Last Updated : 03 May, 2016 07:03 PM

 

Published : 03 May 2016 07:03 PM
Last Updated : 03 May 2016 07:03 PM

கவனம் ஈர்த்த இளைஞரின் பிரச்சாரமும் மயிலாப்பூர் பாமக வேட்பாளரின் மறுபக்கமும்

தேர்தல் வந்துவிட்டால் தெருவில் தினமும் பிரச்சார வாகனங்களைப் பார்க்கலாம். அதுவரை தொகுதியை எட்டிப்பார்க்காத எம்எல்ஏ கூட ஏகத்துக்கும் அன்போடும், கனிவோடும் மக்களிடையே நடந்து கொள்வதைப் பார்க்கலாம். இந்த வழக்கமான சம்பிரதாயங்களுக்கு இடையே சில நேரங்களில் சில சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பார்க்கலாம்.

அப்படித்தான், நேற்று (திங்கள்கிழமை) பால்கனியில் இருந்து ஒரு பிரச்சாரத்தைப் பார்த்து, ஆஹா இது சற்றே வித்தியாசமாக கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறதே என நினைத்தேன்.

அதைப் பற்றிய பகிர்வுதான் இது.

திடீரென்று காதைப் பிளக்கும் அளவுக்கு டண்டணக்கா என பேண்ட் வாத்தியச் சத்தம். கவன ஈர்ப்புச் சத்தத்தைக் கேட்டவுடனேயே அது கட்சி பிரச்சாரம்தான் எனத் தெரிந்து கொண்டாலும் யார் என்பதை பார்க்கும் ஆவலுடன் பால்கனி வழியாக எட்டிப் பார்த்தேன்.

10,15 பேர் வந்து கொண்டிருந்தனர். வேட்பாளர் யார் என்பதை சரியாக யூகிக்க முடியவில்லை. ஒருவர் கையில் மாம்பழம் வைத்திருந்தார். திடீரென்று பேண்ட் சத்தம் ஒரு கையசைவில் நிறுத்தப்பட்டது.

கூட்டத்திலிருந்து சற்றே முன்னாள் வந்த அந்த இளைஞர் கையில் மைக்கை எடுத்துப் பேச ஆரம்பித்தார். 'எல்லோருக்கும் வணக்கம்' என கீழே நின்றவர்களைப் பார்த்து கும்பிட்டார். மேலே பார்த்தவர் 'அக்கா வணக்கம்' என எனக்கும் ஒரு வணக்கம் வைத்தார். தமிழர் பண்பாட்டுப் படி நானும் பதில் வணக்கம் சொன்னேன்.

பிறகு பேச்சைத் தொடர்ந்தார். ''என் பெயர் சுரேஷ்குமார். நான் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் இந்த மயிலாப்பூர் தொகுதியில் எம்எல்ஏ பதவிக்காக போட்டியிடுகிறேன். நீங்கள் எல்லாம் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. இதுவரை நான் திமுகவுக்குத்தான் ஓட்டு போட்டிருக்கிறேன், அதிமுகவுத்தான் ஓட்டுப் போட்டிருக்கிறேன் ஆனால் இந்த முறை மாற்றத்துக்காக ஓட்டு போடப் போறேன் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் தயவுசெய்து எனக்காக வாக்களியுங்கள். மாம்பழம் சின்னத்தில் என்னை ஆதரியுங்கள்.

நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்தேன், பின்னர் எம்பிஏவும் படித்தேன். அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால், அதையெல்லாம் உதறிவிட்டு இங்கேயே வந்துவிட்டேன். அமெரிக்காவில் வேலை கிடைத்தவனுக்கு இங்க என்ன வேலை? என நீங்கள் கேட்கலாம். இது நம்ம ஊர். நம்மூர் வேலையை நாம தான் செய்யணும். அதான் இங்கேயே வந்துவிட்டேன்.

எனது பகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறேன். மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். இளைஞர்கள் அரசியலில் சாதிக்க வேண்டும். அரசியலும் இளைஞர்களுக்கான களம் தான். எனவே, ஒரு படித்த இளைஞனான என்னை ஆதரித்து இத்தேர்தலில் வாக்களியுங்கள்.

இளைஞர்கள்தான் மக்களுக்காக முனைப்போடு செயல்படுவார்கள். தமிழகத்தில் மாறி மாறி ஆண்ட கட்சிகள் உங்களுக்காக என்ன செய்தன. மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் அதையும் இதையும் கொடுத்தனர். ஆனால், நாங்கள் கல்வியை இலவசமாகக் கொடுப்போம். ஒரு முறை மாற்றத்துக்காக வாக்களியுங்கள். இளைஞர்களை ஆதரித்து வாக்களியுங்கள்'' என்று சுரேஷ்குமார் பேசினார்.

ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல், அங்குமிங்கும் நடந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு தெளிவாகப் பேசினார். ஒருபடி மேலே சென்று கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் மைக்கை நீட்டி நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் எனத் தெரிவியுங்கள் எனக் கேட்க, பலத்த சிரிப்புக்கு இடையே அந்தப் பெண் "மாம்பழச் சின்னத்துக்குத் தான் வாக்களிப்பேன்" என்றார்.

பிரச்சார உத்தி வெற்றி பெற்றுவிட்டதாகக் கருதி, மிக்க நன்றி சொல்லிவிட்டு அந்த வேட்பாளர் கோஷமிடுகிறார்... நமது சின்னம்.. மாம்பழச் சின்னம். கூடவே குட்டீஸ் பட்டாளமும் ரைம்ஸ் போல அதை ஒப்பிக்க அந்தத் தெருவில் இருந்து நகர்ந்தார்.

மயிலாப்பூர் தொகுதியில் பாமக சார்பில் முதலில் மீனாட்சி ஆனந்த் என்பவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பாமக வேட்பாளர் பட்டியல் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டபோது மயிலாப்பூர் தொகுதியில் என்.சுரேஷ்குமார் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x