தினம் தினம் யோகா 17: பரிவிருத்த திரிகோணாசனம்

தினம் தினம் யோகா 17: பரிவிருத்த திரிகோணாசனம்

Published on

முக்கோண வடிவில் கால்களை வைத்து செய்யும் திரிகோணாசனத்தை பார்த்தோம். அதில் லேசான மாற்றம் கொண்டது பரிவிருத்த திரிகோணாசனம்.

கால்களை அகலமாக வைத்துக் கொள்ளவும். வலது பாதத்தை மட்டும் பக்கவாட்டில் திருப்பி வைத்துக் கொள்ளவும். கைகளை தோள்பட்டை வரை உயர்த்தவும். நன்கு ஒரு முறை மூச்சை இழுக்கவும். மூச்சை விட்டபடியே வலது பக்கம் நன்கு திரும்பவும். அதாவது, வலது பாதமும் உங்கள் கண் பார்வையும் ஒரே திசை நோக்கி இருக்கட்டும். மீண்டும் நன்கு மூச்சை இழுக்கவும். மூச்சை விட்டபடியே முன்பக்கம் நன்கு குனிந்து, இடது கையால் வலது காலை தொட முயற்சிக்கவும். அல்லது, முட்டிக்கு கீழே காலில் வசதியான இடத்தை தொடவும். வலது கையை மேல்நோக்கி உயர்த்தவும். கழுத்தை நன்கு வளைத்து, வலது கையை பார்க்க முயற்சிக்கவும். சுவாசம் சீராக இருக்கட்டும். இதே நிலையில் 1-10 எண்ணவும். மெல்ல, மூச்சை இழுத்தபடி இரு கைகளையும் தோள்பட்டை உயரத்துக்கு கொண்டு வந்து கீழே இறக்கவும். கால்களை சேர்த்துக் கொள்ளவும்.

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, இதேபோல இடது பக்கம் செய்ய வேண்டும்.

வயிறு, இடுப்பு பகுதிகள் உறுதியாகின்றன. வயிறு, இடுப்பு சதை குறைகிறது. முதுகு நன்கு வளைவதால், நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது. வயிறு பகுதி உள் உறுப்புகளின் இயக்கம் சீராகிறது. மன அழுத்தம் சரியாகிறது. மைக்ரைன் தலைவலி, அதிக முட்டி வலி, கழுத்து வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

நாளை – செரிமானம் சரியாகும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in