Published : 29 Apr 2016 10:23 AM
Last Updated : 29 Apr 2016 10:23 AM

பாவேந்தர் பாரதிதாசன் 10

புரட்சிக் கவிஞர்

தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான ‘பாவேந்தர்’ பாரதிதாசன் (Bharathidasan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l புதுச்சேரியில் (1891) பிறந்தார். இயற்பெயர் கனக சுப்புரத்தினம். திருப்புளிச்சாமியிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிரெஞ்சு மொழியும் கற்றார். மகா வித்வான் பு.அ.பெரியசாமி, புலவர் பங்காரு பத்தரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சித்தாந்த, வேதாந்தப் பாடங்களை கற்றுத் தேர்ந்தார்.

l கல்வே கல்லூரியில் பயின்றவர், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு திருமண விழாவில் இவர் பாடிய பாரதியாரின் பாடல் அங்கு வந்திருந்த பாரதியாருக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தது. அவர் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

l தமிழ் ஆசிரியராக 1909-ல் பணியில் சேர்ந்தார். 37 ஆண்டுகள் பணியாற்றினார். பாரதியார், வவேசு, அரவிந்தர் உள்ளிட்ட பல விடுதலை வீரர்கள் காவலில் இருந்து தப்ப உதவியதோடு, அவர்களுக்கு அடைக்கலமும் அளித்தார்.

l புதுச்சேரியில் ஒருமுறை சூறாவளிக் காற்றில் சிக்கி 5 கி.மீ. தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, ஒருநாள் முழுவதும் அலைந்து திரிந்து பிறகு வீடு வந்து சேர்ந்தார். இந்த அனுபவத்தை ‘காற்றும் கனகசுப்புரத்தினமும்’ என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அதை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தாராம் அரவிந்தர்.

l ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்தபோது அவரை போலீஸுக்கு தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். கைத்தறி துணிகளை தெருத்தெருவாக விற்றார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

l திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்தார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பமாட்டார்.

l பாடப் புத்தகங்களில் ‘அ அணில்’ என்று இருந்ததை ‘அ அம்மா’ என்று மாற்றியவர். பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு, கதைகளை எழுதிவந்தார். ‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள்.

l நகைச்சுவை உணர்வு மிக்கவர். நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி, புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றை தானும் வளர்த்துவந்தார்.

l புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.

l புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று கொண்டாடப்படுபவரும், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவருமான பாரதிதாசன் 1964 ஏப்ரல் 21-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x