

டிவி பார்க்கும்போது, கால் நீட்டி உட்கார்ந்து கொள்கிறோமே, அதுவே ஒரு ஆசனம்தான். பெயர் தண்டாசனம் என்று தொடக்கத்தில் பார்த்தோம். அதை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
உட்கார்ந்து செய்யக்கூடிய அனைத்து வகையான ஆசனங்களுக்கும் அடிப்படையானது தண்டாசனம். கால்களை நேராக நீட்டி, நிமிர்ந்து உட்காரவும். உடம்புக்கு அருகே கைகள், தரையில் பதிந்தபடி இருக்கட்டும்.
சுவரை ஒட்டி உட்கார்ந்திருப்பது போல கருதிக் கொண்டு, நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் தொடங்கி கழுத்து, தலை வரை நேராக நிமிர்ந்து இருக்கட்டும்.
உடம்பு, கை, கால்கள் நேராக இருக்க வேண்டுமே தவிர, விறைப்பு கூடாது. ரிலாக்ஸாக இருக்கட்டும். ஆழ்ந்து மூச்சை இழுத்து, நிதானமாக வெளியே விடுங்கள். ‘தண்டம்’ என்றால் குச்சி. முதுகுத் தண்டு ஒரு குச்சி போல நேராக இருப்பதால் இந்த ஆசனத்துக்கு இப்பெயர்.
நிறைவாக, கால் விரல்களை முன்னோக்கி நீட்டித்தும், உடம்பை நோக்கி உள்பக்கமாக இழுத்தும் மாறி மாறி 5 முறை செய்யலாம். இது விரல்களுக்கான பயிற்சியாக அமையும்.
கால்கள் முழுமையாக நீட்டப்பட்டு, முதுகு கூன்போடாமல் நிமிர்ந்து இருப்பதால், கை, கால்கள் உட்பட உடம்பு முழுவதும் உறுதியடைகின்றன. ஒருபக்கமாக சாய்ந்து உட்கார்வது, நிற்பது போன்றவற்றால் நம் உடலின் நிலையில் (Posture) ஏற்படக்கூடிய மாற்றங்கள் இந்த ஆசனத்தால் சரியாகின்றன. தொடர்ந்து மற்ற ஆசனங்களை எளிதாக செய்வதற்கும், ஒரே ஆசனத்தில் சிரமமின்றி இருப்பதற்கும் உதவுகிறது. மன அமைதிக்கு உதவுகிறது.
நாளை – ‘ஏன் மரம் மாதிரி நிக்கிறீங்க?’