

நேராக நின்று, கால்களை இயன்ற வரை அகலமாக வைத்துக் கொள்ளவும். இரு பாதங்களையும் வெளிப்பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை இழுத்தபடி, இரு கைகளையும் பக்கவாட்டில் தோள் உயரத்தில் வைத்துக் கொள்ளவும். 1-10 எண்ணவும். கால்களை சேர்த்துக் கொள்ளவும். கைகளையும் ரிலாக்ஸாக கீழே விடவும்.
அடுத்து, திரிகோணாசனத்துக்கு தயாராகலாம்.
கால்களை அகலமாக வைத்துக் கொள்ளவும். வலது பாதத்தை மட்டும் பக்கவாட்டில் திருப்பி வைக்கவும். இடது பாதம் நேராகவே இருக்கட்டும். மெல்ல மூச்சை இழுத்தபடி, வலது பக்கமாக சாய்ந்து வலது கையால், வலது கால் விரல்களை தொடுவதற்கு முயற்சிக்கவும். அல்லது, முட்டிக்கு கீழே காலில் வசதியான இடத்தை தொடவும்.
முக்கியமாக, முன்பக்கம் குனியக் கூடாது. இடுப்பு பக்கவாட்டில்தான் சாய்ந்திருக்க வேண்டும். மெதுவாக இடது கையை மேல்நோக்கி உயர்த்துங்கள். கழுத்தை நன்றாக திருப்பி, இடது கை நோக்கிய பார்வை இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்கட்டும். இதே நிலையில் 1-10 எண்ணவும். மெதுவாக, மூச்சை இழுத்தபடி நேராக நிமிர்ந்து நிற்கவும். கை, கால்களை ரிலாக்ஸ் செய்துகொள்ளவும். அடுத்து, இதேபோல இடது பக்கம் செய்யவும்.
கை, கால்கள் முக்கோண வடிவில் இருப்பதால் ‘திரி-கோணாசனம்’ என்ற பெயர்.
வயிறு, இடுப்பு பகுதிகள் உறுதியாகின்றன. முதுகுப் பகுதியில் விறைப்புத் தன்மை மறைந்து நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது. உடலின் பேலன்ஸ் அதிகரிக்கிறது. இடுப்பு சதை குறைகிறது. அதிகப்படியான முதுகு வலி, வெர்டிகோ பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்,
நாளை – ‘பெல்லி’யை குறைக்கலாம்!