

ஒரு தவளை முன்னங்கால்களை உயர்த்திக்கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்தால் எப்படி இருக்கும்.. அதுபோல செய்வதுதான் உத்தான மண்டூகாசனம். ‘நாம் ஏன் தவக்களை மாதிரி உட்கார வேண்டும்?’ என்ற ‘மைண்ட் வாய்ஸ்’ கேட்கிறது. உலகில் மரம், மலை, தாவரங்கள், விலங்குகள் என அனைத்துக்கும் தனித்தனி சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இவ்வாறு பல்லாயிரம் உயிரினங்களின் சிறப்பம்சங்கள், குணாதிசயங்களின் அடிப்படையில் பல்வேறு யோக நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தவளை போல கால்களை பரப்பி உட்கார்வதோடு, கைகளையும் உயர்த்தி வைத்துக்கொள்ளும்போது, நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கிறது. இதனால், ஆழ்ந்து சுவாசிக்க முடிகிறது. இந்த ஆசனத்தால் முதுகு, கழுத்து வலி குணமடைகிறது.
உத்தான மண்டூகாசனம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
வலது காலை மடித்து, அதன் மீது ஏறி உட்கார்ந்து, இடது காலையும் மடித்து அதன் மீது உட்காரவும். இது பல முறை நாம் பார்த்த வஜ்ராசனம். கால் கட்டை விரல்கள் சேர்ந்திருக்க, முட்டிகளை அகட்டி வைத்துக் கொள்ளவும். வலது கையை மேலே உயர்த்தி, முட்டி வரை மடித்து, தோளின் இடது பின்புறம் தொடவும். அதேபோல, இடது கையை உயர்த்தி, தோளின் வலது பின்புறம் தொடவும். கை முட்டிகள் நன்கு மேல் நோக்கி உயர்ந்திருக்கட்டும். இரு கைகளின் கட்டை விரல்கள் ஒன்றன் மீது ஒன்று பதியுமாறு வைத்துக் கொள்ளவும். நன்கு மூச்சை இழுத்து விட்டபடி, 1-10 எண்ணவும். இயல்பு நிலைக்கு திரும்பி ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.
நாளை – தைராய்டு குணமாக..