

குறள் கதை 83: பொருள்
1994-ல் தினமணி இதழில் ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. காந்தி குல்லா தலையில், வெள்ளை ஜிப்பா, குர்தா மீது நேரு போட்டிருக்கும் வெய்ஸ்ட் கோட் -சோகமே உருவாக ஒரு ஆறடி மனிதர் படம் அது.
அவர்தான் இரண்டு முறை இடைக்காலப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குல்சாரிலால் நந்தா. 1964-ல் நேரு இறந்த பின்னர் லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்பதற்கு இடைப்பட்ட காலத்திலும், சாஸ்திரி இறந்த பின்னர் இந்திரா பிரதமராவதற்கு முன்னரும் பிரதம மந்திரியாக இருந்தவர்.
பாரத ரத்னா பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வாழ்ந்தவர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இருந்த பஞ்சாப்பில் பிறந்தவர்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் பிரச்சினைக்காக ஆய்வு செய்து பட்டம் பெற்றவர். பம்பாய் தேசியக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் சத்யாகிரகம் செய்து இரண்டு முறை சிறைவாசம் அனுபவித்தவர்.
கஸ்தூரிபாய் நினைவு அறக்கட்டளைக்கு அறங்காவலராகவும் இருந்தவர்.
மத்திய அரசில் திட்டக்கமிஷன் துணைத் தலைவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சர் என்று பல பொறுப்புகள் வகித்தவர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு கொடுத்த ரூ.500/- பென்சனில் கடைசிக் காலத்தில் வாழ்ந்தார்.
6 மாதமாக வீட்டு வாடகை தரவில்லை என்பதற்காக அவரது பெட்டிப் படுக்கைகள் இதர சாமான்களைத் தெருவில் எடுத்து வைத்துவிட்டு வீட்டைப் பூட்டி சாவி எடுத்துப் போய்விட்டார்கள். அவ்வளவு பெரிய மனிதர் அனாதை போல் நின்ற புகைப்படம்தான் அது. என்ன சத்தியத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து என்னதான் நேர்மையானவன் என்று பெயரெடுத்தாலும் பொருள் இல்லாதவர்கள் இவ்வுலகில் செல்லாக்காசுதான்.
‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை- பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு!’
என்கிறார் வள்ளுவர்.
---
குறள் கதை 84: தாய்
ராஜலட்சுமி பார்த்தசாரதி ஆளுமை மிக்க ஒரு பெண்மணி. இன்றைக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேலான மாணவ மாணவிகள் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியின் பல கிளைகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1925-ல் சென்னையில் பிறந்த ராஜலட்சுமியின் அப்பா வழி தாத்தா திவான்பகதூர் டி.ரங்காச்சாரி இந்திய விடுதலைப் போராளி. செயின் ஜான்ஸ் பள்ளி, ஹோலி கிராஸ் காலேஜில் படிப்பை முடித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியலில் பட்டம் பெற்றவர் ராஜலட்சுமி.
இந்து பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவார். திரைப்பட விமர்சனங்களும் எழுதுவார். 1965-ல் திரைப்படத்தில் நான் அறிமுகமான நாளிலிருந்து 1979 வரை சுமார் 100 படங்களில் நடித்துள்ளேன். ஒன்றில் கூட என் நடிப்பைப் பாராட்டி அந்த அம்மையார் ஒரு வரி எழுதியதாக நினைவில்லை. அவர் பாராட்டைப் பெற எப்படி நடிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை.
40 ஆண்டுகளில் 190 படங்களைத் தாண்டி நடித்து முடித்தது போதும் என்று ஒதுங்கி எழுத்து, பேச்சு என்று வேறு துறைக்கு மாறினேன்.
2009-ல் எனது 67 வயதில், ஓராண்டு தயாரிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பன் பாடல்களில் முதலில் 1000 பாடல்களைத் தேர்வு செய்து - பின் அதில் மிகச்சிறந்த 100 பாடல்களை மனப்பாடம் செய்து, கம்பன் வரிகளுக்கிடையே பாமரனும் புரிந்துகொள்ளும் பேச்சு மொழியில் 6000 பேர் மாணவிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் முன்னர் ஒரு சிறு துண்டுக் குறிப்புகூட வைத்துக் கொள்ளாமல், ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் 2 மணி 20 நிமிடம் பேசி முடித்தேன். அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிவிடி வடிவத்தில் வெளியே வந்தது.
பாரதிய வித்யாபவன் அரங்கில் அதன் உறுப்பினர்களுக்கு ராமாயணம் உரையைத் திரையிட்டேன். தெருவில் 2 திரை வைத்து அதிலும் படத்தைக் காட்டினேன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து பார்த்தால் சுமார் 20 ஆட்டோ ரிக்சாக்காரர்கள் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்நிகழ்ச்சிக்கு ராஜலட்சுமி அம்மாவும் வந்தார். என்னைப் பார்த்ததும், ‘டேய் சிவா! அட்லாண்டிக் பெருங்கடலை விட ஆழமானது ராமாயணம். இதற்குள் எப்படி குதித்து நீந்தினாய். யார் உனக்குத் தமிழாசிரியர்?’ என்று கேட்டார்.
‘யாருமில்லை- நானே தயார் செய்தேன்!’ என்றேன். ‘பள்ளிக் குழந்தைகளுக்கு காட்ட டிவிடி கொடு’ என்றார். 50 டிவிடிக்களை அனுப்பி வைத்தேன்.
அடுத்த 7 ஆண்டுகளில் 4 வருட ஆய்வுக்குப் பிறகு அதே கூட்டத்தில் மகாபாரதம் உரை நிகழ்த்தினேன். அதுவும் இன்று யூ டியூபில் கிடைக்கிறது. இரண்டு உரைகளையும் பார்த்த அந்த மூதாட்டி எழுதியது:
‘‘உன் ராமாயண உரையைக் கேட்டபோது நீ நவீன கம்பன் என்று நினைத்தேன். இப்போது மகாபாரதமும் பார்த்து பிரமித்தேன். தமிழ் மக்களுக்கு மகாபாரதத்தை அறிமுகப்படுத்திய மூதறிஞர் ராஜாஜியின் ஆன்மாவும், வியாசர் ஆன்மாவும் உனக்குள் புகுந்து இந்த உரை நிகழ்த்தச் செய்துள்ளது. உனது இந்த உரைகள் எல்லாப் பள்ளிகளிலும் துணைப் பாடமாக வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். உன்னை என் மூன்றாவது மகனாக தத்து எடுத்துக் கொள்கிறேன். ஸ்ரீராமனுஜர் போல நீ 120 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ வாழ்த்துகிறேன்!’’
ஒதுங்கிய தாய் இறுக அணைத்தால் எப்படி நெகிழ்வாக இருக்கும். அதை இந்த வரிகளைப் படிக்கும் போது உணர்ந்தேன்.
‘அரியவற்றுள் எல்லாம் அரிதே -பெரியாரைப்
பேணித் தமராய்க் கொளல்’
---
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in