

தமிழ் இலக்கிய எழுத்தாளர், கவிஞர்
பழம்பெரும் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கவிஞரான ‘சிட்டி’ பெ.கோ.சுந்தரராஜன் (‘Chitti’ Pe.Ko.Sundararajan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பெ.கோ.சுந்தரராஜன் பெரியகுளத் தில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் (1910) பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
l அகில இந்திய வானொலியில் பணி புரிந்தவர். மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரி யராக சோ.சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றினார். ‘சிட்டி’ என்ற புனைப்பெயரில் எழுதினார். இது பெயருடன் நிரந்தர மாக இணைந்துவிட்டது. வ.ரா., கு.ப.ரா., புதுமைப்பித்தன் உள்ளிட் டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். வ.ரா.வை குருவாகக் கொண்டாடினார்.
l தி.ஜானகிராமன் என்ற அற்புதமான எழுத்தாளர் தமிழுக்கு கிடைத்ததற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். ‘என்னை ஊக்குவித்தவர் சிட்டி’ என பல சந்தர்ப்பங்களில் தி.ஜா. கூறியுள்ளார்.
l ‘ஆதியூர் அவதானி’ என்ற தனது முதல் கவிதை நூலை 1975-ல் வெளியிட்டார். ஏராளமான சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
l ‘அந்தி மந்தாரை’ என்ற சிறுகதை தொகுப்பு, ‘சில விஷயங்கள்’ என்ற நகைச்சுவைக் கட்டுரைகள், கு.ப.ரா.வுடன் இணைந்து ‘கண் ணன் என் கவி’ என்ற பெயரில் பாரதியார் பற்றிய திறனாய்வுக் கட்டுரை, சோ.சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து ‘தமிழ் நாவல் நூற் றாண்டு வளர்ச்சி’ என்ற இலக்கிய வரலாறு, தி.ஜானகிராமனுடன் இணைந்து ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயண நூல் குறிப்பிடத்தக்கவை.
l வெளிப்படையாக பேசுபவர். ‘‘பல நூல்களை ஏன் மற்றவர்களுடன் இணைந்து எழுதினீர்கள்?’’ என்று ஒருமுறை கேட்டதற்கு, ‘‘உட்கார்ந்து எழுத எனக்கு பொறுமை கிடையாது. ஆனால் தகவல் திரட்டுவது, ஒழுங்குபடுத்திப் பிரிப்பது, கோர்வைப்படுத்துவது ஆகியவற்றை சுலபமாக செய்வேன். அதுதான் காரணம்’’ என்றார்.
l பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து தகவல்களைத் திரட்டி எழுதுவார். காஞ்சி பரமாச்சாரியாரின் பரம பக்தர். அவரைப் பற்றியும், தீரர் சத்தியமூர்த்தி குறித்தும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். கர்னாடக இசையில் நாட்டம் கொண்டிருந்தார். மதுரை மணியின் தீவிர ரசிகர். சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட.
l கடிதங்கள் எழுதுவதில் அலாதி பிரியம் கொண்டவர். 80 பக்க நோட்டுப் புத்தகத்தில் கடிதம் எழுதி அனுப்புவார். இந்த நீண்ட கடிதங் களுக்கு அவரது இலக்கிய நண்பர்களிடம் இருந்தும் அதேபோல பதில் கடிதங்கள் வரும். இவை புத்தகமாக வந்திருந்தால் சிறந்த இலக் கியப் பொக்கிஷமாக இருந்திருக்கும் என்கின்றனர் ஆர்வலர்கள்.
l அபார நினைவாற்றல் கொண்டவர். தகவல் பெட்டகம் எனப் போற்றப் பட்டார். ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல்கள் தரும் ‘அரங்கம்’ என்ற அமைப்பை நடத்தினார். பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது எழுத்துலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நரசய்யா எழுதிய ‘சாதாரண மனிதன்’ என்ற நூல் 2002-ல் வெளியானது.
l வித்தியாசமான படைப்பாற்றல், நகைச்சுவை உணர்வு, பணிவு, கடின உழைப்பு, விருப்பு வெறுப்பில்லாத பண்பு என நல்ல குணாம்சங்கள் அமையப்பெற்ற சிறந்த இலக்கிய அறிஞரான ‘சிட்டி’ பெ.கோ.சுந்தரராஜன் 96-வது வயதில் (2006) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்