

காமிக்ஸ் புத்தகங்களுக்காகப் பேயாய் அலைந்த காலம், ஒரு வசந்த காலம்தான். கோவில்பட்டியில் பிரபலமாக விளங்கிய காலண்டர் ஓவியர் கொண்டையா ராஜுவின் மகள் வயிற்றுப் பேரன் சந்தானகிருஷ்ணன் எனது பள்ளித் தோழன். மாலை வேளைகளில் தனது பிரதான சிஷ்யரான ஓவியர் சுப்பையாவின் சாரதா ஸ்டூடியோவில் வந்து அமர்ந்திருப்பார் கொண்டையா ராஜு. இரவு 8 மணிக்கு சுப்பையாவின் மகன்களில் ஒருவரும், தற்போது பத்திரிகை வடிவமைப்பு ஓவியராகப் பணிபுரியும் கலைஞருமான மாரீஸ், அவரது கையைப் பிடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அவர் இல்லாத சமயங்களில், அந்த மகத்தான ஓவியக் கலைஞரின் மென்மையான கரங்களைப் பிடித்தபடி அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பாக்கியம் எனக்கு வாய்க்கும்.
காமிக்ஸ் புதையல்
அவரது வீட்டுக்கு எதிரே மூங்கில் தட்டி போடப்பட்டிருந்த சிறிய வீட்டில் சந்தான கிருஷ்ணன் குடும்பத்தார் இருந்தனர். அங்கு போன பின்புதான் என் வாசிப்புலகத்தின் வாசல் திறந்தது என்பேன். அவர்கள் வீட்டு வராந்தாவில் அட்டைப்பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன. ஏதோ பொக்கிஷத்தை ஆராயும் தோரணையில், சில சிறுவர்கள் அமர்ந்து அந்தப் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தனர். தங்கப்புதையல் கிடைத்தது போல் எனக்குள் ஓர் உணர்வு. அங்கே முத்து காமிக்ஸின் அத்தனை புத்தகங்களும் குவிந்துகிடந்தன. இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் - டேவிட் சாகசங்கள் மற்றும் பொன்னி காமிக்ஸ் புத்தகங்கள், அம்புலிமாமா, அணில், கோகுலம் என அந்தப் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்க மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.
நேரம் காலம் பார்க்காமல் சந்தானகிருஷ்ணனின் வீட்டிலேயே பழியாகக் கிடந்து அவற்றை வாசித்தேன். அந்த வீட்டின் குறுகிய வராண்டாவில் அமர்ந்தபடி, விரிந்துகொண்டே செல்லும் சாகச உலகில் இரும்புக்கை மாயாவியோடு பயணம் செய்தேன். மின்கம்பிகள் மீது கை வைத்தால் அவர் உடலில் பாயும் மின்சாரம் அவரை அரூபமாக்கிவிடும். ஆள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார். கைமட்டும் காற்றில் மிதந்துவருவதுபோல் இருக்கும். அந்த சாகசம் ஆயுசுக்கும் மறக்காது. ஓவியர் கொண்டையா ராஜு காமிக்ஸ் புத்தகத்தைப் புரட்டி, படங்களை உற்று நோக்கிப் பார்ப்பார் என்று சந்தானகிருஷ்ணன் அடிக்கடிச் சொல்வான். (காமிக்ஸ் புத்தகம் படிக்க வாய்ப்புக் கொடுத்ததற்குப் பிரதியுபகாரமாக எனது வீட்டுப்பாட நோட்டுகளை அவனுக்கு மட்டும் காண்பித்து உதவுவேன்.)
கடைசியில கொஞ்சம் பக்கத்த காணோம்
ஒரு முறை முத்து காமிக்ஸின் ஒரு புத்தகத்தை விறுவிறுப்பாகப் படித்துக்கொண்டிருந்தேன். லாரன்ஸ் - டேவிட் இணைந்து துப்பறியும் படக்கதை. மொட்டைத் தலையனான டேவிட் முட்டாள்தனமாய்ப் பேசினாலும், தக்க சமயங்களில் லாரன்ஸுக்கு உதவுவது அவனது இயல்பு. எதிர்பாராத வகையில் எதிரிகளின் கையில் லாரன்ஸ் மாட்டிக்கொள்வார்... சட்டென்று பார்த்தால், கடைசி 20 பக்கங்களைக் காணோம். யாரோ ஒரு விஷமச் சிறுவனின் கைங்கரியம் போலும். தாங்காமல் அழுதே விட்டேன். சந்தானகிருஷ்ணனின் அக்கா சுஜாதா விறுவிறுவென்று வந்து “ஏண்டா அழுறே? பக்கம் கிழிஞ்சிடுச்சா? மிச்சக் கதையையும் நான் சொல்றேன், வாடா” என்று என்னைச் சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும், அழுகை அடங்க வெகுநேரமானது.
காமிக்ஸ் புத்தகங்கள் தொடர்ந்து வாசித்ததன் விளைவாக, பள்ளி விளையாட்டு வகுப்புகளில் ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு வந்து, வேப்ப மர நிழலில் அமர்ந்து நோட்டில் படம் வரைந்து, சித்திரக் கதை சொல்லும் பழக்கம் ஏற்பட்டது. என்னைச் சுற்றி எப்போதும் ஐந்து பேர் அமர்ந்து சித்திரக்கதை வரைவதைப் பார்த்து என்னை உற்சாகப்படுத்துவார்கள். படம் வரைந்து பிற மாணவர்களையும் ‘கெடுத்த’ குற்றச் செயலுக்காக ஆசிரியரிடம் கை சிவக்கப் பிரம்படி வாங்கியது தனிக்கதை.
- இரா. நாறும்பூ நாதன், தொடர்புக்கு: narumpu@gmail.com