Last Updated : 28 Jun, 2014 09:00 AM

 

Published : 28 Jun 2014 09:00 AM
Last Updated : 28 Jun 2014 09:00 AM

சரக்கு வாகனத்துக்கான விதிகள் என்ன?

# சுற்றுலா வாகனங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லலாமா?

சுற்றுலா வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையின்படி மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். அதற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177, 177 (1)ன் கீழ் குற்றமாகும். அதிகம் ஏற்றப்பட்ட பயணிகள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருநாள் முழுவதும் நிறுத்தப்படும்.

# பள்ளி வாகனங்களில் அதிக அளவு மாணவர்களை ஏற்றிச் சென்றால் என்ன தண்டனை?

பள்ளி வாகனங்களில் குறிப்பிட்ட இருக்கை எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. அவ்வாறு ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம் விதி 177-ன் கீழ் குற்றமாகும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏற்றப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவருக்கு தலா ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க முடியும்.

# வாடகை ஆட்டோ, டாக்ஸிகளில் மீட்டர் பொருத்துவது அவசியமா?

வாடகை ஆட்டோ, டாக்ஸியில் கட்டாயம் மீட்டர் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது. இதை மீறி இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் விதி 177 (5)ன் கீழ் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 3 நாட்கள் நிறுத்தப்படும்.

# சரக்கு வாகனங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகளை ஏற்றிச் செல்லலாமா?

சரக்கு வாகனங்களில் விலங்குகளை ஏற்றிச்செல்லக் கூடாது. அவ்வாறு ஏற்றிச் சென்றால் மோட்டார் வாகனச் சட்டம் விதி 237, பிரிவு 177-ன் கீழ் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாவிட்டால் வாகனத்தை பறிமுதல் செய்து 3 நாட்கள் இயக்க முடியாமல் நிறுத்தப்படும்.

# ஓட்டுநர் அடையாள அட்டை (ஏவிடி ஃபார்ம்) இல்லாமல் வாகனங்களை இயக்கலாமா?

ஓட்டுநர் அடையாள அட்டை இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. வாகனத் தணிக்கையின்போது இது கண்டறியப்பட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இது அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும்.

# வாகன விவரம் (இருக்கை எண்ணிக்கை, புதுப்பிக்கப்பட்ட (எஃப்சி தேதி) குறித்து சரக்கு வாகனங்களில் எழுத வேண்டுமா?

சரக்கு வாகனங்களில் இதுபோன்ற வாகன விவரங்களை கட்டாயம் எழுதவேண்டும். இல்லாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டம் விதி 172 (4)ன் கீழ் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதலாகி ஒருநாள் முழுவதும் இயக்க முடியாதபடி நிறுத்தப்படும். இது அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x