

பரிவிருத்த பார்ஸ்வ கோணாசனம்நேராக நிமிர்ந்து நிற்கவும். கால்களை நன்கு அகலமாக வைத்துக் கொள்ளவும். வலது காலை பக்கவாட்டில் திருப்பி வைக்கவும். இடது கால் அந்த நிலையிலேயே இருக்கட்டும். மெதுவாக, கால் விரல்களும், முட்டியும் நேராக வரும் அளவுக்கு வலது கால் முட்டியை நன்கு மடிக்கவும். இடது கால் முட்டி நேராக இருக்கட்டும்.
மெதுவாக மூச்சை இழுத்தபடியே, இரு கைகளையும் தோள் உயரத்துக்கு உயர்த்தவும். வலது பக்கமாக திரும்பவும். மெதுவாக முன்னால் குனிந்து, இடது கை முட்டியை, வலது கால் முட்டி மீது வைத்துக் கொள்ளவும். குறிப்பாக, கை முட்டியை கால் மீது லேசாக ஊன்றுவது அவசியம். அழுத்தி ஊன்றினால், கை, கால் முட்டிகளில் வலி ஏற்படக்கூடும்.
அடுத்து, கழுத்தை வலது பக்கமாக திருப்பவும். வலது கையை மெல்ல உயர்த்தி, வலது காதை ஒட்டி கொண்டு வரவும். கை முட்டி மடங்காமல் நேராக, காதை ஒட்டி இருக்கட்டும். பார்வை பக்கவாட்டில் இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்கட்டும். இதே நிலையில் 1-10 எண்ணவும். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இதேபோல இடது பக்கம் செய்யவும். கணுக்கால், முதுகு, மார்புப் பகுதிகளை இந்த ஆசனம் உறுதியாக்குகிறது. நெஞ்சு எரிச்சல் சரியாகிறது. செரிமானம் சீராகிறது. இதற்கு முன்பு பார்த்த பார்ஸ்வ கோணாசனத்தை நன்கு பேலன்ஸுடன் செய்யப் பழகிய பிறகு, பரிவிருத்த பார்ஸ்வ கோணாசனம் செய்யலாம்.
நாளை – ‘தண்டம்’ ஆக இருக்கலாமா?