

‘தேக்கடி’, ‘கொசுக்கடி’ தெரியும்.. அதென்ன ‘அர்த்தகடி’ என்கிறீர்களா? ‘கடி’ என்றால் இடுப்பு. ‘சக்கரம்’ என்றால் வட்டம். இடுப்பை அரை வட்ட அளவுக்கு வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இப்பெயர்.
நிமிர்ந்து நிற்கவும். கால்கள் சேர்ந்தும், கைகள், உடம்பை ஒட்டியும் இருக்கட்டும். ஒரு முறை நன்கு மூச்சை இழுத்து விடவும்.
இடது கை உடம்பை ஒட்டியிருக்க, வலது கையை தோள் வரை உயர்த்தவும். தோள் மட்டத்துக்கு வந்த பிறகு, உள்ளங்கையை மேல் நோக்கி திருப்பவும். தொடர்ந்து வலது கையை மேலே உயர்த்தவும். கை, காதை தொட்டதும், மூச்சை நன்கு இழுத்தபடி கையை நன்கு மேல்நோக்கி உயர்த்தவும். மூச்சை விட்டபடியே, மெல்ல இடது பக்கமாக சாயவும். இடது தொடையில் பதிந்திருக்கும் இடது கை இயன்ற வரை கீழே இறங்கட்டும். வலது கை முட்டி மடங்காமல், காதை ஒட்டியே இருக்கட்டும். நன்கு மூச்சை இழுத்துவிடவும். 1-5 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே சமநிலைக்கு வரவும்.
அடுத்ததாக, மிக மிக மிக மெதுவாக வலது கையை தோள் பட்டை வரை இறக்கவும். தோள் மட்டத்துக்கு வந்ததும், உள்ளங்கையை கீழ் நோக்கி திருப்பி, மிக மிக மிக மெதுவாக கையை கீழே இறக்கி ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.
இடுப்பு நன்கு வளைவதால் இறுக்கங்கள் நீங்கி, நெகிழ்வுத்தன்மை அடைகிறது. இடுப்பு, வயிறு பகுதியில் தேவையற்ற சதைகள் குறைகின்றன.
நாளை – பாதி ‘வீல்’