

சட்டமன்ற தேர்தலுக்கு ஒருவாரம்தான் பாக்கி, வாக்குகளை சேகரிக்கும் பிரச்சாரம் உச்சகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தல் பரபரப்பு, கட்சிகளை மட்டுமல்ல பொது மக்களையும் தொற்றிக்கொண்டிருக்கிற, பற்றியெரிந்துகொண்டிருக்கிற நேரம் இது.
இதில் எந்த ஆர்வமும் செலுத்தாத சில அல்ல, பல ஆத்மாக்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அத்தகையவர்கள் தேர்தலைப் பற்றி பட்டும்படாமல் பேசுவதையும் அங்கங்கே கேட்கமுடிகிறது.
''என்னது வோட்டுபோடணுமா? வேறவேலை இல்லைங்களா?.. யாரோ ஜெயிக்கப்போக நாமவெயில்ல கால் கடுக்க நின்னு போடணுமா?'' புத்திசாலித்தனமாக கேட்டுவிட்டதுபோல நினைக்கிறார்கள்.
சரி, உண்மை என்ன? தேர்தலில் வாக்களிக்கவேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வுக்காக சவிதா சினி ஆர்ட்ஸ் புரொடெக்ஷன்ஸ் குறும்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். அதன் பெயர் 'மே 16 டெலிவரி டேட் ஃபார் தமிழ்நாடு'.
இக்குறும்படத்தில் 'தேர்தல் புனிதம் அப்படி இப்படி' என்று பக்கம் பக்கமாக அறிவுரைகள் எதுவும் பகரவில்லை. மாறாக இப்படத்தின் செய்தி உள்ளத்தைத் தொடும்விதமாக அமைந்துள்ளது என்பதுதான் வித்தியாசம். அப்படியென்ன வித்தியாசம் என்பதை அரவிந்த் ராஜகோபால் அருண் திவார், ராகவ் ஆகியோர் நடித்துள்ள இந்த ஆறரை நிமிடப் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
காலையிலேயே எழுந்து தயாராகி, ஓட்டுப் போடுவதற்காக புறப்பட்டு சென்றுகொண்டிருக்கும் அந்த பார்வையற்றவருக்கு இருக்கும் கடமையுணர்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது?
ஆனாலும், அரவிந்த் பாலாஜியின் அழகான ஒளிப்பதிவில், ஜாய்செஃப்பின் உறுத்தாத இசையொழுங்கில் தனது சின்னஞ்சிறு காட்சிகளின் வழியே இளைய சமுதாயத்திடம் ஜனநாயகக் கடமையின் அவசியத்திற்கான நம்பிக்கையை விதைத்துவிட்டார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
குறும்படத்தைக் காண:
</p>