

அரண்மனை திண்ணையில் உட்கார்ந்து மன்னர் விசும்பிக் கொண்டிருந்தார். ஆதரவாக தோளைத் தொட்டார் அவரது கொள்கை நலக் கூட்டணி நண்பர்.
‘‘வாப்பா.. உன்னைத்தான் எதிர்பாத்திட்டிருந்தேன். என் மனுவை கேன்சல் பண்ணிட்டாங்கப்பா’’ என்று குபீரென்று கதறினார் மன்னர்.
‘‘சரி விடு. அடுத்த தேர்தல்ல பாத்துக்கலாம்’’ என்று ஆறுதல்படுத்தினார் கூட்டணி நண்பர்.
சற்று ரிலாக்ஸான மன்னர், ஆகாயத்தை பார்த்தபடியே மெல்ல பிளாஷ்பேக்குகளை கிளற ஆரம்பித்தார். ‘‘உனக்கு ஒண்ணு தெரியுமா.. இப்படித்தான் போனவாட்டியும் ரொம்ப ஆச ஆசயா வேட்புமனு போட்டேன். அப்போவும் கேன்சல் பண்ணினாங்க. நீதான் அப்பவும் என் கூடவே இருந்த. அப்புறம், வழக்கு கேஸ்னு என் அரண்மனை சொத்து பூரா போச்சு. நீதான் அப்பவும் என் கூடவே இருந்த. 2 மாடு செத்துப் போச்சு. கடன் பிரச்சினை ஜாஸ்தியாச்சு. அந்த சந்தர்ப்பத்துலயும் நீதான் என் கூடவே இருந்த..’’
‘‘அட, இதெல்லாம் பெரிய விஷயமாப்பா.. நண்பனுக்கு நண்பன் இதுகூட செய்யலைன்னா எப்படி..’’
திடீரென சீரியஸாகி சீறினார் மன்னர். ‘‘உனக்கு இது ஒரு விஷயமே இல்ல. ஆனா, எனக்கு ரொம்ப பெரிய விஷயம். போன தடவை நீ என்கூட கூட்டணி சேர்ற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்திச்சு. நீ வந்தப்புறம்தான் எல்லாம் உல்ட்டாவா நடக்குது. சொத்து போச்சு, மாடு போச்சு, கடன் பிரச்சினை. இப்போ வேட்புமனுவும் கேன்சல்! உன்னை விடறதா இல்ல..’’
பின்காலருக்குள் கையை விட்டு வீரவாளை உருவிய மன்னர், எஸ்கேப்பாகி ஓடிக்கொண்டிருந்த கூட்டணி நண்பரை துரத்த ஆரம்பித்தார்.