Published : 05 Apr 2016 09:43 AM
Last Updated : 05 Apr 2016 09:43 AM

ஜோசப் லிஸ்டர் 10

அறுவை சிகிச்சையின் தந்தை

அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இங்கிலாந்தின் அப்டான் கிராமத்தில் (1827) பிறந்தார். நவீன உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், இவரது தந்தை. மிகுந்த இரக்க சுபாவம் கொண்ட இவர், நோயால் அவதிப்படுவோரைப் பார்த்து, தான் ஒரு மருத்துவராக வேண்டும் என தீர்மானித்தார்.

# லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். அறுவை சிகிச்சைக்கான பயிற்சியையும் மேற்கொண்டார். அறுவை சிகிச்சை நிபுணர் ஜேம்ஸ் சிமியிடம் உதவியாளராக சேர்ந்தார். கிளாஸ்கோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக 8 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

# அப்போதெல்லாம், நோயாளிகள் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருவார்கள். காரணம், காயத்தில் தொற்று ஏற்பட்டு 50% பேர் இறந்துவிடுவார்களாம். இந்த நிலையை மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டார்.

# நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் குறித்து லூயிஸ் பாஸ்டர் எழுதியிருந்த கட்டுரையை படித்தார். ‘பொருட்களை புளிக்கச் செய்யும் கிருமிகள் காற்றில் உள்ளன. அவற்றால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது’ என்பதை அறிந்தார்.

# அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நுண்கிருமிகளை அழிக்க முடியும் என ஆய்வு செய்து கண்டறிந்தார். கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார். ‘ஆன்டிசெப்டிக்’ அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார்.

# அறுவை சிகிச்சைக்கு முன்பு தனது கைகள், சிகிச்சைக்கான கருவிகள், சிகிச்சை அறை உட்பட அனைத்தும் மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். அறையில் கார்பாலிக் அமிலத்தை தெளித்து வைக்கவும் ஏற்பாடு செய்தார். இதனால், நோயாளிகளின் காயங்கள் விரைவில் குணமடைந்து, இறப்புகளும் குறைந்தன.

# இதுகுறித்த இவரது முதல் ஆய்வுக் கட்டுரை 1867-ல் வெளியானது. இவரது மகத்தான இந்த கண்டுபிடிப்பு பேரும் புகழும் பெறுவதற்கு மாறாக, கேலியையும் கிண்டலையும் எதிர்கொண்டது.

# லிஸ்டர் மனம் தளரவில்லை. தான் கண்டறிந்த வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினார். இவரது வழிமுறைகள் அறுவை சிகிச்சைத் துறையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தின. உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இவரது நடைமுறையை ஏற்றுக்கொண்டனர். அவரது புகழும் பரவியது.

# எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைமைப் பதவி தேடிவந்தது. அங்கு 7 ஆண்டுகள் பணியாற்றினார். ஜெர்மனி, அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தனது கண்டுபிடிப்பு குறித்து உரையாற்றினார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறை தலைவராக15 ஆண்டுகள் பணியாற்றினார்.

# மருத்துவ உலகிலேயே முதன் முதலாக இவருக்கு ‘ஆர்டர் ஆஃப் தி மெரிட்’ விருது வழங்கப்பட்டது. ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டி தலைவராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். அறுவை சிகிச்சையின் முன்னோடி, அறுவை சிகிச்சையின் தந்தை எனப் போற்றப்படும் ஜோசப் லிஸ்டர் 85-வது வயதில் (1912) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x