Last Updated : 06 May, 2016 08:03 AM

 

Published : 06 May 2016 08:03 AM
Last Updated : 06 May 2016 08:03 AM

மன்னா.. என்னா? - கருத்துக் கணிப்பு ஐடியா

‘‘மன்னருக்கு மக்களின் ஆதரவு எவ்ளோ இருக்கிறது என்று கருத்துக்கணிப்பு நடத்தப்போகிறார்களாம். மக்களின் மனம் கவர ஐடியா சொல்லுங்கள்’’ - மந்திரி பிரதானிகளை கத்தி முனையில் மிரட்டாத குறையாக ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் மன்னர்.

சீனியர் மந்திரி எழுந்தார். ‘‘மன்னா! ரெண்டு ஐடியா கைவசம் இருக்கு. ஒண்ணு, சோறு ஐடியா! இன்னொண்ணு காரு ஐடியா! தேசம் முழுக்க நம்ம ஆதரவாளர்களை வைத்து குறைஞ்ச விலையில சாப்பாடு பொட்டலம் விற்கலாம். ஒவ்வொரு பொட்டலம் விற்கும்போதும் ‘மன்னர் வாழ்க’னு சொல்லணும். அடுத்தது, காரு ஐடியா! குறைஞ்ச கட்டணத்துல கால் டாக்ஸி விடலாம். ஒவ்வொருத்தரும் கார் பயணம் முடிச்சு இறங்கினதும் டிரைவர் ‘மன்னர் வாழ்க’னு சொல்லணும். குறைந்த விலையில சோறும், கார் பயணமும் கிடைச்சா, மக்கள் குத்தோ குத்துன்னு குத்துவாங்க.’’

மந்திரியின் ஐடியா ஏற்கப்பட்டு, உடனடியாக அமலுக்கும் வந்தது.

‘மன்னர் வாழ்க’ கோஷத்துடன் சோற்று பொட்டலங்களும், கால் டாக்ஸி பயணங்களும் அமோகமாக நடந்தன. கருத்துக்கணிப்பும் நடந்து முடிந்தது. மன்னரை ஏமாற்றியிருந்தது கருத்துக்கணிப்பு. அண்டை தேசத்து மன்னர் அமோக வாக்குகளை அள்ளியிருந்தார்.

ஐடியா சொன்ன மந்திரியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் மன்னர்.

‘‘மன்னா! ஐடியாவில் சொதப்பல் இல்லை. அண்டை தேச மன்னர்தான் இதில் புகுந்து நம்ம குட்டையை குழப்பிவிட்டார். சோற்றுக்கும், காருக்கும் நம்ம ஆட்களைப் போலவே, அவர்களது ஆட்களை தயார்பண்ணி, உலாவவிட்டிருக்கிறார். அவனுங்களும் ‘மன்னர் வாழ்க’னு சொல்லி சோறு வித்தானுகளாம். டாக்ஸி ஓட்டுனாங்களாம்.’’

‘‘மன்னர் வாழ்கன்னு சொன்னா, நமக்கு ஆதரவாத்தானே ஓட்டு விழணும். எப்படி மாறிச்சு?’’

‘‘மன்னா! அவனுங்க வித்த சோத்துப் பொட்டலத்துல பூரா கரண்டி கரண்டியா உப்பை அள்ளிப் போட்டிருக்காங்க. அதேமாதிரி, டாக்ஸியில பயணம் பண்ண வந்தவங்களிடம் பணம் வாங்கும்போது, ‘ணங்’குனு அவங்க தலையில ஒரு குட்டு வச்சிருக்காங்க. இப்புடி செஞ்சுப்புட்டு ‘மன்னர் வாழ்க’னு சொன்னா, மக்கள் டென்ஷனாகமாட்டாங்களா.’’

ஐடியா புஸ்ஸானதை அப்பாவியாய் சொல்லிக்கொண்டிருந்தார் மந்திரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x