

M.G.R. தனது அண்ணன் சக்ரபாணியைப் போலவே மேலும் மூன்று பேரை தனது உடன்பிறவா அண்ணன்களாகவே கருதினார். தனது ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து கஷ்டப்பட்டு, பட வாய்ப்புக்களுக்காக காத்திருந்தபோது உதவி செய்தவர்களை எம்.ஜி.ஆர். பின்னர் கவுரவிக்கத் தவறியதில்லை.
1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜ குமாரி’ திரைப்படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க காரணமாக அமைந்து, எம்.ஜி.ஆரின் திறமை பற்றி உயர்ந்த அபிப்ராயம் ஏற்படுத்திய படம் அதற்கு முந்தையதாக வெளிவந்த ‘ஸ்ரீ முருகன்’. இப்படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ஆர். அற்புதமாக சிவ தாண்டவம் ஆடுவார். அதற்காக கடுமை யான பயிற்சிகளும் மேற்கொண்டார். இந்த முயற்சியும் உழைப்பும் திறமையும் தான் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக உயர்த்தியது.
‘ஸ்ரீ முருகன்’ படத்தின் கதாநாயகனாக முதலில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. விளம்பரம் வந்ததுடன் சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலையில் பாகவதர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவர் சிறை செல்லவேண்டி வந்தது. அதனால், தியாகராஜ பாகவதருக்கு பதிலாக இன்னொரு பாகவதர் கதா நாயகனாக நடித்தார். அவர் கர்நாடகா வைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர். கர்னாடக இசையில் திறமை மிக்க இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற படத்தை தயாரித்தவர். கன்னடத்தில் பல படங்களை தயாரித்து நடித்துள்ளார். பின்னாளில், ஒரு நிகழ்ச்சியில் இவரை எம்.ஜி.ஆர். கவுரவித்தார்.
‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்த தில் மிகவும் மகிழ்ச்சி யடைந்தவர்களில் ஒருவர் பழம் பெரும் நடிகர் எம்.கே.ராதா. ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோ தரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமனின் குரலில் ‘அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை ...’ பாடலையும் எம்.கே.ராதாவின் நடிப்பையும் யாரும் மறக்க முடியாது.
எம்.கே.ராதாவின் தந்தை எம்.கந்தசாமி முதலியார். சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்கள் நடந்தன. அதன் உரிமை யாளர் சச்சி தானந்தம் பிள்ளை. நாட கங்களை எழுதி இயக்கி யவர் கந்தசாமி முதலியார். இந்த நாடகக் கம்பெனி யில் சிறுவயதில் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் சேர்ந்தனர். எம்.கே.ராதாவைப் போலவே எம்.ஜி.ஆரையும் சக்ரபாணி யையும் தனது பிள்ளைகளாகக் கருதி யவர் கந்தசாமி முதலியார். அதே நேரம் கண்டிப்பானவர். ஒற்றைவாடை தியேட்டரில் 6 மாதங்களுக்கு மேல் மற்ற கம்பெனிகளின் நாடகங்கள் நடக்காத நிலையில், ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியினர் மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து நாடகங்கள் நடத்தினர்.
அந்தக் கம்பெனியில் எம்.கே.ராதா வும் நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். மீதும் அவரது அண்ணன் சக்ரபாணி மீதும் எம்.கே.ராதாவுக்கு கூடுதல் அன்பு உண்டு. மூன்று பேரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். தனியா கவோ தந்தையுடனோ எம்.கே.ராதா வெளியே சென்றால் தின்பண்டங்கள் வாங்கி வைத்திருந்து இருவருக்கும் ரகசியமாக கொடுத்து சாப்பிடச் சொல்வார். ‘‘எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவாய்” என்று எம்.ஜி.ஆரை ஊக்கப்படுத்துவார்.
சக்ரபாணியைப் போலவே மேலும் மூன்று பேரை தனது உடன்பிறவா அண் ணன்களாக கருதியதை எம்.ஜி.ஆரே இப்படி குறிப்பிடுகிறார். ‘‘என்னைப் பெற்ற அன்னை பெரும் செல்வமாக ஒரு அண்ணனைத் தந்தார். கலைத் தாய் எனக்கு இரண்டு அண்ணன்களைத் தந்தார். கலைவாணரும் எம்.கே.ராதா அண்ணனும்தான் அந்த இருவர். அறிவுச் செல்வமான பேரறிஞர் அண்ணாவை எனக்கு பெரும் சொத்தாக, வழிகாட்டியாக, இணை யற்ற தலைவராக எல்லாமுமாக ஒரு அண்ணனை அரசியல் எனக்குத் தந்தது’’.
அந்த அளவுக்கு எம்.கே.ராதாவை எம்.ஜி.ஆர். தனது அண்ண னாக மதித்தார். தனது தம்பியான எம்.ஜி.ஆர். பற்றி எம்.கே.ராதா, ‘‘தம்பி நடித்த வேடங்களில் அவரைப் போல யாரும் நடிக்கவே முடியாது. அவருடைய பாணியே தனி. அதற்கு கிடைத்த மகத்தான பரிசுதான் மக்கள் ஆதரவு. அவர் நடித்த படங்கள் யாவுமே என்றைக்கும் வெற்றிப் படங்கள்தான். சண்டைக் காட்சி களைப் பற்றி பேசினால் அந்த மூன்று எழுத்துக்கள்தான் (எம்.ஜி.ஆர்.) முன் னால் வரும்’’ என்று பாராட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, எம்.கே.ராதா உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். தனது தம்பியை நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல ஆசை. ஆனாலும் உடல்நிலை தடுத்தது. பதவியேற்பு விழாவை பார்க்க முடியாவிட்டாலும் மனதார வாழ்த்தினார். மறுநாள் காலை. எம்.கே.ராதாவின் வீட்டு முன் போலீஸ் வாகனங்கள் வந்து நிற்கின்றன. போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டுக் குள் சென்று, ‘‘இன்னும் சற்று நேரத் தில் முதல்வர் இங்கு வருகிறார்’’ என்றார்.
இன்ப அதிர்ச்சி விலகாத நிலையில், முதல்வரானபோதும் தன்னைத் தேடி வந்த தம்பியைக் கண்டு எம்.கே.ராதாவின் கண்கள் கலங்கின. அவரிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார். ‘‘இந்த நிலையில் உன்னைப் பார்க்க என் தந்தையும் உன் அன்னையும் இல்லையே’’ என்று எம்.கே.ராதா சொன்னபோது, இருவரின் கண்களும் அருவியாயின.
எம்.ஜி.ஆர். முதல்வரானதால் மகிழ்ச்சியடைந்து எம்.கே.ராதா கூறி னார்... ‘‘நடிப்புத் தொழில் செய்பவர் களுக்கு என்ன தெரியும் என்று கேட்ட வர்களுக்கு பதிலாகத்தான் தம்பி எம்.ஜி.ஆர். நாடாள்கிறார். நாடகத்தில் ராஜா வேடத்தில் நடித்த எங்களுக்கு, நிஜமாகவே ஆட்சி புரியவும் முடியும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்திருக்கிறார். சத்தியவதி வயிற்றில் பிறந்த சத்தியம் நாடாள்கிறது!’’
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம்
எம்.கே.ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத் தைத் தழுவிதான் பின்னர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘நீரும் நெருப்பும்’ படம் தயாரிக் கப்பட்டது. ‘அபூர்வ சகோதரர் கள்’ மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். ஆனால், ‘நீரும் நெருப்பும்’ படத்தில் கடைசியில் கரிகால னாக நடிக்கும் எம்.ஜி.ஆர். இறப்பதை ரசிகர்கள் விரும்ப வில்லை. சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் கூட்டத்தை சமாளிக்க குதிரைப் படை வந்தது ஒரு சாதனை. |