Published : 17 Jan 2022 09:33 AM
Last Updated : 17 Jan 2022 09:33 AM

தலித் கலை அரங்கின் தந்தை டாக்டர் கே.ஏ.குணசேகரன்

டாக்டர் கே.ஏ.குணசேகரன்

முனைவர் கே.ஏ. ஜோதிராணி

கே.ஏ.குணசேகரனின்7- வது நினைவு தினம் இன்று...

ஆதித்தமிழரின் அன்றாட வாழ்க்கையிலிருந்து கிளர்ந்து எழுந்தது தமிழர் இசை. இரத்தத்தில் ஊறிய நாட்டுப்புற மெட்டு, நரம்புகளில் ஒன்றிக் கிடந்த இசை. அப்பா, அம்மா, தாத்தா என் பாட்டான் முப்பாட்டனுடையது என்பதால் கே.ஏ.ஜி யின் குரலும் அழகுபட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை கிராமத்தில் 12.05.1955 இல் பிறந்த கரு.அழ.குணசேகரன் அவர்கள் தனது 61 வயதில் 17.01.2016 அன்று மறைந்து ஆறு ஆண்டுகள் போயினும் உறவுகளின் நெஞ்சம் கனத்தைச் சுமக்க, அவர் அளித்த ஆறாத 'வடு' மட்டுமே தலித் குடும்பத்து வரலாறாகி எங்களோடு நிற்கிறது.

மண்ணின் கலைகளால் முனைவர் பட்டம் பெற்றிருந்த அவர் பல்கலைக்கழகங்களில் Dr. K.A.குணசேகரன் என அழைக்கப்பட்டார் அவரது இசையில் ஈர்க்கப்பட்ட அன்பர்கள் கே.ஏ.ஜி. என வாஞ்சையோடு அழைத்தனர். அப்பெயரே துளங்கி கொண்டிருக்கிறது.

‘அவரது இழப்பு கலைச் சமூகத்திற்கு நேர்ந்த இழப்பு மட்டுமல்ல, தலித் விடுதலையின் கலை இலக்கிய அரசியலுக்கு நேர்ந்த பின்னடைவு என்றே சொல்ல வேண்டும் என்ற உரையாடலை இலண்டனிலிருந்து பேசி முடிக்கும் பாலசுகுமார், இலங்கைக் கலை கலாச்சாரப்புலத்தின் மேனாள் முதன்மையர் கே.ஏ.ஜியின் மாணவராகப் பயணித்தவர். எத்தனை முகங்கள் கொண்டாய் என்ற கே.ஏ.ஜியின் கலை அரசியலை வரலாற்றுப் நூலாக்கிப்படைத்துள்ளார்.

நாட்டுப்புற நடனக் கலையின் காலடி வைப்பு முறைகளை ஆய்வு செய்திட முனைந்த நாட்டுப்புற பாட்டுக் கலைஞர் கே.ஏ.ஜி. அடவுகட்டி ஆடும் பறை இசைக் கலைஞன். கரகம், காவடி, மாடாட்டம், மயிலாட்டம் என ஆட்டக் கலைஞனாகவும், நாட்டுப்புறவியல் ஆய்வாளராகவும், இசைக் கலைஞராகவும் நாடகக் கலைஞராகவும் கரகம் காவடி சிந்துபாடியும் தெம்மாங்கு வகை கூட்டியும் வாழ்ந்தவர் ஆதிக்க பீடங்களில் மறுதலிக்கப்பட்ட கே.ஏ.ஜியின் இசைக்குரல், புதைக்கப்பட்ட நாட்டுப்புறக்கலை வரலாற்றைத் தோண்டி எடுத்து வந்து வைப்பதோடு, எதிர்கால வரலாற்றையும் மரபு இசை மெட்டில் பட்டாய் எழுதிச் சென்றிருக்கிறது.

சாமி, காதல் என 'பாடு பொருளாய் ' கொண்டு பாடும் கிராமியப்பாட்டுக் குழுக்கள் நிறைய உருவாகியுள்ளன. வெகுசன ஊடகங்கள் இம்மாதிரிக் குழுக்களோடு மிகுந்த நெருக்கம் உறவு வைத்துக்கொள்வதும் கலை விலை போவதுமான காலம் கண் முன்னேயிருக்க “நம் இசை மூலம் சாதாரண மக்களிடம் " சகலத்தையும் சொல்ல வேண்டும். 'இசையை ரசிக்கச் செய்ய வேண்டும், அதே வேளையில் விழிப்புணர்வை அவர்களிடம் வளர்க்க வேண்டும்' இந்த இருமுனைக் கூர்மையுடன் இசை நிகழ்ச்சி அமைய வேண்டும்” என்றறிந்தே ஆயிரக் கணக்கான மேடைகளில் விலை பேசாமல் பாடிச் சென்றவர்.

டாக்டர் அம்பேத்கார் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போர்க்குணமிக்க விழிப்புணர்வு தலித் இலக்கிய அறைகூவல்களாய் பண்பாட்டுப் பேரலைகளாய் தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களாய் தலித் இசை முழக்கங்களாய் தனது கலக வேர்களைத் தமிழ் மண்ணில் பரப்பி வந்தன. சாதீய நச்சு வலையில் சிக்குண்டு கிடக்கும் இந்த மண்ணின் விடுதலையை சாதிக்கும் போராட்டக் காலத்திற்கு தலைமையேற்க கலைகள் ஆயுதங்களாக்கி நின்றன. அந்த காலங்களில் மண்ணின் இசையை விடுதலை சிறுத்தை இயக்கத்தோடும், தம் பங்களிப்பையும் தவறாது இணைத்துக்கொண்டவர்.

ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற வளர்ச்சி நாடுகளில் அடிமைத் தனத்திற்கு எதிராக மக்கள் இசை, கலகத்தைத் தூண்டுவதாக அமைந்ததைப் போல தமிழகத்தின் ஆயிரக்கணக்கான மேடைகளில் மக்கள் மத்தியில் திருவிழாக்களின் மகிழ்ச்சியோடும் கலகங்களின் உக்கிரத்தோடும் பரப்பிக் கொண்டிருந்தவர் டாக்டர் கே.ஏ. குணசேகரன் என நிறப்பிரிகை ஆசிரியர் எழுத்தாளர் து.ரவிக்குமார் எழுதுகிறார். சற்றேரக்குறைய 23 ஆண்டுகளுக்கு முன் இதழாசிரியர் குறுஞ்சாங் குளத்துப் சாதிப்படுகொலை வரலாற்றை எழுதிவிட்டார்.

அந்த வரலாற்றை சொந்த மண்ணில் கொலை வெறிச் செயல் நடந்ததை ஆதிக்கவாதிகளின் கொடூரச் பாதகத்தை கொலைச் சிந்து பாட்டாகப் கே.ஏ.ஜி. பாடியிருக்கிறார். அதை அக்கினீஸ்வரங்கள் குறிப்பேடாக்கியுள்ளது. மேல்தட்டு இசையும் திரையிசையும் மட்டும் நுழையக் கூடிய இடங்களில் தலித் இசையின் அத்துமீறிய நுழைவைச் சாதித்தவர்களில் முதன்மையான கலையறிஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் என்று முன்னுரை எழுதுகிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

பெரும்பாலும் தலித் இசைக் கலைஞர்களும், கிராமிய இசைக் கருவிகளும் அதிக அளவில் பங்கு பெறும் தன்னானே இசைக் குழுவை அமைத்து ஆயிரக்கணக்கான மேடைகளில் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் இந்த தலித் இசையை முழங்கினார் என்பதை கலை இலக்கிய எழுத்து உலகு அறியும்.., சமத்துவ தத்துவம் பயின்றவரை கலை இலக்கியப் பெருமன்றங்களும் அறியும். ஆனால் அவரின் நாடக ஆளுமையை அறிய முனைந்தால்;

நாடகங்களை இயற்றுவதும், இயக்குவதும், நாடக நடிகராகிப் பாடுவதும், இசை அமைப்பதும் என நாடக அரங்கின் அத்துனைப் பரிமாணங்களையும் அரங்கக் கலையை நேசித்த அவரின் தனி ஆளுமையையும் புதுவை நாடகத்துறை பொதிந்து வைத்திருக்கிறது.

தமிழகத்தில் மறுதலித்த நாட்டுப்புறப்பாடல்களை மேடைகளில் ஏற்றிய கே.ஏ.ஜி, மேடை ஏற்றிய பார்வையாளர்களுக்கு சமூக அவலங்களிலிருந்து மீளுவதற்கான ஆயுதமாக நாட்டுப்புறக் மெட்டுவகைகளை தந்தவர். மட்டுமல்ல தலித் நாடகங்களையும் மேடை ஏற்றியுள்ளார். இன்று கொளுந்துவிட்டெறியும் குறிஞ்சாங்குளம் படுகொலை சம்பவத்தின் எழுத்து வரலாறு சொல்லுகிறது என்றால் அதைப் போராட்டக் குரலாக கிராமத்து மேடைகளிலும் இசைத்தும் பாடியவர் கே.ஏ.ஜி.என்பதை கலை வரலாற்று எழுச்சி பற்றிப் பேசுவோர் தவறாமல் குறிப்பிட்டு வருகின்றனர் என்பதைக் கேட்க முடிகிறது. குறிஞ்சாங்குளம் படுகொலை பற்றி விவாதிப்போரால் நினைவோடு பேசப்படுகிறது நியாயம்.

கனன்று எழும் கே.ஏ.ஜியின் காந்தக்குரல், குறுஞ்சாங்குளத்தின் காந்தாரி அம்மன் சிலைக்கான கொலைச்சிந்து, பாட்டாக வடிவம் கொள்கின்றது.

இந்த மாதிரிக் கொடுமைகள் - உலகில்
இதுவரை நடந்ததில்லை - கேட்கவே
இதயம் பொறுக்குதில்லே
சாதியின் பெயராலே
படுகொலை செய்து வரும்
சமுதாயம் எதுவுமில்லே - குந்தியா போல்
சமுதாயம் எதுவுமில்லே
முதுகுளத்ததூரு, வெண்மணி, விழுப்புரம்,
உஞ்சனை, புளியங்குடி - தொடர்ந்து

போடி பரமக்குடி - இந்த
ஊர்களில் தலித்துக்கள் கொல்லப்பட்டாங்க
எங்குமே ரத்தக்களம் - அடுத்தது
விழுந்தது குறிஞ்சாங்குளம்"
குறிஞ்சாங்குளத்திலே நடந்த கொடுமையை
குணசேகர் பாடிவாறேன்
ரவிக்குமார் எழுத்திலே
பாடி வாறேன் நாயுடு வெறியரால் கொலையுண்டு மடிந்தார்
நாலுபேர் நம்மாளு மடிந்தவர்
நாலுபேர் நம்மாளு
புள்ளையாரு காளியம்மன் அய்யனாரு
அஞ்சுவகை தெய்வமுங்க - அவுங்களுக்கு
அஞ்சுவகை தெய்வமுங்க

நமக்குக் கடவுளா இருக்குற - காந்தாரி அம்மனும்
கரைஞ்சது களிமண்ணுல - மழைபேஞ்சு
கரைச்சது களிமண்ணுல
பறப்பயலெல்லாம் கல்லுல கோயில் கட்டிப்புட்டா
அவமானம் நமக்குள்ளார்
அவமானம் நமக்குன்னாக- காந்தாரிய
வைக்காதேன்னு சொன்னார் - காந்தாரிய
வைக்காதே குத்தமின்னார்.
பஸ்ட்டுஷோ சினிமா பார்த்து திரும்பிய
பாதைய வழி மறிச்சார் இருட்டிலே
பாதையை வழி மறிச்சார்
பதைத்து ஓடவே அறுத்தார் - கொரவளைய
ஆட்டைப் போல அறுத்தார்

சக்கரபாண்டி , அம்பிகாபதி
அன்பு, சுப்பையா - ஆமாம்
அன்பு சுப்பையா
நாலு பேரையும் படுகொலை செஞ்சங்க
நாயுடு கும்பலையா
வெறிபுடிச்ச நாயுடு கும்பலய்யா
இந்து என்பார்கள் தமிழன் என்பார்கள்
எவரையுமே காணோம் ஒதவிக்கு
எவரையுமே காணோம்.
பொணத்துக்கும் நம்மனுக்கும் பேதமில்லையா
பொறப்படு எழுந்திருச்சி உடனே
பொறப்படு எழுந்திருச்சி

(நிறப்பிரிகை து.ரவிக்குமார்) எனத் கொலைச் சிந்து பாடிய கலைப் பேராளி கே.ஏ.ஜி. 1980 களில் அவர் உருவாக்கிய தன்னானே இசைப்பயணம் நாட்டுப்புற இசைப் பயிற்சி அடவு, நாடகப் பயிற்சி என நீண்டு கொண்டே சென்றதும்.

தன்கலையை சமூக மாற்றத்திற்கான போராட்டக் கலை இயக்கமாய் அமைத்துக்கொண்ட அவர்,

“மனுக் கொடுத்துப் பேசவேணாம்”
"மந்திரியப் பார்க்க வேணாம்”
"மக்களெல்லாம் ஒன்னா சேர்ந்தா ராசாக்கா”
- இந்த மண்ணையே நாம் மாற்றிடலாம் அய்யாக்கா.. ..
என மண்ணில் வேர்பிடித்த மக்களிடம் மாற்றம் தேடும் தெம்மாங்கு மொட்டெடுத்துப் பாடி வந்தவர்.

என் பாட்டுக்கச்சேரி மேடைகள் மாற்றம் தேடும் சமூக மேடையாகத் தான் அமையனும், அதை நான் அமைச்சுக்குறேன். கலைஞனுக்கு கலைமேடை தான் ஆயுதக்களம் என்பதில் தின்னம் கொண்டவர்”

மனிதனைச் சாதியாகப் பிரித்த பண்பாடு, மலினப் பண்பாடு, மரபு முரண்பாடு, கசடு, அது காற்றின் வெள்ளத்தில் கழியட்டும் “மழி” என நாடகக்கலை ஆயுதம் ஏந்தி புறப்பட்ட புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையின் தலைவர், டாக்டர் கே.ஏ.குணசேகரன்.



சாதிச் சமூக மாற்றம் காண, புதிய மரபுச் சிந்தனை அரங்கக் கலைகளைப் பயிற்சியளிக்கும் களங்களை உருவாக்கியவர். இவர் நாடக உலகம் புதைத்து வைக்கப்பட்ட தலித் அரங்கக் கலை படைப்பாளி. சின்னவயது முதல் நடந்து வந்த பாதையெல்லாம் சாதிய இழிவு படிந்த ஆறாத “சுவடுகளை பதியம் செய்த 21 ஆம் நூற்றாண்டின் - வடு எனும் தலித் சுய சரிதையின் முதல் ஆசிரியர்.

அவரை புதுவைப் பல்கலைக் கழக நாடகத் துறையின் தலித் நாடக அரங்கின் தந்தை என பேசகிறது என்பதை தலித் அரங்கியல் எனும் அவரது, நூல்வழி அறியலாம். " தொட்டால் தீட்டு' எனச் சொல்லிய தீண்டாமையின் கோரத்தை அவலத்தை ஆவேசத்தோடு நோக்கும் தலித் இசைப்பாடகனிடமிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது “தொடு நாடகம்"

"தொடு” படிப்பதற்கு மட்டுமின்றி நாடக அரங்குகளிலும் தெருமுனைகளிலும், எங்கெங்கு வாய்ப்புக் கிட்டுமோ அங்கெல்லாம் நடத்திக் காட்டி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வரும் விளிம்பு நிலை மக்களுக்கு விழிப்புணர்வு பெறப்பயன்படும் என ஆர். பார்த்தசாரதி வெகுவாகப் பாராட்டிச் செல்கிறார்.



வலிப்பு வந்து வீழ்ந்து கிடந்த ஆதிக்ககாதி மனிதன் ஒருவனை தாழ்த்தப்பட்ட ஒருவர் முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். ஆனால் ஆதிக்க சாதிக்காரனுக்கு உணர்வு திரும்பியவுடன், முதலுதவி செய்து காப்பாற்றிய தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு தண்டனை கொடுக்கிறான்”. அந்த தீண்டாமைச் செயலை சொல்லுகிறது 'தொடு' நாடகம். இதுவரை இத்தகைய பதிவுகளை நாம் நாடக அரங்குகளில் நவீன கலையரங்குகளில் பொது வெளியில் பேசப்பட்டிருக்கவோ கேட்டிருக்கவோ முடியாது. சாதியத்தில் மண்டிக்கிடக்கிற முரண்பாடுகளுக்குள் மேல்தட்டு வாசமும் வீசாமல் இருக்க வாய்ப்பில்லை. தலித்துக்களின் கலைக்குள் தீண்டாமை தலித்துக்களின் வடிவங்களைக் காட்சிப்படுத்தி தலித் நாடக அரங்கின் முதல் இயக்குநராக' தலித் நாடகத் தந்தையாகப் பிறப்பெடுத்திருக்கிறார் கே.ஏ.ஜி.

தமிழக அரசுச் செயலர் ஆணையேற்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை கோவை, கரூர், வேலூர், சேலம், உதகை, நாமக்கல் எனும் மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று பயிற்சி முகாம்களை நடத்திய நாடகப் பயிற்சியாளர். விழுப்புரம் மாவட்டத்தில் தோழமை கொண்ட பேராசிரியர், சமூக அக்கரையாளர், பா.கல்யாணி பொறுப்பாளராக இருந்து நடத்திய பகுதியில் தலித்துகளின் நிலையை, ஒரு மணி நேரத்தில் விளங்க வைக்கும் "தொடு” நாடகத் தந்தை இவர்.



நாடகப் பேராசான் சங்கரதாசு சுவாமிகளால் எழுதப்பட்டது “வள்ளி திருமணம்” நாடகம். அந்த நாடகம் கே.ஏ.ஜி எனும் நாடக ஆளுகையின் பார்வையில் மறுவாசிப்பைப் பெற்றதும் அதனை புதிய சிந்தனைப் பிரதியாகப் பார்த்த நடிகர் நாசர் “முந்தைய நாடகக் கருவினை மாற்றி சமகாலத்துக்கு நவீன மாற்றம் செய்கிறார் கே.ஏ.ஜி., அந்தக் கதையையே சமகாலத்துக்கு மாற்றுகிறார். "காதலில் தன்னை ஏமாற்றிய முருகனை ஓடச் செய்கிறாள் வள்ளி. காலத்தேவையை உணர்த்திச் செல்லும் புதிய கதைக்கள் உருவாக்கும் ஆதர்சன சக்தியைக் கொண்டவர் கே.ஏ.ஜி. என்கிறார்.

பல்கலைக் கழகங்களில் உயர்ந்த அதிகாரப் பதவிகளில் இருக்கும் கலை வல்லுநர்கள் தங்களுக்கான இறுதி இலக்கை அடைந்ததாக முந்தைய பாதையை மறந்து சாதகமான கூட்டுக்குள் பணி செய்து வாழும் சூழலில் தன்பள்ளிப் பருவம் தொடங்கிய பாட்டுக் கலையை, தான் வகித்த பல்கலைக்கழக உயர் பதவி அதிகாரங்கள் வந்த போதும் நினைந்து வாழ்ந்தவர் நடந்து வந்த பாதையை நினைந்து வாழ்ந்தவர். பல்கலைக்கழகப் பேராசிரியர், நாடகத்துறைத் தலைவர், கலைப்புல முதன்மையர், உலகத்தமிழாராய்ச்சி இயக்குநர் என அதிகாரப் பதவிகள் மேட்டுமைப்படுத்த வாய்த்த போதும், தான் கையியெடுத்த நாட்டுப்புற பாட்டுக் கச்சேரிகளை விட்டுப்பிரிந்ததில்லை. ஆயிரமாயிரம் மேடைகள் விரும்பி அழைத்தன. பல்கலை பணி நேரம் முடித்து, மாலை நேரங்களில் புறப்பட்டு நள்ளிரவுகளில் தமிழகத்தின் கிராமத்து மேடைகளில் பாடுவதை கைவிடுவதே இல்லை. ஆனால் எந்த அரசியலும், அவரை கட்டுப்படுத்தியதும் காரணம் காட்டாறு போல தன் கொள்கைப்பிடிப்பு தவறாது உறுதியோடு நின்று மக்களோடு வாழ்ந்தவர் பாட்டுக் களத்தில் நின்று தமிழ் மக்களின் நெஞ்சை இசையால் கொள்ளையிட்டவர்.

கே.ஏ.ஜி.யின் இசை கேட்டு விரும்பி அழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அவர் முதல்வராக இருந்தபோது புதுவையில் அமைந்த கலைப்பணியை, தமிழக மண்ணிற்கும் தரவேண்டும் என விழைந்த முத்தமிழறிஞரின் எண்ணியதன் விளைவு தமிழக மரபிசை கலைகளை திராவிடனாக நின்று பயணித்தார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பணி. மூன்றாண்டுகள் கௌரவ வருகை தந்து மீண்டும் புதுவைப் பணியை தொடர்ந்தார் என்பதை சுட்டுவது கடமை. கலைஞர்களை கலைஞர்கள் தான் நாடி பிடித்துப்பார்க்க முடியும். அவரது முத்திரைப் பணிக்கு மகுடம் சூட்டப்பட்டது. செம்மொழி மாநாட்டுப் பாடலில் செம்மொழியின் குரல் "அதுவே” என ஒற்றைச் சொல் இசையாய் கலை உச்சத்தைத் தொட்டு உலலெகங்கும் பறைசாற்றி நிற்கிறது. தான் விரல்பிடித்து வளர்த்தெடுத்த தஞ்சாவூர் சின்னப்பொன்னு, கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை பாடிய புதுக்கோட்டை மாரியம்மா, தஞ்சாவூர் தப்பாட்டக் கலைஞர் இராஜேந்திரன்... என நூறு நூறு உறவுகளை அடைகாத்தபடி வளர்த்தெடுத்ததும் கலை வரலாற்றின் வளர்ச்சி. அவர் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு உபாதைகள் ஏற்பட்டிருந்த தருவாயிலும் இறக்கும் தருவாயிலும் டெல்லி தமிழ்ச்சங்கம் அவரின் கலையை விரும்பி அழைத்திருந்ததை, இறுதி மேடையாக நின்று பாடியதும் அறிவோம். அரை நூற்றாண்டு பாட்டு மேடையைத் தன் காந்தக் குரலால் வசப்படுத்தி வாழ்ந்தவரை தமிழ் மரபுக் கலை உலகு நினைக்கும்” அவர் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்.



2021 ஆம் நூற்றாண்டின் தன் வரலாறு "வடு” எழுதிய கே.ஏ.ஜியின் படைப்பு பலமொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றது.

காலங் காலமும், நாளும் கவனிப்புப் பெறாத பதிவு செய்யப்படாத ஆவணங்களாக தலித்துக்களின் வாழக்கையும் அவலங்களும், சோகங்களும் நிறைந்ததாக இருந்தபோது அவற்றையெல்லாம் கலைக்களங்களில் பதிவு செய்தவர் டாக்டர் அம்பேத்கார் அவரின் வழியாக அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு தோன்றிய முதல் தலித் வரலாற்று நூல் என்ற பெருமைக்குரியவராக இன்று அறியப்படுகிறார். சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலத்துறையில் அவரது நூல் திறனாய்வு செய்யப்பட்டு வரவேற்பையும் பெற்றது.

நாட்டுப்புறப் பாடகர், நாட்டுப்புற வியல்துறை ஆய்வாளர், நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், இசையமைப்பாளர், பேராசிரியர், நாடகத்துறைத் தலைவர், கலைப்புல முதன்மையர், உலகத் தமிழாராய்ச்சி இயக்குநர் என தான் வகித்த பொறுப்புகளில், காலூண்றி கல்வித் தளமெல்லாம் தன் பங்களிப்பால் எதிர்காலத்திற்கும் உயிர்த்திருப்பார். "கலையில், ஒடுக்கப்படுவோர் குரலில், எழுத்தில் ஆய்வில், நடிப்பில் என வருங் காலத்தில் உண்மைக் கலைஞர்களின் வழி

உயர்த்தளிப்பார்". ஆம்! தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதியின் அருகாமையில் புதுவையில் புதைந்திருக்கும் கே.ஏ.ஜி.தமிழக தலித் கலைஞர்களின் ஞாபகத்திலும் வளர்ந்து நிற்பார்.

கே.ஏ.ஜி.யின் நூல்களில் முக்கியமானவை நாட்டுப்புற மண்ணும் மக்களும், இசை நாடகமரபு, பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள் என 34 நூல்கள் நிற்கின்றன.

தலித் அரங்கியல் என்னும் நூல் தமிழ் நாடக உலகில் தலித் நாடக அரங்கின் வரலாற்றைச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. நாடகத் துறையில் இவரது முத்திரையாக “பலியாடுகள்" என்ற நாடகம் தமிழக தலித் வரலாற்றில் தனி இடத்திற்குரியது. தலித் கொடுமைகளையும் அதிகாரத்தின் தழும்புகளையும் தலித் பெண்களின் மறுத்த உரிமைகளையும் 100 ( நூறு) மேடைகளில் அரங்கேற்றிய நாடக ஆளுமையாகத் திகழ்கிறார். தலித் அரங்கின் தந்தையாகப் பரிணமித்துக் கொள்கிறார், பறைசாற்றப்பட வேண்டியவர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் எனும் கலைமாமணி.

“ஆக்காட்டி . . . ஆக்காட்டி . . . பறவைப் பாடலை கே.ஏ.ஜி. பாடிக் காட்டியபோது நாடி நரம்புகள் முறுக்கேறிக் கண்கள் பொங்கும் நீரின் இடையே அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்குப்பட்டது:- இதோ நமக்கு அமெரிக்கப் பாடகனைப் போல் தமிழகத்திலும் ஒரு பால்ரோப்ஸன் கிடைத்துவிட்டார். அமெரிக்கா நாட்டில் சென்ற காலம் முடிந்து கறுப்பு இன மக்களின் பிரதிநிதியாக ஒரு ஜனாதிபதி வரநேர்த்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு அதிசயம் நடந்தால் வியப்படைய வேண்டியதில்லை” அத்தகைய நிகழ் காலத்தை உருவாக்கும் இசைப்பாட்டுக் கலைக்களத்தை உருவாக்கித் தந்திருப்பதை உறுதிப்படுத்திச் சொல்லி வைத்திருக்கிறார் அறிஞர் தமிழகத்தின் கிராமத்துக் கதை சொல்லி கி.ராஜ நாராயணன்.

உலகப் பிரசித்தி பெற்ற பாடகர் பால்ரோப்ஸன் பாடிய இசைத் தட்டுக்கள், கறுப்பு இனமக்களின் அனாதரவான சோகத்தையும் கேள்வி கேட்பாரின்றி அவர்கள் சொல்லப்படுவதையும் துன்புறுத்துவதையும் சொல்லுகின்றன. அவ்வாறே தஞ்சை கீழவெண்மணியில் கூரைவீட்டுக்குள் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் என 44 பேரை பூட்டித் தீ வைத்து எரித்தபோது அவர்கள் இட்ட அவலக் குரல்கள் மனசை அறுக்கும் ஓலங்களின் ஓசையாக அப்படியே மனசை அறுத்தது. ஆனால் கே.ஏ. குணசேகனின் குரல் எச்சரிக்கை செய்வது போல் இருக்கும்" எனவும் பதிவு கிராமத்து கதை சொல்லி கே.ஏ.ஜியைப் பதிவும் செய்து வைத்துக் சென்றிருக்கிறார்.

நா.வானமாமலை போலவே தமிழகமெங்கும் நாட்டுப்புறத்துறையில் பலருக்குப் பயிற்சியளித்து பல குழுக்களை ஏற்படுத்தித் தமிழகத்தின் பண்பாட்டுப் போராளிகளின் படைவரிசையை வீரிய மிக்கதாக விரிவுப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை நாட்டுப்புறக் கலை எனும் சொல்லை உச்சரிப்போர் பதிவு செய்வார்கள்.

மக்களின் பிரச்சனைகளை காரண காரியங்களை அறிந்து கொண்டு அதை எதிர்நோக்கும் ஆற்றலும் சிந்தனைத் தெளிவும், எளிய மக்களிடம் அதிக அளவில் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் இயக்க வாதிகளின் மத்தியில், பட்டி தொட்டிகளிலெல்லாம் நெருப்புக்குரலாய் விழிப்புணர்வை ஊட்டிய கலைஞர் கே.ஏ.ஜி.

சமூக அக்கரையுள்ள ஆளுமைகளோடு தோழமை கொண்டு இயங்கிய கே.ஏ.ஜி. வெள்ளந்தி குணத்தின் சொந்தக்காரர். நாடகப் பேராசான் ந.இந்திராபார்த்தசாரதி வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட நாடகத்துறையில் கே.ஏ.ஜி.தலைவராகப் பணியாற்றியதும் செயல்பாட்டாளராக நாடகக் கலைத்துறையை வளர்த்தெடுத்ததும் நாடக வரலாற்றில் மைல்கல் கே.ஏ.ஜியின் இறப்பு செய்தி கேட்டபொழுதில் ஆந்திர மாநிலம் சத்தீஸ்கரில் நாடகம் நடத்தி முடித்திருந்த மாணவர் ஒருவர், அவரைப் பற்றிய நாடக ஆளுமைப் பண்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்ததையும் மற்றவரை ஒப்பிட்டால் ஒரு படைப்பாளி தன்னைப் போல் தன்னிடம் பயிற்சி பெறும் மாணவனையும் தனித்து இயங்கச் செய்திட விரும்பம் கொள்ளும் நாடக ஆளுமை என நினைவு கொள்கிறார். கலை அறம் செய்தவராகப் போற்றப்படுகிறார்.

தமிழகத்தில் பிறந்த தமிழ் மண்ணின் பண்பாட்டுக் கலை வடிவுகளை வளர்த்தெடுத்த கே.ஏ.ஜி.யை புதுவை அரசு பேராசிரியராக்கிக் கொண்டது நாடகத்துறை தலைவராக்கியது. புல முதன்மையராக்கியக்கொண்டது புதுவைக் கம்பன் கலை அரங்கம் தத்தெடுத்துக் கொண்டது. ஆனால் தமிழகக் கிராமியக் கலைகளை உலகில் அறிமுகப்படுத்திய அறிஞரை 21 ஆம் நூற்றாண்டின் முதல் சுயசரிதை நூல் எழுதிய ஆசிரியரை, பன்முக ஆளுமை கொண்ட தலித் நாடக அரங்கின் தந்தையை கலைமாமணி விருதுகள் பல பெற்ற அரங்கக் கலை ஆளுமையை அயல் நாடுகளில் விருதுகளைப் பெற்ற கே.ஏ.ஜி.யை. 34 நூல்களின் ஆசிரியரை, பன்னாட்டுச் சொற்பொழிகள் நிகழ்த்தியவரை, நாடகக் நடிப்புத் திறமையைத் திரைப்படத்தில் பதிவு செய்வரை, நாடக இயக்குநரை, நாடக ஆசிரியரை மெட்டுக்கட்டும் தெம்மாங்கு பாடகரை ஆயிரம் மேடைகளில் முழங்கிய தலித் தமிழ் மரபுக் கலையறிஞரை தமிழகம் துணை வேந்தராக்கிப் பார்க்க மறுதலித்ததில் வருத்தத்தோடே கடந்து மறைந்திருக்கிறார்.

மண்ணின் மரபு கலையை வளர்க்க தொடங்கிய அவர் பயிற்சியளித்த சிவகங்கை சீமையில் “தமிழக மரபு கலை பயிலரங்கு” அமைப்பது அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

-முனைவர் கே.ஏ. ஜோதிராணி,
இணைப்பேராசிரியர்
முதுகலைத்தமிழ் மற்றும் உயர் ஆய்வு மையம்
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி,
அண்ணா சாலை, சென்னை 600 002.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x