Published : 30 May 2016 11:54 AM
Last Updated : 30 May 2016 11:54 AM

சுந்தர ராமசாமி 10

புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) பிறந்த தினம் இன்று (மே 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# நாகர்கோவில் அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார் (1931). தந்தை கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் பர்மா எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். இதனால் இவரது குழந்தைப் பருவமும் அங்குதான் கழிந்தது. தாய்மொழி தமிழாக இருந்தாலும் கேரளாவில் இருந்ததால் மலை யாளம் கற்றார். இவருக்கு 8 வயதாக இருந்தபோது குடும்பம் நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்தது.

# அப்போது கன்யாகுமரி மாவட்டமும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால் இங்கும் இவரது கல்வி மலையாளத்திலேயே தொடர்ந்தது. சம்ஸ்கிருதமும் பயின்றார்.

# 18 வயதில்தான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. தானே முயன்று எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினார். இவரது அம்மா மணிக்கொடி இலக்கிய இதழையும், நா.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்றோரின் கதைகளையும் இவருக்குப் படித்துக் காட்டினார். 21 வயதில் தமிழில் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.

# இவரது ஆரம்பகாலக் கதைகள் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய ‘செம்மீன்’ நாவலையும் மொழிபெயர்த்தார்.

# எழுத்து என்ற சிறு பத்திரிகையில் இவரது முதல் கவிதை வெளி வந்தது. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1975-ல் ‘நடுநிசி நாய்கள்’ மற்றும் 1987-ல் ‘யாரோ ஒருவனுக்காக’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், 1995-ல் அனைத்துக் கவிதை களும் அடங்கிய ‘107 கவிதைகள்’ என்ற நூலும் வெளிவந்தன.

# முதலில் முற்போக்கு யதார்த்தவாத கதைகளையும் பின்னர் அதிலிருந்து மாறுபட்ட கதைகளையும் எழுதினார். 50களின் இறுதியில் எழுத ஆரம்பித்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை 1966-ல் எழுதி முடித்தார்.

# 1967 முதல் ஆறு ஆண்டு காலம் சொந்த வாழ்வின் நெருக்கடியால் எதையும் எழுதாமல் இருந்தார். அதன் பிறகு புதிய வேகத்துடனும் மேலும் புதிமையான நோக்குடனும் எழுத ஆரம்பித்தார்.1981-ல் இவர் எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் இன்றளவும் அதிகம் விவாதிக்கப்படும் நாவலாக இருக்கிறது.

# இவரது கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அஞ்சலிக் கட்டுரை கள், முன்னுரைகள், மதிப்புரைகள், பத்தி எழுத்து எனப் பலதரப்பட் டவை. இவரது கூர்மையான விமர்சனங்கள் தமிழ்ச் சூழலின் இலக்கிய அளவுகோல்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.

# 1988-ல் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். உயர் தரமான படைப்புகளும், புதிய சிந்தனைகளும் இதில் வெளிவந்தன. தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. 1998-ல் இவரது மூன்றாவது நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது.

# குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழின் நவீனத்துவ இயக்கத்தை வலுப்படுத்தியவர்களுள் ஒருவர் என்று போற்றப்பட்ட சுந்தர ராமசாமி, 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 74-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x