

24 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் பரிவுமிக்க அணுகுமுறையால் இந்தக் கட்டுரையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரு பயணிகள் பற்றிய பதிவு.
1990-ம் ஆண்டு. அது கோடை காலம். அப்போதுதான், நானும் என் தோழியும் இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் இணைந்திருந்தோம். அது நாங்கள் தற்காலிக பணியாளர்களாக இருந்த காலக்கட்டம்.
நாங்கள் இருவரும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அதே பெட்டியில் இரண்டு எம்.பி.க்களும் இருந்தனர். அவர்களுடன், அதே பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே 12 பேர் பயணித்தனர். அவர்களைப் பார்த்து நாங்கள் மிகவும் பயந்து போனோம்.
முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த எங்களை எங்களுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தினர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர். வேறு வழியின்றி நாங்களும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேறினோம்.
நாங்கள் கொண்டுவந்த உடைமைகள் மேலேயே அமர்ந்து பயணித்தோம். பயத்தில் பதுங்கிக்கொண்டோம். ஆனால் எங்களுக்குள் ஆத்திரம் கொதித்துக் கொண்டிருந்தது. சற்றும் நாகரிகம் அறியாத அந்தக் கூட்டத்தினருடன் அன்றைய இரவுப் பயணம் மிகவும் மோசமானதாக இருந்தது.
சுயமரியாதைக்கும், அவமரியாதைக்கும் ஒரு மெல்லிய நூலிழை இடைவெளியில் நாங்கள் சிக்கி இருந்தோம். டிக்கெட் பரிசோதகர் அன்று இரவு மாயமானார்.
அடுத்த நாள் காலை, கனத்த மனதுடன் டெல்லி வந்தடைந்தோம். அந்த குண்டர்களால் தாக்கப்படவில்லை என்பதே ஒரே ஆறுதல். என்னுடன் பயணித்த தோழி, ரயில் சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். அந்த இரவு தந்த கோர அனுபவத்தால் அகமதாபாத்தில் நடைபெறவிருந்த அடுத்தக் கட்ட பயிற்சியை புறக்கணிக்க முடிவு செய்து டெல்லியிலேயே தங்கிவிட்டார். ஆனால், நான் பயிற்சியை தொடர்வது என்று முடிவு செய்தேன். என்னுடன் வேறு ஒருவர் இணைந்துகொண்டார். ( அவர், உத்பல்பர்னா ஹசாரிகா. இப்போது ரயில்வே வாரியத்தில் செயலாக்க இயக்குநராக உள்ளார்).
இருவரும், இரவு குஜராத் செல்லும் ரயிலில் ஏறினோம். இந்த முறை எங்கள் முன்பதிவு உறுதியாகவில்லை. காத்திருப்போர் பட்டியலில் இருந்தது.
ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததும் எங்களுக்கு தெரிந்தது. முதல் வகுப்பு டிக்கெட் பரிசோதகரை அணுகினோம். அகமதாபாத்திற்கு சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எடுத்துரைத்தோம். அவர் எங்களிடம் மிகவும் தன்மையாக பேசினார். எங்கள் இருவரையும் முதல் வகுப்பு கூபேவுக்கு அழைத்துச் சென்று அமர இடம் அளித்தார். அங்கே ஏற்கெனவே இருவர் இருந்தனர். வெள்ளை நிற கதர் ஆடையில் இருந்த அவர்களைப் பார்த்ததுமே அரசியல்வாதிகள் என தெரிந்துகொண்டேன். ஏதோ இனம்புரியாத பயம் என்னை ஆட்கொண்டது.
அப்போது குறுக்கிட்ட டிக்கெட் பரிசோதகர்: "இவர்கள் இருவரும் இந்த மார்க்கத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள். மிகவும் நாகரிகமானவர்கள். நீங்கள் பயப்படத் தேவையில்லை" என்றார். ஒருவருக்கு 40 வயது மதிக்கலாம். சற்றே பாந்தமான முகபாவத்துடன் இருந்தார். இன்னொருவருக்கு 30 வயது மதிப்பிடலாம். அவரிடம் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. எங்களை பார்த்தவுடனேயே, நாங்களும் அமர்ந்துகொள்ளும் வகையில் இருக்கையில் மற்றொரு ஓரத்திற்கு இருவரும் நகர்ந்து கொண்டனர்.
எங்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இருவரும் குஜராத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள். தங்கள் பெயர்களைக் கூட எங்களிடம் சொன்னார்கள். ஆனால், வழக்கம் போல் ரயில் சக பயணிகள் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள தேவையற்றதாக இருந்தது, மூளைக்கு. பதிலுக்கு நாங்களும் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ரயில்வேயில் தற்காலிகப் பணியில் இருப்பதாகவும் தெரிவித்தோம். எங்களது பேச்சு அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது. வரலாறு, அரசியல் என விரிவடைந்தது. எனது தோழி, டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு பயின்றவர் என்பதால் மிகவும் ஆழமான பேச்சாக இருந்தது அது. நானும் அவ்வவ்போது இடையில் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தேன். பேச்சு அப்படியே ஹிந்துமகாசபை அமைக்கப்பட்டது குறித்தும், முஸ்லீம் லீக் உருவாக்கம் குறித்தும் திசை திரும்பியது.
இரண்டு அரசியல்வாதிகளில், மூத்தவர் மிக ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தார். இளையவர் அவ்வப்போது பேசிவிட்டு பெரும்பாலும் பேச்சை கூர்ந்து கவனித்தவாறு இருந்தார். ஆனாலும், அவர் உடல் அசைவுகள் அவர் அங்கு நடைபெற்ற பேச்சில் முழு கவனத்தையும் பதித்திருப்பதை உணர்த்தியது.
அப்போது நான் திடீரென, ஷியாம் பிரசாத் முகர்ஜி பற்றி கேள்வி எழுப்பினேன். அவர் எப்படி இறந்தார். அவரது இறப்பு ஏன் இன்னும் ஒரு புதிராகவே இருக்கிறது என்றேன். அதுவரை அமைதியாகவே இருந்த இளையவர், ஷியாம் பிரசாத் முகரிஜியை எப்படித் தெரியும் என கேள்வி எழுப்பினார்.
எனது தந்தை கோல்கத்தா பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது அங்கு துணைவேந்தராக இருந்த ஷியாம் பிரசாத் எனது தந்தைக்கு கல்வி உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 1953-ல் ஷியாம் பிரசாத் இறந்த போது, என் தந்தை மிகவும் வருந்தினார். அவர், தனக்கு செய்த உதவிகளை அடிக்கடி நினைவுகூர்வார், என்று பதில் கூறினேன்.
நான் கூறியதை கேட்டு விட்டு தனக்குள் முணுமுணுத்த அவர், 'இவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது' என்றார்.
உடனே, மற்றொருவர் கேட்டார்: 'ஏன் நீங்கள் குஜராத் மாநிலத்தில் எங்கள் கட்சியில் சேரக் கூடாது?'. நாங்கள் அந்த கணத்தில் சிரித்தோம். நாங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றோம். அப்போது, சற்று ஆளுமையுடன் குறுக்கிட்ட இளையவர் 'அதனால் என்ன?' என்றார்.
எங்களுக்கு அதைப் பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. அறிவாளிகளுக்கு எங்கள் மாநிலத்தில் நல்ல வரவேற்பு உண்டு என்றார். அவருடைய அந்த மவுனத்தில் ஒரு பொறி தெரிந்தது.
பேசிக்கொண்டிருந்தபோதே உணவு வந்தது. நான்கு பிளேட் சைவ உணவு. அனைவரும் மிக அமைதியாக உணவு அருந்தினோம். இளையவர், எங்கள் அனைவருக்கும் சேர்த்து பணம் வழங்கினார். கொஞ்சம் தழுதழுத்த குரலில் நன்றி என்றேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.
அப்போது அவர் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது. அதை யாரும் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. எப்போதாவது பேசியும், பெரும்பாலும் கவனத்தை மட்டுமே செலுத்தியும் இருந்தார் அந்த நபர்.
டிக்கெட் பரிசோதகர் வந்தார். ரயிலில் கூட்டம் அதிகம் இருப்பதால் படுக்கை ஒதுக்கித் தர முடியாது என்றார். பரவாயில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற இருவரும் பையில் இருந்த துணியை எடுத்து தரையில் விரித்துபடுத்துக்கொண்டனர். படுக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
முதல் நாள் இரவு ஒரு சில அரசியல்வாதிகளால் எங்கள் பயணம் பயமும், பதற்றமுமாக இருந்தது. ஆனால் அடுத்த நாளே, இரு அரசியல்வாதிகளுடன் எவ்வித பயமும் இல்லாமல் பயணம் இருந்தது. என்ன ஒரு வேறுபாடு!
அடுத்த நாள் காலை, ரயில் அகமதாபாத்தை அடைந்தது. நாங்கள் எங்கு தங்கப் போகிறோம் என இருவருமே விசாரித்தனர். மூத்தவர், உங்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்வதில் சிக்கல் இருந்தால், என் வீட்டின் கதவு எப்போதுமே திறந்திருக்கும் என்றார். அந்த குரலில் உண்மை இருந்தது. இளையவரின் முகபாவம் வேறு ஏதோ உணர்த்துவதாக இருந்தது. நான் ஒரு நாடோடி மாதிரி. எனக்கு நிரந்தரமாக வீடு இல்லை. உங்களை அழைக்க முடியாது என்றார்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு. தங்கும் இடம் பிரச்சினையாக இருக்காது என்பதையும் தெரிவித்தோம்.
ரயில் நிற்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் வேகமாக என் டைரியை எடுத்துக் கொண்டு அவர்கள் பெயர்களை மீண்டும் கேட்டேன். நல்ல உள்ளம் கொண்ட அந்த பயணிகள் பெயர்களை மறக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மேலும், அரசியல்வாதிகள் மீதான என் பார்வையை மாற்றி அமைத்த அவர்கள் பெயர்கள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வேகமாக பெயர்களை டைரியில் கிறுக்கிக் கொண்டேன்.
ஒருவர் பெயர் சங்கர்சிங் வகேலா, மற்றொருவர் பெயர் நரேந்திர மோடி.
1995-ல் இந்த ரயில் பயணம் குறித்து அசாம் நாளிதழில் எழுதினேன். அசாமில் இருந்து வந்த இருவருக்கு ரயில் பெட்டியில் இடமளித்து, பயணத்தை சுமுகமாகிய குஜராத் அரசியல்வாதிகள் இருவருக்கு ஒரு புகழாரமாக அது அமைந்தது. அதை எழுதும்போது, அந்த இரு நபரும் இந்திய அரசியலில் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடிப்பார்கள் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பற்றி பின் எப்போதும் ஏதாவது செய்திகள் படிப்பேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், 1996-ல் வகேலா, குஜராத் முதல்வரான போது மகிழ்ச்சி அடைந்தேன். 2001-ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வரானபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
மோடி முதல்வரான ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் அசாம் நாளிதழ் மீண்டும் என் நினைவுக் கட்டுரையை பிரசுரம் செய்தது. இப்போது, அவர் பிரதமராகிவிட்டார்.
ஒவ்வொரு முறை அவரை தொலைக்காட்சியில் பார்க்கும்போதும், எங்களுக்கு அவர் அளித்த உணவும், எங்களை உபசரித்த விதமும், ரயில் பயணத்தில் நாங்கள் உணர்ந்த பாதுகாப்புமே நினைவுக்கு வருகிறது. தலை வணங்குகிறேன்.
(இக்கட்டுரையை எழுதியவர் புது டெல்லி, ரயில்வே தகவல் மையத்தின் பொது மேலாளர்)
தொடர்புக்கு:leenasarma@rediffmail.com
தமிழில்: பாரதி ஆனந்த்