Published : 24 May 2016 10:12 am

Updated : 24 May 2016 10:12 am

 

Published : 24 May 2016 10:12 AM
Last Updated : 24 May 2016 10:12 AM

கண. முத்தையா 10

10

விடுதலை வீரர், எழுத்தாளர்

நேதாஜி தலைமையில் சுதந்திரத்துக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியுமான கண. முத்தையா (KN.Muthiyah) பிறந்த தினம் இன்று (மே 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:


# சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் செல்வச் செழிப்பு மிக்க ஜமீன் குடும்பத்தில் (1913) பிறந்தார். தந்தையின் மறைவால் 17 வயதிலேயே குடும்ப பாரம் இவரது தோளில் விழுந்தது. மெட்ரிக் தேர்வுகூட எழுத முடியவில்லை. மனம் தளராமல் உழைத்து, தந்தை செய்துவந்த வியாபாரத்தை மீட்டெடுத்தார்.

# விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர். 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு ‘தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற் றார்.

# கம்பை நகரில் உயர்நிலைப் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, நேதாஜியின் வீர உரைகளைக் கேட்டு, அவர் மீது பக்தி கொண்டார். 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து, அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியை கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

# பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, ராகுல் சாங்கிருத்தியாயனின் 2 நூல்களை (‘பொதுவுடைமைதான் என்ன’, ‘வால்காவில் இருந்து கங்கை வரை’) தமிழில் மொழிபெயர்த்தார்.

# தமிழ் புத்தகாலயத்தை1946-ல் நிறுவினார். ‘நேதாஜியின் புரட்சி’ என்ற நூலை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். ஜூலிஸ் பூசிக், மாவோ, கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களை தமிழில் பதிப்பித்தார். தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, ப்ரேம்சந்த் போன்ற இந்தி இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில் வெளியிட்டார்.

# வெளிநாடுவாழ் தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், அறிஞர்களின் நூல்களையும் தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை வென்ற படைப்புகளை வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர் இவரே.

# ஜீவா, பெரியார், காமராஜர், அண்ணா, பக்தவத்சலம் உள்ளிட்ட தலைவர்கள் இவரிடம் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான எந்த படைப்பையும் பிரசுரிப்பதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டவர்.

# நாடு விடுதலை அடைந்த பிறகு, நண்பர் ஒருவர் இவரிடம் வந்து, ‘‘ஐஎன்ஏ தியாகிகளுக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் தருகிறதாம்’’ என்று சொல்லி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். இவரோ, ‘‘இந்தியாவே எங்களுக்கு சொந்தம் என்று நினைத்தேன். வெறும் 5 ஏக்கரை வாங்கிக் கொடுத்து என்னை ஏன் பிரிக்கப் பார்க்கிறாய்?’ என்று கேட்டு கையெழுத்திட மறுத்துவிட்டார்.

# நூல்கள் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஒரு இயக்கம் தொடங்கினார். இந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது. எழுத்தாளர், பதிப்பாளர் சங்கங்களின் நிர்வாகியாகவும் இருந்து செயலாற்றினார். 1962-ல் நடத்தப்பட்ட பாரதி விழாவில் இவரது பங்களிப்பு மகத்தானது.

# சுதந்திரப் போராட்ட வீரர், படைப்பாளி, பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், நூல் வெளியீட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட கண. முத்தையா 84-வது வயதில் (1997) மறைந்தார்.


கண. முத்தையாமுத்துக்கள் பத்துபொது அறிவு தகவல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

10

பாப்பா உமாநாத் 10

வலைஞர் பக்கம்
10

மே.வீ.வேணுகோபாலன் 10

வலைஞர் பக்கம்
10

ஹோமி சேத்னா 10

வலைஞர் பக்கம்
x