மார்செல்லோ மால்பிகி 10

மார்செல்லோ மால்பிகி 10
Updated on
2 min read

இத்தாலியில் பிறந்த உயிரியலாளரும் மருத்துவரும் உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்வதற்கு அடித்தளமிட்டவருமான மார்செல்லோ மால்பிகி (Marcello Malpighi) பிறந்த தினம் இன்று (மார்ச் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

* இத்தாலியின் தலைநகர் பொலோனியா அருகில் உள்ள க்ரிவால்கோர் என்ற ஊரில் பிறந்தார் (1628). இவரது தந்தை தன் மகன் மொழி இலக்கண இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்று விரும்பினார். மகனின் ஆர்வம் அறிவியலில் இருந்தது. பள்ளிக் கல்வி முடிந்த பின் பொலோனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

* இவரது 21-வது வயதில் பெற்றோர் இறந்தனர். ஆனாலும் மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்து, 1653-ல் தந்தையின் ஆசைப்படி தத்துவமும் தனது ஆர்வப்படி மருத்துவத்திலும் முனைவர் பட்டம் பெற்றார். 1655-ல் அதே பல்கலைக்கழகத்தில் தர்க்கவியல் விரிவுரையாளராக சேர்ந்தார்.

* அடுத்த ஆண்டே பைசா நகரக் கல்லூரியில் கோட்பாட்டு மருத்துவத்தில் பேராசிரியராக பணியில் அமர்ந்தார். அங்கு அவர் பிரபல கணித வல்லுநரும் இயற்கையியலாளருமான ஜியோவானி போரேலியைச் சந்தித்தார். அவரது பரிந்துரையால் மெசினா (Messina) மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறை பேராசிரியராகப் பதவியேற்றார்.

* பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டே மருத்துவமும் பார்த்துவந்தார். ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். சுவை அரும்புகள், மூளையின் அமைப்பு, பார்வை நரம்பு, கொழுப்பு தங்கும் இடங்கள், ரத்தத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், உடற்கூறியல், உடல் இயங்கியல் குறித்தும் ஆராய்ந்தார்.

* குடும்பப் பொறுப்புகள் மற்றும் உடல்நிலை பாதிப்பு ஆகிய காரணங்களால் 1667-ல் மீண்டும் பொலோனியா திரும்பினார். பொலோனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்தார். மைக்ரோஸ்கோப்கள் மூலம் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடல்கூறு கட்டமைப்புகளை ஆராய்ந்தார்.

* நுரையீரல் செல்களை சோதனை செய்து பார்த்து அங்கு சிறிய மெல்லிய சுவர் கொண்ட ரத்த நுண் குழாய்கள் இருப்பதைக் கண்டார். இவைதான் தமனிகளையும் சிரைகளையும் இணைக்கின்றன என்பதையும் அவை ரத்தத்தை இதயத்தை நோக்கிச் செலுத்துகின்றன என்பதையும் அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் இவைதான் நிகழ்த்துகின்றன என்பதையும் ஆராய்ந்தறிந்து கூறினார்.

* தன் கண்டுபிடிப்புகளைக் குறித்து ஏராளமான கட்டுரைகளையும் வெளியிட்டார். நூல்களையும் எழுதினார். இவரது ஆராய்ச்சிகளின் முடிவுகள் அறிவியல் வரலாற்றில் முக்கியமான கண்டுபிடிப்புகளாகத் திகழ்ந்தன. இவர் கண்டறிந்த பல்வேறு விஷயங்கள் நுண்ணியல் உடற்கூறியல் (microscopic anotomy) அறிவியலுக்கு அடிப்படையாக அமைந்தன.

* அதன் பிறகு கண்டறியப்பட்ட பல உடல் உள்ளுறுப்புகள் மால்பிஜியன் துகள்கள், மால்பிஜியன் அடுக்கு, மால்பிஜியன் குழல்கள் என இவரது பெயரால் அடையாளம் காணப்பட்டன. சிறுநீரகம், மலக்குழாய் ஆகியவற்றில் உள்ள உறுப்புகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகளை விளக்கினார்.

* கருவியல், தாவர உடற்கூறியல், திசு அமைப்பியல், ஒப்பீட்டு உடற்கூறியலின் முன்னோடி எனப் போற்றப்பட்டார். ஒரு தீ விபத்தில் இவரது வீடு எரிந்தது. இதனால், சோதனைக் கருவிகள், மைக்ராஸ்கோப்புகள், இவரது ஆய்வுக் கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் அனைத்தும் எரிந்துவிட்டன.

* இந்த விபத்து இவரது எதிர்ப்பாளர்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்தனை சோதனைகளையும் மீறித் தனது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றார். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேல் அறிவியல் ஆய்வில் ஈடுபட்டு முக்கியத்துவம் வாய்ந்த பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மார்செல்லோ மால்பிகி 1694-ம் ஆண்டு நவம்பர் மாதம் 66-வது வயதில் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in