ஆறுமுகம், வேதாந்தன், சங்கு சக்கரன் ஆகிய புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சிறுகதை, உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம் ஆகியவற்றை எழுதியிருந்தாலும், இவரைப் புகழ்பெற வைத்தது, கவிதைகள்தான்.
# 1963-ல் இவர் எழுதிய ‘மழைக்கை’ என்ற கவிதை நாடகம் முதன் முதலாக மேடை ஏறிய கவிதை நாடகம் என்ற புகழ்பெற்றது. தன் ஊரில் வழங்கும் கிராமியச் சொற்களை இவர் தன் கவிதைகளில் நிறைய கையாண்டுள்ளார்.
# மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர் களுக்கு இவரது கவிதைகள் ஏராளமான தகவல்களை வழங்கக்கூடியவையாக அமைந்துள்ளன. நல்ல பேச்சாளரும்கூட. 1961-ல் கல்முனைப் பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கினார்.
# அதன் தலைவராகப் பல வருடங்கள் பொறுப்பேற்று செயல்பட்டார். கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுத்தாளர்கள் சந்திப்புகள் முதலான செயல்பாடுகள் மூலம் அந்தப் பகுதி இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.
# இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, மழைக்கை கவிதை நாடக அரங்கேற்றம் என்பன இந்த அமைப்பு நடத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள். இந்த சங்கத்தின் சார்பாக, ‘பாடும் மீன்’ என்ற இலக்கிய இதழை நடத்திவந்தார்.
# இறுதியாக இவர் எழுதிய கவிதை ‘பொய்மை பொசுங்கிற்று’. வழி என்ற இவரது கவிதைத் தொகுதி சாகித்ய மண்டலப் பரிசு பெற்றது. ‘கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்’, ‘நீலாவணன் எஸ்.பொ. நினைவுகள்’ உள்ளிட்ட இவரைப் பற்றிய நூல்கள் வெளிவந்தன.
# தமிழின் சிறப்பு குறித்தும், எதிர்காலத்தில் அதன் வளம் குறித்த கனவுகள் குறித்தும் ஏராளமாகப் பாடியுள்ளார். ஈழத்து இலக்கிய உலகில் சந்தக் கவிதைக்கு நீலாவணன் என்று போற்றப்பட்டவரும், இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்தவருமான நீலாவணன் 1975-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 44-ம் வயதில் மறைந்தார்.