

எந்த அளவு உழைப்பு தேவையோ, அதே அளவு ஓய்வும் அவசியம். தொடர்ச்சியாக சிறிது நேரம் யோகாசனங்கள் செய்த பிறகு, சவாசனத்தில் ஓய்வெடுப்பது அவசியம். உடம்பில் எந்த சலனமும் இல்லாமல் படுத்திருக்கும் நிலை என்பதால் இந்த ஆசனத்துக்கு இப்பெயர்.
விரிப்பில் மேல் நோக்கி படுத்துக்கொள்ளுங்கள். கால்களை அகட்டி வைத்துக் கொள்ளவும். கைகள் உடம்பில் இருந்து விலகி இருக்கட்டும். உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்கட்டும். கண்களை மூடிக்கொள்ளவும்.
கால் பாதத்தில் இருந்து தொடங்கி, ‘கால் பாதம் ரிலாக்ஸ்’, ‘விரல்கள் ரிலாக்ஸ்’, ‘கணுக்கால் ரிலாக்ஸ்’ என மனதுக்குள் உச்சரித்தபடியே உச்சந்தலை வரை ஒவ்வொரு பாகமாக ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.
நிதானமாக மூச்சை இழுத்து விடவும். சுவாசம் உள்ளே செல்லும்போது, ‘இயற்கை பேராற்றல்’ நம் உடம்புக்குள் செல்வதாகவும், சுவாசம் வெளியேறும்போது, தேவையற்ற எண்ணங்கள், அழுக்குகள் நம் உடம்பில் இருந்து வெளியேறுவதாகவும் எண்ணிக்கொள்ளவும்.
உடம்பு நன்கு ரிலாக்ஸான பிறகு, வலது பக்கமாக ஒருக்களித்து படுத்து, இரு கைகள் உதவியுடன் எழுந்து உட்காரவும். கைகளை நன்கு உரசி, கண்கள் மீது சில விநாடிகள் வைக்கவும். உள்ளங்கை நோக்கி சிமிட்டியபடியே கண்களை திறக்கவும்.
யோகாசனங்கள் பற்றிய சிறு அறிமுகமே ‘தினம் தினம் யோகா’. நன்கு யோகாசனம் கற்றறிந்தவரின் நேரடி கண்காணிப்பில் முறையாக யோகம் பயின்று, ஆரோக்கியமான வாழ்வு பெறுவோம்!
தொடர்புக்கு: ravikumar.s@hindutamil.co.in