

காகால்களை நீட்டி, நேராக நிமிர்ந்து உட்காரவும். இரு கால்களையும் சற்று மடித்துக் கொள்ளவும். இரு கால் முட்டிகளின் கீழ் பகுதியையும் கைகளால் பிடித்துக் கொள்ளவும்.
இப்போது, லேசாக பின்பக்கமாக சாய்ந்து, இடது காலை மட்டும் நேராக நீட்டவும். வலது கால் மடித்த நிலையிலேயே இருக்கட்டும். 1-5 வரை எண்ணவும். இடது காலை கீழே இறக்கிவிட்டு, அதேபோல, வலது காலை உயர்த்தி 1-5 வரை எண்ணவும். வலது காலை இறக்கிவிட்டு, ஒரு முறை மூச்சை இழுத்து விடவும்.
அடுத்ததாக, லேசாக பின்பக்கமாக சாய்ந்து இரு கால்களையும் சேர்த்து நேராக நீட்டவும். 1-10 வரை எண்ணவும். ஓரளவு பேலன்ஸ் கிடைத்ததும், முட்டிகளுக்கு கீழ் வைத்துள்ள கைகளை மெதுவாக விடுவித்து, கால் விரல்களை நோக்கி நீட்டிக்கொள்ளவும். இந்த நிலையில் 1-10 வரை எண்ணவும்.
பின்பக்கமாக சாய்ந்துள்ள முதுகு மற்றும் உயர்த்தியிருக்கும் கால்களை பார்க்கும்போது, படகு போலவே இருக்கும். அதனால்தான், இந்த ஆசனத்துக்கு ‘நவாசனம்’ என்று பெயர்.
இதற்கு முன்பு பார்த்த ‘அர்த்த நவாசன’த்தைவிட, இதில் கால்கள் சற்று வயிற்றை நெருங்கியும், நன்கு உயர்ந்தும் காணப்படும். இதனால், வயிறு, முதுகுப் பகுதி உறுதியாகிறது. தேவையற்ற சதை குறைகிறது. புராஸ்டேட், குடல், சிறுநீரகங்களின் செயல்பாடு சீராகிறது. அதிக முதுகு வலி உள்ளவர்கள் தவிர்க்கலாம்.
நாளை – வித்தியாசமான கோணத்தில்..