

யோகாசனம் பற்றி ஓரளவு தெரிந்தவர்கள்கூட ‘பத்மாசனம்’ என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பார்கள். சிவன், கவுதம புத்தர், மகாவீரர் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிலைகளையும் பார்த்திருக்கலாம். இந்த ஆசனம் பிரசித்தி பெற்றது மட்டுமின்றி, பலன் தருவதும்கூட.
பத்மாசனத்தில் எப்படி அமர்வது என பார்க்கலாம். கால்களை நீட்டி, நிமிர்ந்து உட்காரவும். முதுகுத் தண்டு நேராக இருக்கட்டும். கைகளின் உதவியுடன், முதலில் வலது காலை மடித்து, இடது தொடை மீது வைக்கவும். வலது கால் பாதம் நன்கு மேல் நோக்கியும், வயிற்றை ஒட்டியும் இருக்கட்டும்.
அடுத்து, மெல்ல கைகளின் உதவியுடன் இடது காலை மடித்து, வலது தொடை மீது வைக்கவும். இடது கால் பாதம் நன்கு மேல் நோக்கியும், வயிற்றை ஒட்டியும் இருக்கட்டும்.
இரு கால்களையும் இவ்வாறு குறுக்கு மறுக்காக தொடைகளின் மீது வைத்த பிறகு, கைகளை முட்டிகள் மீது ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும். கைகளில் சின்முத்திரை (கட்டை விரல், ஆள்காட்டி விரல் நுனிகள் சேர்த்தும், மற்ற விரல்கள் நீட்டியும்) வைத்துக் கொள்ளவும். நன்கு நிமிர்ந்து உட்காரவும். 10 முறை ஆழ்ந்து மூச்சை இழுத்து, நிதானமாக வெளியே விடவும்.
இந்த ஆசனத்தில் அமரும்போது, தாமரைப் பூவின் இதழ்கள் போல, நம் கால்கள் விரிந்திருப்பதால் பத்மாசனம் என்ற பெயர். (‘பத்ம’ என்றால் தாமரை). இதன் பலன்கள், யார் செய்யக் கூடாது என தொடர்ந்து பார்க்கலாம்.
நாளை – பாதி கிணறு தாண்டலாமா?