

உலகப் புகழ்பெற்ற வேதியியலாளர், இறையியல் சிந்தனையாளரான ஜோசப் பிரீஸ்லே (Joseph Priestley) பிறந்த தினம் இன்று (மார்ச் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் பிர்ஸ்டல் நகரில் (1733) பிறந்தார். தாய் வழி தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தார். அறிவுக்கூர்மை மிக்க இவர் கணிதம், தர்க்கவியல், இயற்கை தத்துவம் ஆகியவற்றை கற்றார். பல தேவாலயங்களில் போதகராகப் பணிபுரிந்தார். பேச்சுத் திறன் குறைபாடு காரணமாக அதிக காலம் அதில் நீடிக்க முடியவில்லை.
* நான்ட்விச் நகரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். லத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார். வாரிங்டன் அகாடமியில் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். மொழிகள், நவீன வரலாறு, சட்டம், உடற்கூறியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் கற்பித்தார்.
* ‘தி ருடிமென்ட்ஸ் ஆஃப் இங்கிலீஷ் கிராமர்’, ‘எ கோர்ஸ் ஆஃப் லெக்சர்ஸ் ஆன் தி தியரி ஆஃப் லாங்வேஜஸ்‘ ஆகிய 2 நூல்களை எழுதினார். இவை ஆங்கிலம் கற்பிப்பதற்கான வழிகாட்டி நூல்களாகக் கருதப்பட்டன.
* இறையியல், வரலாறு, கல்வி, தத்துவம், மொழிகள், அழகியல், அரசியல் குறித்தும் ஏராளமான புத்தகங்கள், குறிப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்வித் துறையில் இவரது பங்களிப்பை அங்கீகரித்து எடின்பர்க் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இங்குதான் இவரது அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடங்கின.
* வாயுக்கள், மின்சாரம் குறித்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். கார்பன் டை ஆக்சைடு பற்றிய இவரது ஆய்வுகள் புகழ்பெற்றவை. நண்பர்களின் ஆலோசனையுடன் ‘ஹிஸ்டரி ஆஃப் எலெக்ட்ரிசிட்டி’ என்ற நூலை எழுதினார். பின்னர் ‘ஹிஸ்டரி ஆஃப் ஆப்டிக்ஸ்’ என்ற நூலை வெளியிட்டார்.
* வாயுக்களை பரிசோதித்து பல்வேறு வகையான வாயுக்களைப் பிரித்து எடுத்தார். நைட்ரஜன், ஹைட்ரஜன் குளோரைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, ஆக்சிஜன் உள்ளிட்ட 10 வாயுக்களைக் கண்டறிந்தார். இவருக்கு முன்பாகவே கார்ல் வில்ஹெம் ஷீலே என்ற விஞ்ஞானி ஆக்சிஜனை கண்டறிந்தார் என்று பின்னர் கூறப்பட்டது.
* சோடாவைக் கண்டறிந்தவரும் இவரே. வாயுக்கள் தொடர்பான தனது கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களை 1775-ல் ‘ஆன் அக்கவுன்ட் ஆஃப் ஃபர்தர் டிஸ்கவரீஸ் இன் ஏர்’ என்ற கட்டுரையில் வெளியிட்டார்.
* தனிம அமிலங்கள், ஒளிச்சேர்க்கை குறித்தும் ஆராய்ந்தார். சுவாச செயல்பாட்டில் ரத்தத்தின் பங்கை வரையறுத்தார். வாயு வேதியி யலின் சோதனை நுட்பங்களை கண்டறிந்தார். ஆராய்ச்சிகள் வாயி லாக, இங்கிலாந்து மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் பிரபலமானார்.
* பாஸ்டன், பிலெடல்பியா, ஸ்டாக்ஹோம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் உள்ள அறிவியல் அமைப்புகளின் கவுரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுத்தறிவு கிறிஸ்தவம், அரசுக் கட்டுப்பாடற்ற பொருளாதாரம் உள்ளிட்ட இவரது கோட்பாடுகளால் பொதுமக்கள் மற்றும் அரசின் கோபத்துக்கு ஆளானார்.
* இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கும்பல் ஒன்று இவரது வீட்டை 1791-ல் ஆவேசமாக தாக்கியது. அவர்களிடம் இருந்து தப்பி, லண்டனில் குடியேறினார். 1794-ல் அமெரிக்கா சென்றவர், இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். தாராளமய அரசியல் கருத்தியல்வாதியாகவும் முத்திரை பதித்த ஜோசப் ப்ரீஸ்லே 71-வது வயதில் (1804) மறைந்தார்.