

நாட்டு மக்கள் கஷ்டப்படும் காட்சிகளை பார்த்து ரசித்தபடியே நகர்வலம் போய்க்கொண்டிருந்தார் மன்னர். அப்போது அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. நடுத்தர வயது நபர்கள் 2 பேர் சாலையோரம் உட்கார்ந்து புற்களை தின்றுகொண்டிருந்தார்கள்.
பதறிய மன்னர், குதிரையில் இருந்து தொபுக்கடீர் என்று குதித்து அவர்களிடம் போனார். ‘‘ஏம்ப்பா, மூலிகை மருந்து சாப்பிடச் சொன்னா, அதை பறிச்சி கஷாயம் வச்சு, குடிக்க வேண்டியதுதானே, இப்பிடியா ஆடு மாடு மாதிரி மேய்வீங்க?’’ என்றார்.
2 பேரும் டெர்ரராக திரும்பிப் பார்த்தார்கள். ‘‘மன்னனாச்சேன்னு பாக்குறோம். இல்லன்னா, நல்லா வந்துரும் வாய்ல. எங்களப் பாத்தா காமெடி பீசு மாதிரி தெர்தா உனக்கு. வேலை இல்லாம, கூலி இல்லாம, சோறுகூட இல்லாம, வேறு வழியில்லாம புல்லைத் திங்குறோம்யா’’ என்றனர்.
‘‘அய்யகோ என் ஆட்சியிலா இப்படி?’’ என்று லைட்டாக கதறிய மன்னர், அவர்கள் இருவரின் கையையும் ஆதரவாக பற்றிக்கொண்டார். ‘‘இனி உங்கள் கஷ்டம் தீர்ந்துவிட்டது. வாருங்கள் என்னோடு’’ என்று குதிரையில் ட்ரிபிள்ஸ் ஏற்றிக்கொண்டார்.
‘‘எனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தப்பே இதற்கெல்லாம் காரணம். நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்கள். கஜானாவை காலி செய்துவிட்டார்கள்’’ என்று பீலா விட்டுக்கொண்டே அவர்களுடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.
‘‘இதுதான் அரண்மனை. இனிமேல் இது என் அரண்மனை அல்ல. உங்கள் அரண்மனை. இந்த இடத்தை விட்டு இனி நீங்கள் எங்கும் போக வேண்டாம். உள்ளே பாருங்கள். ஆறடி உயரத்துக்கு புல் வளர்ந்திருக்கிறது. இஷ்டம்போல மேயுங்கள்’’ என்றார்.